27 செப்., 2021

இன்றைய திருமந்திரம் : பாடல் 1276


திருமந்திரம் - பாடல் #1276: நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

விந்துவு நாதமு மொக்க விழுந்திடில்
விந்துவு நாதமு மொக்க விரையதாம்
விந்திற் குறைந்திடு நாத மெழுந்திடில்
விந்துவை யெண்மடி கொண்டது வீசமே.

விளக்கம்:

பாடல் #1275 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்டு வந்து அண்ட சராசரங்கள் முழுவதும் பரவி அங்கிருந்து வெளிச்சமும் சத்தமும் ஒரே அளவில் கீழுள்ள உலகங்களுக்கு விழுந்து நன்மையைக் கொடுக்கும் மூல விதையாக இருக்கின்றது. உலகத்திலுள்ள உயிர்களில் இறைவனை அடைய முயற்சி செய்யும் ஆன்மாக்களுக்கு பயன் படும்படி வெளிச்சம் குறைந்து அதை விட எட்டு மடங்கு அதிகமாக சத்தமாக வெளிப்படும் போது அது மந்திர ஒலியாக இருக்கின்றது.

கருத்து: சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்டு வரும் ஏரொளிச் சக்கரமானது அண்டங்கள் முழுவதும் விரிந்து பரவி அங்கிருந்து அனைத்து உலகங்களுக்கும் நன்மையைக் கொடுக்கும் மூல விதையாக இருக்கின்றது. உலகங்களில் இறைவனை அடைய விரும்பி சாதகம் செய்யும் உயிர்கள் மேலும் மேன்மையடைய இந்த ஏரொளிச் சக்கரம் வெளிச்சத்தைக் குறைந்து சத்தத்தை அதிகமாக்கி மந்திர ஒலியாகக் கொடுக்கின்றது.

நன்றி :


கருத்துகள் இல்லை: