தி.ஜா. 100 (38).
மனிதாபிமானம். (கணையாழி அக்டோபர் 1977).
மனிதாபிமானத்திற்கு தி.ஜா. சொல்லும் வியாக்கியானம் இது: “வாழ்க்கையைப் பார்த்து சிரிக்க வேண்டும், கோபப்படக் கூடாது என்று பல தத்துவ ஞானிகள் சொல்லிவிட்டார்கள். மார்க்ஸ், ப்ராய்டு, காந்திஜி, லெனின், ஜிட்டு என்று பல மகான்களின் கதைகளையும், எழுத்துக்களையும் படித்துவிட்டு, மனிதாபிமானியாகி விட்டார் தேவுடு. கோபம் வருவதில்லை. திருடிவிட்டாலோ, கொலை செய்தாலோ காரணமில்லாமல் செய்யமாட்டார்கள்.. யாராவது பலாத்காரமாக கற்பழித்தால் கற்பழிப்பவனின் மனநிலைதான் முக்கியம். தாய் அல்லது தகப்பனாருடைய “லெள” கிடைத்திருக்காது….” இந்த முன்னுரையுடன், தேவுடுவின் ‘மனிதாபிமான’த்தை டுதி.ஜா.வின் பார்வையில் பார்ப்போம்!
ரைனாஸரஸ் வாச்சு - ஹாங்காங்கிலிருந்து சிநேகிதர் வாங்கி வந்தது - வாங்கி இரண்டு மாதம்தான் ஆகிறது. ஓடவில்லை! காரணமே தெரியவில்லை. ஏன் இப்படித் தரக்குறைவான ஒரு பொருளைச் செய்கிறார்கள்? (அதற்கு தரக் கண்காணிப்பு, தொழிலாளியின் கவனக் குறைவு, அதற்குக் காரணம் பசி, முதலாளி லீவு கொடுக்காதது, அவன் வீட்டில் என்ன தொல்லையோ என தேவுடு யோசிப்பதாக தி.ஜா. சொல்பவை சிரிப்பை வரவழைப்பவை!).
வாட்சுக்கும் நமக்கும் ராசியில்லை என்கிறாள் மனைவி - தேவுடுவுக்கு இப்போதெல்லாம் ராசியில் நம்பிக்கையில்லை.(‘ப்ராய்டும் மார்க்ஸும் கண் திறந்து விட்டிருக்கிறார்கள்’). திருச்சி ஓட்டலில் கழுவிடத்தில், கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் கழிவறையில் அவருடைய கைக்கடிகாரத்தைத் தொலைத்திருக்கிறார். அவர் மனைவி, வாங்கிகொடுத்த ஒரு மணியில், ஆட்டோவில் கடிகாரத்தை நழுவ விட்டிருக்கிறார். (‘வாட்ச் இருக்கா பாத்தியான்னு நீங்களாவது சொல்ல மாட்டேளா?’ - வாழைப் பழத் தோலில் அவள் சறுக்கி விழுந்தால் கூட, சுற்றியிருப்பவர்கள் தோலியை முன்னாலேயே பார்த்து அவளை எச்சரித்திருக்க வேண்டும் என்பது அவள் பார்வை!).
தேவுடு, வீலர் பட்டர்வொர்த் போஸ்ட் கேட், மார்ஷல் (ஆங்கிலக் கம்பெனிகள்), அக்கர்வால், பூரண்சிங், சரஸ்வதி, நாஷனல் (இந்திய கம்பெனிகள்) என அலைகிறார். எல்லோரும் ஸ்பேர்பார்ட்ஸ் கிடையாது, அதனால் மும்தாஜ் செளக் பாமர் கம்பெனிக்குப் போகச் சொல்கிறார்கள். இங்கு வெளிநாட்டுப் பொருட்களை ரிப்பேர் செய்வது எவ்வளவு கடினம் என்பதைச் சொல்கிறார்!
கி.பி 2050 ல் உலகத்து ஜனத்தொகை பன்மடங்காகப் பெருகி, படுக்க இடமில்லாமல் ஜனங்கள் நின்று கொண்டே தூங்குவார்கள் என்ற இயல் ஞானி காமனரின் எச்சரிக்கை 1950 லேயே செளக்குக்கு வந்துவிட்டதாம் - அவ்வளவு ஜன நெரிசல்! தி.ஜா. வின் விவரணையில் அந்த பஜார்: “உப்பிலிருந்து கற்பூரம், கை வளையிலிருந்து கருத்தடை வளையம், குண்டூசியிலிருந்து காணாமல்போன கார்கள், நிஜமான கதரிலிருந்து நியூயார்க்கில் அமெரிக்கர்கள் அணிந்து எறிந்து விட்ட முன்னூறு டாலர் ப்ளானல் சூட்டுகள் எல்லாம் கிடைக்கிற அகில உலக பஜார் அது.”
தேவுடு பஸ்ஸில் போகிறார் - அடி அடியாக நகர்ந்து செல்ல வேண்டியிருக்கிறது. வழியில் தர்ம சப்பாத்திக்கென கும்பல், ஆட்டோரிக்ஷாக்களும், மிதி ரிக்ஷாக்களும், டாங்காக்களும் மனிதர்களை உரசிச் செல்ல, ஓரத்து சிமெண்டு வகிட்டில் நிம்மதியாக உறங்கும் ஆட்கள் (மாலை ஐந்து மணிக்கு, இந்த இரைச்சலில் எப்படி இவர்கள் உறங்குகிறார்கள் - வியக்கிறார் தி.ஜா.), ‘சுத்த தேசிய நெய் ஜிலேபி. ஸ்தாபிதம் 1786.’ போர்டுடன் ஜிலேபிக் கடைக் கும்பல், பல்குச்சி, பாய்கள் விற்பவர்கள், தொழுநோய்க் காரர்கள் என தி.ஜா. நம்மை அந்த செளக்குக்கே அழைத்துச் சென்றுவிடுகிறார். கும்பலில் நோய் பரப்புபவர்களையும் பார்த்து இரங்கக் கூடாதென்கிறார்!
இறுதியில் பாமர் கம்பெனிக்கு மாடியேறி வந்து விடுகிறார். அங்கும் கடைக்காரன், “நம்ம வாச்சுங்களே இப்ப ஏற்றுமதியாவுது. ரைனஸரஸே இப்ப வரதில்லெ சார்” என்கிறான். கொஞ்சம் தயங்கிப் பின் உள்ளே சென்று வாச்சைக் காண்பித்து வருகிறான். “லீவர் உடஞ்சிருக்கு சார். ஒண்ணும் செய்ய முடியாது. ஹாங்காங்தான் அனுப்பணும்” என்கிறான். “யாராவது சிநேகிதங்க ஹாங்காங் போனா அனுப்பிச்சுப் பாருங்களேன்” - “தொலைஞ்சுது நூத்தம்பது ரூபாய் -இனிமே சுண்ணாம்புக் காண்டாந்தான்” என்று தேவுடு திரும்புகிறார்.
வழியில் மணி கேட்கும் பிச்சைக்காரன் (எட்டு மணிக்கு சப்பாத்தி கொடுப்பங்க அனுமார் மந்திர்லெ, அதுக்குத்தான்), வாட்சு வேண்டாம், பைசா கொடுங்க என்கிறான்.
ஹாங்காங் போகும் சிநேகிதன், சிநேகிதனுக்கு சிநேகிதன் கிடைப்பான் என்றெண்ணியவாறு, மனைவிக்குக் கும்பலில் கஷ்டப்பட்டு நெய் ஜிலேபி வாங்கிச் செல்கிறார். மனைவியின் மீது அவருக்கு மனிதாபிமானம் - இன்று நடந்ததைப் பற்றி சொன்னால், இரவு மூன்று மணி வரை பேசுவாள் - பெண் மொழியும், பொன் மொழியுமாக.
ஒரு வாட்ச் ரிப்பேர் செய்யப் போய் வருவதற்குள், மனிதாபிமானத்தின் பல பரிமாணங்களை - எங்கெல்லாம் தேவைப் படுகிறதோ, அங்கெல்லாம் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லியபடி - நகைச்சுவையாக எழுதிச் செல்கிறார் தி.ஜா. மனைவியிடம் கூட மனிதாபிமானத்திற்குக் கணவனுக்கு ஓர் எதிர்பார்ப்பிருப்பதாக முடிக்கிறார்!
மீண்டும் அடித்த வாரம் மற்றொரு கதையுடன்….
ஜெ.பாஸ்கரன்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக