சற்றுமுன் படித்தேன்..உங்களுக்கும் பொழுது போகவேண்டாமா...நீங்களும் படியுங்களேன்.. அது ஒரு வித்தியாசமான விடியற்காலை கனவு. கனவிலும் விடியற்காலைதான். நான் மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்துப் படிக்கட்டில் அமர்ந்திருக்கிறேன். எனக்கு அருகில் நடிகர் ஜெமினிகணேசன் உட்கார்ந்திருக்கிறார். ‘பாட்டுப் பாடவா?’ ஜெமினி கணேசன் அல்ல. ‘உன்னால் முடியும் தம்பி’ ஜெமினிகணேசன். நெற்றியில் விபூதிப்பட்டைப் போட்டுக் கொண்டு, வெள்ளைத்தாடியுடன் பொரி உருண்டையை உடைத்து தெப்பக்குளம் மீன்களுக்கு போட்டுக் கொண்டிருக்கிறார். மீன்கள் கூட்டம், கூட்டமாக வந்து பொரியைத் தின்னும் காட்சியைக் காண அற்புதமாக இருந்தது.
“உன் பேர் என்ன?” என்றபடி ஜெமினிகணேசன் ஒரு பொரி உருண்டையை என்னிடம் நீட்டுகிறார். நான், "ஸ்ரீராம்” என்றபடி வேகமாக பொரி உருண்டையை வாங்கி வாயில் வைத்துக் கடிக்கிறேன். "நீ திங்கிறதுக்கு கொடுக்கல. மீனுக்குப் போடு. பறக்காவெட்டி...” என்று ஜெமினி கடுமையானக் குரலில் கூற... நான், "ஸாரி...” என்றபடி பொரி உருண்டையை உடைத்து மீன்களுக்குப் போடுகிறேன்.
"உனக்குக் கல்யாணமாயிடுச்சா?” என்கிறார் ஜெமினி.
"ஆயிடுச்சு சார்...”
"எத்தனைப் பொண்டாட்டி?” என்று ஜெமினி கேட்ட கேள்வியை நான் சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல், "ஒரு பையன். ஒரு பொண்ணு. பையன் ப்ளஸ் 1 படிக்கிறான். பொண்ணு நைன்த்...” என்கிறேன்.
"முட்டாள்... நான் உனக்கு எத்தனைப் பொண்டாட்டின்னு கேட்டேன்” என்று ஜெமினி குரலை உயர்த்திக் கேட்க... நான் அதிர்ச்சியுடன் ஜெமினியைப் பார்த்தபடி, "ஒரு பொண்டாட்டிதான்...” என்கிறேன். "ம்ஹ்ம்...” என்று என்னைக் கேவலமாக ஒரு பார்வை பார்த்த ஜெமினி, "வாழ்நாளெல்லாம் ஒரே பொண்டாட்டி கூட வாழறது போரடிக்கலையா?” என்கிறார்.
அவ்வளவுதான். சட்டென்று விழிப்புத் தட்ட... எழுந்தேன். “இதென்ன கனவு?” என்று யோசித்தபடி என் மொட்டைமாடி அறையை விட்டு வெளியே வந்தேன். மாடியில் என் மனைவி மாலதி சரக் சரக்கென்று உதறி துணிகளை காயப் போட்டுக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவுடன், "என்ன இன்னைக்கி இவ்ளோ சீக்கிரம் முழிச்சுட்டீங்க...” என்றபடி மாலதி துணியை உதற... நீர்த்துளிகள் என் முகத்தில் பட்டது.
"ஒரு வித்தியாசமான கனவு கண்டேன். முழிப்பு வந்துடுச்சு” என்ற நான் கனவைக் கூற ஆரம்பித்தேன்.
இந்த சமயத்தில் எனது மனைவியைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. மாலதி, ஒரு கிராமத்து வாத்தியார் மகள். இந்தக் காலத்திலும் அவளுக்கு சில தீர்க்கமான நம்பிக்கைகள் இருந்தன. எந்த நவீன விஞ்ஞானமும் கேள்விக்குட்படுத்த முடியாத நம்பிக்கைகள் அவை. கதவில் சட்டையை மாட்டினால் கடன்காரனாவோம். நகத்தைக் கடித்துத் துப்பினால் வீட்டில் சண்டை வரும். சாப்பிடும்போது தும்மினால், சுண்டு விரலைக் கழுவி விட்டு சாப்பிட வேண்டும். ஒற்றைக் காகத்தைப் பார்த்தால், யாரிடமாவது திட்டு வாங்குவோம். இரவில் தெருநாய் ஊளையிட்டுக் கொண்டேயிருந்தால் அருகில் எங்கோ டெத் கன்ஃபர்ம். விக்கல் எடுத்தால் உடனே ஊரிலிருக்கும் அவள் அம்மாவுக்கு ஃபோனை போட்டு, "என்னம்மா... என்னை நினைச்சுட்டிருந்தியா? காலைலருந்து ஒரே விக்கல்” என்பாள். எந்த தாய் தன் மகளிடம் நான் உன்னை நினைக்கவில்லை என்று கூறுவாள். "ஆமாம்மா... இப்பத் தான் உன்னைப் பத்தி நினைச்சேன். நீ ஃபோன் பண்ணிட்ட...” என்பார். உடனே என்னிடம், "நான் சொல்லல?” என்பாள்.
என்னைத் திருமணம் செய்து கொண்டு வந்த பிறகு, என் அம்மாவோடு பழகி ஜோதிட நம்பிக்கையும் சேர்ந்து கொண்டது. வருடத்திற்கு ஒரு முறை அம்மாவும், மாலதியும் வீட்டிலுள்ள அனைவரின் ஜாதகங்களையும் எடுத்துக் கொண்டுச் சென்று ஜோசியரிடம் காண்பித்து, ஜோசியர் சொல்லும் பரிகார பூஜைகளை செய்து வக்கிர கிரகங்களுக்கு கவுண்ட்டர் அட்டாக் கொடுப்பார்கள்.
இவ்வளவு நம்பிக்கைகள் உள்ள என் மனைவியிடம் நான் அந்தக் கனவை சொல்லியிருக்கக் கூடாது. சட்டென்று துணி காயப் போடுவதை நிறுத்திய மாலதி என்னைத் திகிலுடன் பார்த்தபடி, "ஏங்க இப்படி காலங்காத்தால தலைல கல்லத் தூக்கிப் போடுறீங்க?” என்றாள்.
"நான் எங்கடி கல்லப் போட்டேன்? கனவத் தாண்டி சொன்னேன்”
"எப்ப கனவு கண்டீங்க?” என்றாள்.
"இப்பத்தான் விடியக்காத்தால. அதுல பியூட்டி என்னான்னா... கனவுலயும் விடியக்காத்தாலதான்”
"விடியக்காத்தாலயே விடியக்காத்தால கனவா? கட்டாயம் பலிச்சுடும். கற்பகாம்பா தாயே... ஏம்மா இப்படி என்னை சோதிக்கிறே?” என்றபடி கபாலீஸ்வரர் கோயில் கோபுரத்தை நோக்கி நியாயம் கேட்டாள்.
"ஏய்... சும்மா பைத்தியம் மாதிரிப் பேசாத”
"போன வருஷம், இப்படித் தானே உங்களுக்கு கனவுல அடிக்கடி நாய் வந்துகிட்டேயிருந்துச்சு...”
"ஆமாம்...”
"அப்ப ஜோசியருகிட்ட கேட்டதுக்கு, தேய்பிறை, அஷ்டமி அன்னைக்கி பைரவருக்கு உங்கள நெய் விளக்கு போடச் சொன்னாரு. நீங்க அதுல எல்லாம் நம்பிக்கையில்ல... முடியாதுன்னு சொல்லீட்டிங்க. நான் போய் போட்டுட்டு வந்தேன். ஆனாலும் நீங்க வந்து விளக்கேத்தாததால உங்கள நாய் கடிச்சுதுல்ல?”
"ஆமாம்...”
"அப்புறம்.... ஆறு மாசத்துக்கு முன்னாடி உங்க கனவுல அடிக்கடி பாம்பு வந்து கிட்டேயிருந்துச்சு. அதே மாதிரி நம்ப தோட்டத்துல பாம்பு வந்துச்சுல்ல?”
"ஆமாம்...”
"ஜெமினி கணேசனுக்கு பல தாரம். அவரு உங்க கனவுல வந்து, ஒரே பொண்ணோட வாழறது போரடிக்கலையான்னு கேட்டா என்ன அர்த்தம்? கட்டாயம் இன்னொருத்தி உங்க வாழ்க்கைல வரப்போறா...” என்று கூறிய போது மாலதியின் தொண்டை அடைத்துக் கொண்டது. அழகான மனைவிகள் குழந்தைத்தனமாக பேசும் போது மேலும் அழகாகி விடுகிறார்கள்.
"ஏய்... லூசு” என்று கூறிய என்னைக் கண்கலங்க பார்த்த மாலதி, "அத்த...” என்று என் அம்மாவை அழைத்தபடி படிக்கட்டுகளில் இறங்கினாள். நான் பல் விளக்கி, முகம் கழுவி விட்டு கீழே இறங்குவதற்குள் மாலதி என் அம்மாவிடம் எனது கனவைச் சொல்லி முடித்திருந்தாள். வீட்டினுள் நுழைந்த என்னை என் அம்மாவும், பிள்ளைகளும் இரண்டாம் மனைவியுடன் வீட்டிற்கு வந்தவனை பார்ப்பது போல முறைத்தார்கள். என்னை நெருங்கிய அம்மா, "இந்த வயசுல ஏண்டா உனக்கு புத்தி இப்படிப் போவுது?” என்றாள்.
"அம்மா... நீயும் லூசு மாதிரி பேசாத. நான் என்ன பண்ணுனேன்? ஜெமினி கணேசன் கனவுல வந்தாருன்னு சொன்னேன்...”
"அவரு உன்னை ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாராமே...” என்றவுடன் நான் அதிர்ச்சியுடன் மாலதியைப் பார்த்தேன்.
சத்தம் கேட்டு, தூக்கம் கலைந்து அறையிலிருந்து வந்த அப்பா, "என்ன இங்க காலைலயே சத்தம்?” என்றார். "உங்க பையன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி கனவு கண்டானாம்” என்று அம்மா கொஞ்சம்கூட கூசாமல் என் கண் முன்னாலேயே சொல்ல... எனக்கு தூக்கி வாரிப்போட்டது, அப்பா சிரிப்புடன், "பொண்ணு யாருடா?” என்றார்.
"நீங்க வேறப்பா. கனவுல ஜெமினிகணேசன் வந்து, ஒரே பொண்டாட்டிகூட வாழ்றது உனக்கு போரடிக்கலையான்னு கேட்டாருப்பா. அவ்ளோ தான். இவங்க ஏத்தி, ஏத்தி சொல்றாங்க...”
அது எனக்குத் தெரியும்டா. "எப்பவும் பொம்பளைங்க சொல்றதுல அம்பது பர்சென்ட்தான் உண்மை இருக்கும்”
"என்ன மாமா நீங்க? ஜெமினிகணேசன் கேட்டதுக்கு கிட்டத்தட்ட அதானே அர்த்தம்” என்றாள் மாலதி.
"கனவுல அவன் ரெண்டாம் கல்யாணம் கட்டிகிட்டானா?”
"இல்ல. ஆனா போன வருஷம் அவரு கனவுல அடிக்கடி நாய் வந்துச்சு. கனவுல நாய் அவரக் கடிக்கல. ஆனா நிஜத்துல கடிச்சிடுச்சு. அந்த மாதிரி இதுவும் நடக்கும். இவரு வேற உயரமா, சிவப்பா, அழகா இருக்காரு...”
"உயரமா, சிவப்பாதான்டி இருக்கேன். நான் எங்கடி அழகா இருக்கேன்?” என்றேன் நான்.
"சரி... இப்ப என்னப் பண்ணணுங்கிற?” என்றார் அப்பா.
"நம்ம ஜோசியரப் போய் பாப்போம். அவரு ஏதாச்சும் பரிகாரம் சொல்வாரு...” என்றாள் அம்மா.
"ஒருநாள்தானே கனவு வந்துச்சு. மறுபடி வந்தா பாப்போம். எல்லாரும் போய் வேலையைப் பாருங்க...” என்ற அப்பா அம்மாவிடம், "நான் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்;’ ஏழெட்டுத் தடவை பாத்திருக்கேன். என் கனவுல ஜெமினி கணேசன் வரல. இவன் கனவுல வந்துருக்காரு பாரேன். ம்ஹ்ம்... எல்லாத்துக்கும் ஒரு யோகம் வேணும்...” என்றபடி அப்பா என்னைப் பொறாமையாக பார்க்க... அம்மா, "காலம் போன காலத்துல ஆசையப் பாரு...” என்றபடி மாலதியுடன் சமையலறைக்குச் சென்றாள்.
என் மகனும், மகளும் என் அருகில் வந்தனர். என் பெண் கிசுகிசுப்பாக, "அப்பா... எனக்கு சித்தி வரப்போறாங்களாப்பா?” என்றாள்.
நான் மெதுவாக, "ஆமாம் கண்ணு... சித்தி எப்படியிருக்கணும்?” என்றேன் சமையலறையைப் பார்த்தபடி. "நல்லா கேட்டரிங் படிச்ச பொண்ணா அழைச்சுட்டு வாங்கப்பா. அம்மாவுக்கு தந்தூரிச் சிக்கன்ல்லாம் செய்யத் தெரியல” என்றான் என் மகன். என் மகள், "இல்லன்னா... பியூட்டி பார்லர் வச்சிருக்கிற பொண்ணா புடிப்பா. டெய்லி சூப்பரா மேக்கப் பண்ணிகிட்டு ஸ்கூல் போலாம்...” என்றவள் என் பின்னால் பார்த்து விட்டு நாக்கைக் கடித்து பேச்சை நிறுத்தினாள். நான் திரும்பிப் பார்த்தேன். பின்னால் துடைப்பக்கட்டையுடன் நின்று கொண்டிருந்த மாலதி, "உங்களுக்கு எல்லாம் கிண்டலா இருக்கா?” என்று துடைப்பக்கட்டையுடன் எங்களைத் துரத்த... நாங்கள் ஓடினோம்.
அன்றிரவு மாடி ரூமிற்கு தலையணையுடன் மாலதி வர... நான் ஆச்சர்யத்துடன், "என்னடி... எப்பவும் கீழதான படுப்ப...” என்றேன்.
"உங்கம்மா இனிமே என்னை கீழப் படுக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க. மேலத் தனியா படுத்திருக்கான்ல? அதான் கண்ட கண்ட கனவெல்லாம் வருது. இனிமே நீயும் மேல் ரூம்லயே படுத்துக்கன்னு சொல்லிட்டாங்க” என்ற மாலதி என் தோளில் சாய்ந்து கொண்டு, "என்னங்க... நான் உங்களுக்கு போரடிச்சுட்டேனா?” என்றாள்.
"சீ பைத்தியம்...” என்றேன் அவள் தலைமுடியைக் கோதியபடி.
"நாப்பது வயசுக்கு மேல ஆம்பளைங்கள ஷார்ப்பா வாட்ச் பண்ணனுமாம். அப்ப ஆம்பளைங்களுக்கு புதுசா ஒரு லைஃப் ஸ்டார்ட் ஆவுதாமே. ஏதோ புக்குல போட்டிருந்தான்னு அத்தை சொன்னாங்க.”
"இங்கப் பாரு... என் மேல உனக்கு சந்தேகம் ஏதாச்சும் இருக்கா?”
"இல்ல... ஆனா நீங்க வேற உயரமா, சிவப்பா அழகா இருக்கீங்கள்ல? அதான் கொஞ்சம் பயமா இருக்கு”
"அய்யோ... அசடு.. நான் எங்கடி அழகா இருக்கன்.? வெளியச் சொன்னா சிரிப்பாங்கடி”*
"அதுவுமில்லாம கொஞ்ச நாளா உங்க நடவடிக்கையே சரியில்ல”
"என்ன சரியில்ல?”
"ஏழெட்டு மாசமா நீங்க ஸ்லிம் ஃபிட் சட்டை, ஜீன்ஸ்ல்லாம் போட்டுகிட்டு சின்னப்பையன் மாதிரி ஆஃபிஸ் போறீங்க. முதல்ல எல்லாம் வாரத்துக்கு ஒரு நாள் தான் ஷேவ் பண்ணுவீங்க. இப்பல்லாம் ஒண்ண விட்டு ஒரு நாள் ஷேவ் பண்றீங்க. ‘திடீரென்று உங்கள் கணவர் தங்கள் தோற்றத்தில் மிகுந்த அக்கறை காட்டினால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’னு ஒரு புக்குல போட்டிருந்தான்.”
"மாலு... ஒத்துக்குறேன். தோற்றத்துல திடீர்னு அக்கறை காட்டறேன். அதுக்கு காரணம்... வயசாகறத நம்ப மனசு ஏத்துக்கிறதில்ல. அதனால சின்னப்பையன் மாதிரி காமிச்சுக்கிறதுக்காக இந்த மாதிரி ட்ரெஸ் போடுறேன். நரைமுடில்லாம் தெரியுது. அதனால ஒண்ணு விட்டு ஒரு நாள் ஷேவ் பண்ணிக்கிறேன். எல்லாத்தையும் சந்தேகக் கண்ணோடப் பாக்காத மாலு.”
"அதுவுமில்லாம அமெரிக்காவுல ஒரு ஆராய்ச்சி பண்ணினாங்களாம். ஒரு ஆம்பளையால ஒரே சமயத்துல அஞ்சுப் பொண்ணுங்கள முழுசா நூறு சதவீதம் லவ் பண்ண முடியுமாம்.”
"ஏண்டி... இந்த காலத்துல, ஒரு பொண்ண லவ் பண்றவனே நொந்து நூலாயிப் போயிடுறான். அஞ்சுப் பொண்ண ஒரே சமயத்துல லவ் பண்ணினா, சட்டையக் கிழிச்சுகிட்டு ரோட்டுலதான் திரியணும். இதையெல்லாம் உனக்கு யாரு சொல்றா?”
"ஒரு புக்ல போட்டிருந்தான்.”
"புக்கு... புக்கு... புக்கு... முதல்ல வீட்டுல புத்தகம் வாங்குறதையே நிறுத்துறேன்.”
விடியற்காலையில் மீண்டும் அந்தக் கனவு. இந்த முறை ஜெமினி கணேசன், மாமி மெஸ்ஸில் என்னோடு பொடி தோசை சாப்பிட்டுக் கொண்டே பேசினார். தெப்பக்குளத்தில் விட்ட இடத்திலிருந்து பேச ஆரம்பித்தார்.
"மிஸ்டர் ஸ்ரீராம்... ஒரே பொண்ணுகூட வாழ்க்கை நடத்திகிட்டு, ஒரே பொண்ணுக்கு புடவை வாங்கி கொடுத்துகிட்டு, ஒரே சாம்பார சாப்பிட்டுகிட்டு... சே... அதெல்லாம் ஒரு லைஃபா?” என்றார்.
"எனக்கு புரியுது சார். ஆனா இப்பல்லாம் பெண்கள பாதுகாக்கறதுக்கு நிறைய புது சட்டம் வந்துருச்சு. ஒரு பெண்ணோட மனசுல நெருடல் ஏற்படுற மாதிரி உத்துஉத்துப் பாத்தாக் கூட அவன ஜெயில்லத் தூக்கிப் போடலாம்ன்னு சட்டம் சொல்லுது...”
"அப்படிப் பாத்தா உலகத்துல இருக்கிற அத்தனை ஆம்பளையும் ஜெயில்லதான் கிடக்கணும்”
"ஹி.. ஹி... ஆமாம். அப்புறம்... குடும்ப வன்கொடுமைத் தடுப்பு சட்டம்னு ஒண்ணு இருக்கு. அதுபடி மனைவி மனம் புண்படும்படி நடந்துக்கிட்டா, அதுக்கும் உள்ளத் தூக்கிப் போடலாம்”
"அப்படியா? இப்ப உன் பொண்டாட்டி தினம் சாப்பாட்டுல உப்பு கம்மியாப் போடுறா. நீ என்னாத்தடி சமைக்கிறன்னு கோபமா கேக்குற. அதுல அவ மனசு புண்பட்டுடிச்சின்னா உன்னை ஜெயில்ல போட்டுரலாமா?”
"போலீஸ்ல அந்த மனம் புண்படுற செக்ஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணா உள்ளத் தள்ளிடுவாங்க...”
"ஆத்தாடியோவ்... இருந்தாலும் சொல்றேன் கேளு. நாப்பது வயசுக்கப்புறம் நமக்கு வயசான மாதிரியே ஃபீலிங் வரும். நீ மட்டும் இன்னொரு கல்யாணம் பண்ணிப் பாரு. சின்னப்பையனாட்டம் ஆயிடுவ...” என்று கூறிய போது கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்தேன். என் உடல் அசைவில் என் தோளில் சாய்ந்திருந்த மனைவியும் விழித்துக் கொண்டாள்.
"ஏன் உங்களுக்கு இப்படி வேர்க்குது. ஜெமினி மறுபடியும் கனவுல வந்தாரா?”
"ஆமாம்....”
"என்ன சொன்னாரு?”
சொன்னேன்.
"இந்த ஜெமினிகணேசனுக்கு வேற ஆளே கிடைக்கலியா? கடவுளே... ஏன்டாப்பா இப்படி என்னை சோதிக்கிற? இந்தத் தடவை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோன்னே சொல்லிட்டாரா?”
"ஆமாம்...”
"அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?”
"நான் ஒண்ணும் சொல்லல”
"ஏன்... வாயத் திறந்து அதுல்லாம் முடியாது. தப்புன்னு சொல்ல வேண்டியதுதானே. வாய மூடிகிட்டு அமுக்குணி மாதிரி கேட்டுட்டு வந்துருக்கீங்க”
"ஏண்டி... என்னமோ நேர்ல பேசின மாதிரி சொல்ற. அதோட கனவு கலைஞ்சிடுச்சிடி..”
"உங்க மனசுக்குள்ள அந்த ஆசை இருக்கு. அதான் திருப்பி திருப்பி ஜெமினிகணேசன் கனவா வருது. உள்மன ஆசைகள்தான் கனவா வரும்னு ஒரு புக்குல போட்டிருந்தான்”
"ஏய்... புக்கு, புக்குன்னு சொல்லி ஏண்டி என் உயிரை எடுக்குற... அறிவுகெட்ட முண்டம்...” என்றேன் நான் கோபத்துடன்.
"அய்யோ... முதல்ல எல்லாம் நான் என்ன சொன்னாலும் பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி கம்முன்னு உக்காந்துருப்பீங்க. இப்ப திட்ட ஆரம்பிச்சிட்டீங்க. என்னமோ நடக்கப் போகுது... அத்தை...” என்று சத்தமாக அழைத்தபடி மாலதி வேகமாக எழுந்து கதவைத் திறந்து கொண்டு சென்றாள்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படைத்தளபதிகள் தீவிரமாக மேப்பைப் பார்ப்பது போல் ஜோசியர் எனது ஜாதகக் கட்டங்களை நெடுநேரமாக பார்த்துக் கொண்டிருந்தார். பென்சிலால் ஜாதகத்தின் ஓரத்தில் ஏதோ கணக்கு மாதிரி போட்டார். பின்னர் பென்சிலால் சில கட்டங்களை இணைத்தார். என் முகத்தையும், ஜாதகத்தையும் மாற்றி மாற்றி உற்றுப் பார்த்தார். நான் மனதிற்குள், "இந்தாளு என்ன குண்டத் தூக்கிப் போடப் போறானோ...” என்றபடி திகிலுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்த ஜோசியர், "உங்களுக்கு எத்தனை நாளா இந்த மாதிரி கனவு வருது?” என்றார்.
"இப்ப தான் சார்... ஒரு ரெண்டு நாளா வருது...”
"ம்... ரெண்டு நாளைக்கு முன்னாடி உங்க ஆஃபிஸ்ல யாராச்சும், கல்யாணமாகாத பொண்ணு புதுசா வேலைல சேந்துருக்காங்களா?”
"ஆமாம் சார்...”
ஜோசியர் "எப்படி...” என்பது போல் என் அம்மாவையும், மனைவியையும் பார்க்க... அவர்கள் "தெய்வமே...” என்பது போல் ஜோசியரைப் பார்த்தனர். தொடர்ந்து அவர், "அந்தப் பொண்ணு பேரு என்ன?” என்றார்.
நான் வெள்ளந்தியாக, "சாவித்திரி...” என்று கூற... "சாவித்திரியா?” என்று ஜோசியர், அம்மா, மாலதி... மூவரும் கத்திய கத்தலில் எனக்கு வெலவெலத்துப் போய்விட்டது. அப்புறம்தான் சாவித்திரியும் ஜெமினிகணேசனின் மனைவி என்பது நினைவிற்கு வந்தது. ஜோசியர், "தி கேஸ் இஸ் ஓவர்...” என்பது போல் பென்சிலை ஜாதகக் கட்டங்களின் மீது வீசி எறிந்து விட்டு, "அந்தப் பொண்ணு அழகா இருக்குமா?”* என்றார். நான் தயக்கத்துடன் மாலதியைப் பார்த்தேன்.
"பரவால்ல சொல்லுங்க. டாக்டர்கிட்டயும், ஜோசியர்கிட்டயும் உண்மைய மறைக்கக் கூடாது”
"அட்டகாசமா இருப்பா சார்... அதுலயும் மூக்குல ஒரு மச்சம் இருக்குப் பாருங்க... சான்ஸே இல்ல சார். அந்த மச்சத்தப் பத்தி மட்டும் பாக்குறவன் அத்தனைப் பேரும் ஆளுக்கொரு கவிதை எழுதி சட்டைப் பாக்கெட்ல வச்சுகிட்டு திரியறாங்க”
அப்போது என் மனைவி என்னைப் பார்த்த பார்வையில் என்னை உயிரோடு எரிப்பதற்கு போதுமான அளவு நெருப்பிருந்தது.
"ஸோ... இதான் பிரச்னை” என்றபடி என் ஜாதகத்தை உற்றுப் பார்த்தவரின் நெற்றி சுருங்கியது. அருகிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்த்த ஜோசியரின் முகம் சட்டென்று பிரகாசமாக, "ஐ காட் இட்...” என்று என் ஜாதகத்தின் மீது நங்கென்று குத்தினார்.
"என்ன ஜோசியரே?” என்றாள் மாலதி பதட்டத்துடன்.
"உங்க கணவர் சிம்ம லக்னம். உத்திராட நட்சத்திரம். ஜெமினி கணேசனும் அதே சிம்ம லக்னம், உத்திராட நட்சத்திரம்தான்” என்று ஜோசியர் கூறியவுடன் நாங்கள் மூவரும் “வாட்?” என்று அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டோம். சில வினாடிகள் என்னை கண்கலங்கப் பார்த்த மாலதி, "நான் என்னங்க உங்களுக்கு குறை வச்சேன்” என்றாள்.
"ஒண்ணுமே நடக்கலையேடி. நீ ஏண்டி நான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டு வந்த மாதிரியே பேசற?” என்றேன்.
"அதான் ஜாதம் சொல்லுதே...”
"ஒருத்தர் ஜாதகத்தப் பார்த்து அவருக்கு ரெண்டாம் கல்யாணம் இருக்குமான்னு சொல்ல முடியுமா ஜோசியரே?” என்றாள் அம்மா.
"பேஷா சொல்லலாம். சுக்கிர நாடிங்கிற புத்தகத்துல இதைப் பத்தி டீடெய்லா சொல்லியிருக்காங்க. ஒருத்தரோட ஜாதகத்துல ஏழாவது இடம்தான் லைஃப்பார்ட்னருக்கான இடம். ஏழிற்குரிய கிரகம் எத்தனை கிரகங்களுடன் சேர்ந்திருக்குமோ அவனுக்கு அத்தனை தாரம்னு சொல்வாங்க”
நான் ஆர்வத்துடன், "என் ஏழாம் கிரகம், எத்தனை கிரகங்களோட சேர்ந்திருக்கு சார்?” என்று கேட்க... ஜோசியர் என்னை முறைத்தார். மாலதி என் தொடையில் கிள்ள... நான் வலியோடு ஜோசியரைப் பார்த்து அசடு வழிய சிரித்தேன். தொடர்ந்து ஜோசியர். "கோச்சார ரீதியா பாத்தா...” என்று ஐந்து நிமிடங்கள் ஜாதகத்தின் டெக்னிகல் டீடெய்ல்ஸை சொல்லி இறுதியாக, "உங்க புருஷன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறதுக்கான அறிகுறில்லாம் தெரியுது.” என்றார்.
"இதுக்கு பரிகாரம் இருக்கா?”
"நிச்சயமா இருக்கு. கைல என்ன மோதிரம் போட்டுருக்கீங்க?” என்றார். நான் கையை நீட்டினேன். மோதிரத்தைப் பார்த்து முகம் மாறிய ஜோசியர், "ரெண்டு கல்லு மோதிரம்போட்டிருக்காரு.அதான் பிரச்னை. ஒரு கல்லு மோதிரம் போடுங்க. எல்லாம் சரியாயிடும். ஆனா வெளில வாங்கி வைக்கிற கல்லுல தோஷம் இருக்கும். தோஷ நிவர்த்தி பண்ணின கல்லுல நானே மோதிரம் செஞ்சி ரெடிமேடா வச்சிருக்கேன். அதைப் போடுங்க. அஞ்சாயிரம் ருபாய் செலவாகும்...*” என்று கூற நான் அதிர்ச்சியுடன் மாலதியை நோக்கினேன்.
"அது பரவால்ல. கனவுல ஜெமினி கணேசன் வராம இருக்கிற மாதிரி நல்லா பூஜை பண்ணி தாங்க” என்றாள் மாலதி.
அன்றிரவு மாலதி அந்த மோதிரத்தை என் விரலில் மாட்டிவிட்டு வானை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு, "கடவுளே... இனிமே இவரு கனவுல ஜெமினிகணேசன் வரக்கூடாது” என்று வேண்டிக் கொண்டாள்.
மறுநாள் காலை நான் எழுந்தபோது, ஏற்கனவே விழித்திருந்த மாலதி ஆர்வத்துடன், "கனவுல ஜெமினி கணேசன் வந்தாரா?” என்றாள்.
"வரல...” என்றேன்.
"அப்பாடா... கடவுளே...” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.
"நல்ல மோதிரம் மாலு. ஜெமினி கணேசன் வராதது மட்டுமில்ல. கடவுளே கனவுல வந்துட்டாரு...”
"அப்படியா? ” என்றாள் மாலதி முகம் மலர.
"வள்ளி,தெய்வானயோட சாட்சாத் முருகப் பெருமானே வந்துட்டாரு. என்னா ஒரு தரிசனம்...” என்றேன் நான்.
அடுத்த வினாடியே என் மனைவி மயக்கம் போட்டு பொத்தென்று கீழே விழுந்தாள்.
எழுதியவர் பெயர் தெரியவில்லை.
நன்றி : வாட்ஸ்அப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக