"அம்மா வந்தாள் ".
.தி ஜானகிராமன் எழுதியது .
ஐந்திணைப் பதிப்பகம் வெளியீடு.
சாகித்திய அகாடமி விருது பெற்ற ஜானகிராமன் அவர்கள் முதலில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி தொடங்கி ,அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் .
கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர் .1943-ல் எழுதத் தொடங்கி நாவல்கள் சிறுகதைகள் நாடகங்கள் பயண நூல்கள் ஆகியவற்றை எழுதினார் .நடந்தாய் வாழி காவேரி பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாக கருதப்படுகிறது .
ஜப்பான் அமெரிக்கா பிரிட்டன் ஐரோப்பிய நாடுகளில் ஒலிபரப்பாளர் என்ற முறையிலும் எழுத்தாளர் என்ற முறையிலும் பிரயாணம் செய்து இருக்கிறார் .
ஜப்பான் பயண அனுபவத்தை உதயசூரியன் என்ற நூலில் வர்ணித்திருக்கிறார் .
"கருங்கடலும் கலைக்கடலும் "என்ற இந்த நூல் பண்பாட்டுப் பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அவர் ரோமானிய வுக்கும்,
செகோஸ்லாவாகியா வுக்கு்ம் சென்று வந்த பயண அனுபவத்தை சுவைபட விவரிக்கிறது.
1943இல் எழுதத் தொடங்கிய தி ஜானகிராமனின் மோகமுள் அம்மா வந்தாள் மரப்பசு உள்ளிட்ட 9 நாவல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மூன்று நாடகங்கள் பயண நூல்கள் ஆகியவற்றை எழுதினார் . மோகமுள்,நாலு வேலி நிலம் ஆகியான படமாக்கப்பட்டுள்ளன .மோகமுள் மரப்பசு ,அம்மா வந்தாள் ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
1929இல் சக்தி வைத்தியம் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
******
முன்னுரையில் சுகுமாரன் அவர்கள் கீழ்க்கண்டவாறு சுருக்கமாக குறிப்பிடுகிறார்:
ஆசாரங்களையும்
,விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு .அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது " அம்மா வந்தாள்" .
************
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நாவலை நான் படித்தேன். படித்தபோது ஆடிப்போய்விட்டேன். இப்படிப்பட்ட நாவலை எழுத முடியுமா என்று. கல்லூரியில் படிக்கும் பொழுது கல்லூரி நூலகத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப புத்தகங்கள்தான் அதிகமாக இருக்கும். கதை புத்தகங்கள் இருக்காது .எனது பக்கத்து அறை நண்பன் ஒரு புத்தகம் வைத்திருந்தான் .அந்த புத்தகத்தை வாசித்த போது தான் இந்த கதையும் அந்த கதையும் ஒன்றாக இருக்குமோ என்கிற அளவிலேயே இருந்தது.
இத்தாலி நாவலாசிரியர் கிரேசியா டெலடாவின் அன்னை தாக்கம் அம்மா வந்தாளில் இருக்கும்.
தி.ஜா.அவர்களைப் பொறுத்த அளவில் கற்பனையை ,கதையை மெருகூட்டுவதற்காக தான் அவர் உபயோகப்படுத்திக் கொண்டார். மீதி கதாபாத்திரங்களையும் அல்லது கதையை உருவாக்கும் பொழுது நடந்த கதைதான் அதிகமாக இருக்கும்; உண்மையாக இருக்கும் ;சத்தியமாக இருக்கும்.
அம்மா வந்தாள் தாக்கமே எனது மனதில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜீரணிக்கவே முடியவில்லை .ஒதுக்கி,ஒதுங்கி விட முடியவில்லை .ஒதுக்கி விடவும் முடியவில்லை .வரிக்கு வரி என் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்ட பாத்திரங்கள் ,நாவல் பரிமாணங்கள் ஆட்கொண்டிருந்தன.
அம்மா வந்தாள் கதாபாத்திர நாயகியை நான் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது .பிரமித்துப் போனேன் .அவரை எழுதியது அப்பழுக்கு இல்லாமல் அந்த பெண்மணிக்கும் அப்படியே பொருந்தி வந்தது .அவருக்கு ஒரே மகன் தான் .அந்த மகனும் விபரம் அறிந்தவன் தான் .
அந்த தாய் சில வருடங்களுக்கு முன் இறைவனடி சேர்ந்துவிட்டார் .இப்பொழுது அம்மாவை படிக்கும் பொழுது அந்தப் பெண்மணியின் நினைவு தான் வருகிறது எனக்கும்.
இப்படியெல்லாமா ஒரு மனுஷி இருப்பா ? என்று கதையை முதன்முதலில் படிப்பவர்கள் அதிர்ச்சியுற்று,
யாரிடமாவது பகிரும்போது நிஜத்தில் அப்படி இருக்கிற அல்லது இருந்த ஒருவரையாவது அடையாளம் சொல்வார்கள். அது என் வரையில் நிஜமாகி போனது.
இந்த கதை வந்த போது இவருக்கு நிறைய அவப்பெயர் .ஏராளமான எழுத்தாளர் பெருமக்கள் தூற்றினார்கள் என்பது உண்மை.
அலங்காரத்தம்மாள் நல்ல மனைவி. அதை விட அப்புவுக்கு நல்ல அம்மா; அழகான அம்மா ;அம்சமான அம்மா ;ராணி போன்ற அம்மாவாக அவள் அப்புவுக்கு காட்சி தருகிறாள்.
" நீ ஒரு மகா ஒழுக்கமானவனாய் வேத வித்துவாய் வளர வேண்டுமென நினைத்தேன்.. ஆனால் நீ என்னைப் போலவேதான் இருக்கிறாய் ..!" என்று அலங்காரத்தம்மா அப்புவைப் பார்த்து கிளைமாக்ஸில் சொல்வதுதான் கதையின் ஹை லைட்.
தன்னைப் பற்றி மகன் புரிந்திருக்கிறான் என்பதை அறிந்து, தான் புரிந்து கொண்டதை அவனிடம் வெளிப்படுத்தும் இடமாக "அம்மா பிடிக்கல்லேனு அப்படியே இருந்துர மாட்டியே" என்ற நெகிழ்வில் ஜானகிராமன்
நம்மை பிரமிக்க வைப்பார்.
பெண்களின் மனதை அறிந்த ,மனோபாவம் முழுமையாக அறிந்தவர் தான்,தி.ஜா. அவரைத் தவிர வேறு யார் இருக்கமுடியும்,அவர் ஒருவர்தான் விரசம் இல்லாமல் அம்மா வந்தாள் படைக்க முடியும்.
விரசமாக தென்படாத வகையில் ஆசிரியர் கதையை எழுதி இருப்பது பாராட்டத்தக்கது .விதி மீறலை,நெறி மீறலை , ,தார்மீகம் மீறலை எல்லாவற்றையும் நெறிப்படுத்தி எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
சிலர் அம்மா வந்தாள் போல முயன்று தோற்றுப்போனதையும் நான் அறிவேன். அவ்வளவு தைரியமாக அழகாக தி.ஜா. போல அம்மாவை படைக்க இனி ஒரு எழுத்தாளன் பிறந்துதான் வரவேண்டும்.
*அம்மாவை நேசிக்கலாம்.*
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக