6 ஏப்., 2021

விழிப்புணர்வு தகவல்கள்


“நல்லா கொள்ளையடிக்கிறாங்க தம்பி!”

சில வருடங்களுக்கு முன் தனது மனைவிக்கு மனஅழுத்தம் எனச் சொல்லி அவரை அவரது கணவர் கூட்டி வந்திருந்தார். மனஅழுத்தமென கணவர் சொன்ன அறிகுறிகள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தன. 

“ திடீர்னு எது மேலேயும் நாட்டமில்லாம ஆயிட்டா டாக்டர்”

“முன்னாடியெல்லாம் வீட்ட படு சுத்தமாக வச்சிக்கிடுவா, ஆனா இப்ப வீடு பூரா குப்பை கிடந்தாலும் கண்டுக்காம டீவி் பாக்குறா டாக்டர்”

“வீட்டு வரவு செலவு கணக்கெல்லாம் அவ தான் பார்ப்பாள், இப்ப பட்ஜட்ல பெரிசா ஒட்ட விழுந்தாலும் கண்டுக்கிறதில்ல டாக்டர்”

நான் கேட்டேன் “ஆமாம் என்னைக்காச்சும் தனக்கு மனசு சரியில்லைன்னு அவங்க உங்கக் கிட்ட சொல்லி இருக்கிறாங்களா?” 

“இல்லவே இல்ல டாக்டர். தான் உண்டு தன் டீவி சீரியல் உண்டுன்னு ஜம்முன்னு கம்முன்னு இருக்கிறா. ஆளே மாறிட்டா”

அந்த பெண்மனி முகத்தில் எந்த சலனமுமில்லாமல் ரொம்ப ரிலாக்ஸ்டாக உட்கார்ந்திருக்கிறார். கேட்டால் தனக்கு மனசஞ்சலம் ஒன்றுமில்லை என்கிறார். அவருக்கு  மனஅழுத்தம் கட்டாயமாக இல்லை எனத் தெரிகிறது. மற்ற மனநோய்களின் அறிகுறிகளும் இல்லை. மேற் சொன்ன அறிகுறிகள் ஆறு மாதத்திற்கு முன் தோன்றி, மெல்ல மெல்ல தீவிரமடைந்தருக்கின்றன. இதற்கு முன் அவருக்கு மனநோய் ஏதும் இருந்ததில்லை. 

அவரிடம் உங்களின் வாசனை நுகரும் உணர்வில் ஏதும் மாற்றம் இருக்கிறதா என கேட்டேன். கேட்டவுடன் இருவரும் உடனே “ஆமாம் ஆமாம் டாக்டர், கொஞ்ச நாளா வாசனையே தெரிவதில்லை” என கோரஸாக பதில் சொன்னார்கள். 

MRI எடுத்துப் பார்ததில் அவருக்கு 
Frontal lobe meningioma
எனும் முன் மூளைக் கட்டி இருந்தது. அதை neurosurgeon ஒருவர் அறுவை சிகிச்சை செய்து எடுத்த பிறகு சில வாரங்களில் அந்த பெண்மனியின் பழைய குணங்கள் திரும்ப வந்துவிட்டன. இதனால் தேவையில்லாத, தவறான டயக்னோஸிஸும் , தேவையில்லாத மருந்துகளும், பக்க விளைவுகளும் தவிர்க்கப்பட்டன, கால விரயமும் தான். இதனால் தான் முதன் முறையாக  மனநோய் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு நாங்கள் CT scan , blood test போன்றவைகளை பரிந்துரைக்கிறோம்: உங்கள் (எங்கள்) நேரத்தையும் பணத்தையும் வீண்டிப்பதற்கல்ல! 

சமீபத்தில் ஊரில் உள்ள ஒரு பெரியவர் தொடர்பு கொண்டு “ கொஞ்ச நாளா மனம் பதட்டமாக இருப்பதால் தூத்துக்குடியில் ஒரு மனநல மருத்துவரிடம் போனேன் தம்பி. அவர் எனக்கு CT ஸ்கேனோட தேவையில்லாமல் கண்ட கண்ட blood test ல்லாம் எடுக்க சொல்கிறார்ப்பா! காலம் கெட்டுக் கெடக்குதுப்பா , இப்பல்லாம் இங்க உள்ள எல்லா டாக்டர்மார்களும் இப்படித்தான் கொள்ளையடிக்கிறாங்க தம்பி, நீ கொஞ்சம் ஃபோன் பண்ணி சொல்ல முடியுமா தம்பி?!” 

மேலே சொன்ன சம்பவம் ஞாபகம் வந்தது, அவரிடம் சொன்னேன். இரத்த பரிசோதனைகளின் அவசியத்தையும் விளக்கினேன் தைராயட் பிரச்சனைகள், இரத்த சோகை, விட்டமின் டி குறைபாடு என பல வகையான உடல் உபாதைகள் இருந்தாலும் மனஅழுத்தமோ பதட்டமோ வரலாம். உடல் உபாதைகளை கண்டறிவதும் எளிது, குணப்படுத்துவதும் எளிது. அந்த உடல் உபாதையை குணப்படுத்தினால் அதனால் வந்த மனநோயும் கூடவே ஓடிப் போயிடும். எளிதான ஒரு காரணியை விட்டுவிட்டு எப்படி ஒரு நோயை முழுமையாக கண்டறிய முடியும்? அது மட்டுமல்லாமல் இந்த பரிசோதனைகளை செய்யாவிட்டால், ஏதாவது உடல் உபாதை இருந்தால் அது கண்டயறியப்படாமலே மேலும் தீவிரமடையவும் வாய்ப்பிருக்கிறது. இது தாங்க காரணம்!

https://m.facebook.com/story.php?story_fbid=10222952327493337&id=1133061852

கருத்துகள் இல்லை: