திருமந்திரம் - பாடல் #1035: நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)
முத்திநற் சோதி முழுச்சுட ராயவன்
கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்றற நாடிப் பரந்தொளி யூடுபோய்ச்
செற்றற்று இருந்தவர் சேர்ந்திருந் தாரே.
விளக்கம்:
பாடல் #1034 இல் உள்ளபடி சகஸ்ரதள ஜோதியோடு கலந்த பின் அங்கே முழுமையான நல்ல சுடரொளியாக இருக்கும் பரம்பொருள் ஆட்கொள்கிறது. உலக ஞானங்கள் அனைத்தையும் கற்று அறிந்திருந்தாலும் கூட அதைவிட மேலான இந்த இறை ஞானத்தை உணர்ந்தவர்களின் எண்ணத்துள்ளே அவன் இருப்பான். அந்த எண்ணங்களையும் விட்டு விலகி எங்கும் பரவியிருக்கும் இறைவனின் பேரொளியை விரும்பி சென்று அடைந்து அங்கே இறைவனோடு பேரின்பத்தில் சேர்ந்து இருப்பார்கள்.
கருத்து: நவகுண்ட யாகத்தை முறைப்படி செய்த சாதகர்கள் தமது மூலாதாரத்திலுள்ள அக்னியை எழுப்பி சகஸ்ரதளத்தில் இருக்கும் இறை சக்தியோடு சேர்த்து விட்டால் இறையருளால் அனைத்து எண்ணங்களும் அற்ற நிலையை அடைந்து இறைவனோடு ஒன்றாகச் சேர்ந்து இருப்பார்கள்.
மனமார்ந்த நன்றிகள் :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக