13 பிப்., 2021

நூல் நயம் : கருங்கடலும் கலைக்கடலும் : தி. ஜானகிராமன்

புத்தகம் : கருங்கடலும் கலைக்கடலும் 
ஆசிரியர் : தி. ஜானகிராமன் 
வெளியீடு : காலச்சுவடு 
விலை : Rs.190
பக்கங்கள் : 159

பயண நூல் எழுதுவது அத்துணை எளிதானதல்ல.நம்மை சுவாரசியப் படுத்தும் காரணி இல்லையென்றால் அது நாட்குறிப்பு போலாகிவிடும்.இதனாலேயே பயணநூல்கள் அவ்வளவாக நேசிக்கப்படுவதில்லை.ஆனால்
தி. ஜா வின் பயண நூல்கள் முற்றிலும் வேறுபட்டவை.அவர் தனக்கே உரிய பாணியில் அந்த நாடுகளை நம்மைக் காணவைக்கிறார். 

நான் சமீபத்தில் படித்த  அவரின் உதயசூரியன் என்னை ஜப்பானிற்கு பயணிக்க வைத்தது.அடுத்து கருங்கடலும் கலைக்கடலும் மூலமாக ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தேன்.எங்கு சென்றாலும் எதையாவது ரசித்து கொண்டே வருகிறார். கூடவே அந்த ரசனைகளின் வர்ணனையை நானும் ரசித்து கொண்டே வந்தேன்.

இந்த இரு நூல்களிலேயுமே நான் கூர்ந்து கவனித்த ஒரு விஷயம் என்னவெனில்  அவர் சென்ற அந்த நாட்டையும் நம் நாட்டையும் ஒப்பிட்டு கொண்டே வருகிறார். நம் நாட்டை தரம் தாழ்த்த அல்ல அந்த ஒப்பீடு. அது ஒரு விதமான ஆதங்கம் அங்கலாய்ப்பு எனலாம்.

நூலில் இருந்து...

//நமக்கு தேச பக்தி இல்லையா? நம் நாட்டில் என்ன குறைகள்? நாமாகத் தயாரித்துக் கொள்ளக்கூடிய பல்பசை, கருவடாம், சோப்பு சைக்கிள், பால் புட்டி போன்ற பலவித பண்டங்களுக்குக்கூட அயல்நாட்டு மூளைகளையும் இயந்திரங்களையும் நம்பிவிடுகிற கபோதித்தனமா, தடித்தனமா?மூலாதாரமான தொழில்களை விட்டுவிட்டு,இவை இல்லாவிட்டால் குடிமுழுகிப் போய்விடாது என்றாலும் ஆடம்பர வசதிப் பொருட்களை வெட்கமில்லாமல் அயல்நாட்டுக் கடன், மூளை, மூலங்களுடன் தயாரிக்கும் வீண் அமைப்புகளா? கவிதை, நாவல், நீளமயிர் என்று அகில உலகீயம் என்ற போர்வையில் கடன்வாங்கும் அடிமன அடிமைத்தனமா? நம்முடைய வரிப்பணத்தில் நன்றாகப் படித்துவிட்டு, இங்கு ஆராய்ச்சிக்கு ஆதரவு இல்லை, ஆட முற்றம் போதவில்லை என்று சுக வாழ்வு ஆசையை ஆராய்ச்சிப் பசி என்ற பெயரில் மறைத்து, வெளிநாடுகளுக்குக் குடியேறும் இளம் மேதைகளின் அகில தேச நோக்கா?//

இந்த நாடுகளை பற்றி எண்ணற்ற செய்திகள் இந்த நூலில் இருப்பினும் நான் ரசித்ததே வேறு இரண்டினை.

ஒன்று இந்திய நேரத்தில் இருந்து மாற்றப்பாடாத அவரது கைகடிகாரம். அவ்வப்போது அதை பார்த்து கொண்டு ஊரில் என்ன செய்து கொண்டி
ருப்பார்கள்  என்றும் எழுதி இருப்பார்.

மற்றொன்று தன்னை காண வந்த ஒருவருக்கு ஊரில் இருந்து கொண்டு வந்த குஞ்சாலாடுகளையும் நேந்திரங்காய் வருவலையும் சாப்பிட தந்து உபசரிப்பார்.

இப்படி சின்ன சின்ன விஷயங்களால் ஆனதே சிறந்த வாழ்க்கை!

மிக நுட்பமான மனித உணர்வு பேசும் அந்த பாசாங்கற்ற பார்வையே,
இத்தனை  வருடங்கள் கழிந்தும் அவரது படைப்புகள் உயிர்ப்புடன் வாழ காரணம்.

ரம்யா ரோஷன்

நன்றி :

கருத்துகள் இல்லை: