வாசிப்பு என்ன செய்துவிடும்?
துவண்டு கிடக்கும் மனதை தட்டி எழுப்பும்..
ரணமடைந்த மனதிற்கு மருந்திடும்..
எல்லாமே முடிந்துவிட்டது என நினைக்கும் போதும் உற்சாகமூட்டும்...
இலக்கை நோக்கி உத்வேகமாக ஓட வைக்கும்..
எப்படிப்பட்ட இழப்பிலிருந்தும் வெளியே வர உறுதுணையாக இருக்கும்...
இவை எல்லாம் நான் உணர்வுப்பூர்வமாக உணர்ந்தவை.. 2020 இறுதியில் நம் குழு குறித்த அறிமுகம் கிடைத்தது.. 2021 மாரத்தானில் பங்கேற்று குறைந்தது 100 புத்தகங்களாவது வாசித்துவிட வேண்டும் என ஆசையோடு முதல் 2 பதிவுகளை எழுதினேன்.. அதன் பின் வாசிக்கவே முடியாமல் போய்விட்டது. நான்காண்டுகள் எதற்காக எங்கள் குடும்பம் காத்திருந்ததோ அந்த மகிழ்ச்சி கிடைத்தது. ஆனால் 6 மாதங்கள் மட்டுமே அது நீடித்தது. 6 மாதங்களாக உயிரும், உடலுமாக எனக்குள் இருந்த ஜீவன் எங்களை விட்டு சென்றது. எல்லாமே சூன்யமாகி விட்டது. இந்த இழப்பில் இருந்து மீளவே முடியாது என நினைத்திருந்தேன். வேதனையும், கண்ணீருமாகவே 2 மாதங்கள் கழிந்தன. எனக்கு பிடித்த எதையுமே செய்ய முடியவில்லை. மனம் மாறும் என வட்டெழுத்து கற்க என் இணையர் சேர்த்துவிட அதிலிருந்தும் 2 நாட்களில் ஓடிவந்துவிட்டேன்... மருத்துவரும் என் நிலை பார்த்து, மீண்டும் வேலைக்கு செல்ல அறிவுறுத்த பணிக்கு சென்றேன்..
பார்ப்போர் எல்லாம் என் மீது அக்கறையாய் விசாரிக்க, குழந்தையின் நினைவிலிருந்து மீளமுடியாமல் தவித்தேன்... மனிதர்களை எதிர்கொள்ளவே அஞ்சினேன்.. குழந்தையை குறித்து ஏதேனும் கேட்டுவிடுவார்களோ என நடுங்கினேன். என்னை எப்படி தேற்றி பழைய நிலைக்கு கொண்டு வருவது என என் இணையர் நினைத்துகொண்டிருந்த போதுதான் நம் குழுவின் 4 ஆம் ஆண்டு வாசிப்பு விழா குறித்த அறிவிப்பை எதேச்சையாக இருவரும் பார்த்தோம். அனைத்து தலைப்புகளிலும் நீ புத்தகம். வாசித்து பதிவிட வேண்டும் என என் இணையர் உறுதியாக கூற, பிறகுதான் மீண்டும் வாசித்து நம் குழுவில் பதிவிட்டு வருகிறேன்.
நான் வாசிக்கும் புத்தகங்களை புலனத்தின் முகப்பில் ( WhatsApp status) வைப்பேன். அதை பார்க்கும் பலரும் ஒரே நாளில் எப்படி ஒரு புத்தகத்தை படிக்க முடியும் என கேள்வி எழுப்புவர் அவர்களுக்கு தெரியாது நான் புத்தகங்களுக்குள் ஒளிந்துகொள்கிறேன் என்பது. தூக்கம் தொலைத்த இரவுகள், இப்போது புத்தகங்களோடு கழிகின்றன.. மனம் இயல்பாக முயன்று கொண்டிருக்கிறது. நான் மீண்டும் வாசிப்பை நாடாவிட்டிருந்தால் நிச்சயம் இழந்த இடத்திலேயே இருந்திருப்பேன். ஒரு அடிக்கூட அந்த இடத்திலிருந்து நகர்ந்திருக்க மாட்டேன்.. எனக்கு தக்கசமயத்தில் உதவிய நம் குழுவிற்கு நான் தான் மனமாற நன்றி கூற வேண்டும். ஆனால் நம் குழு எனக்கு சிறந்த பதிவுக்காக புத்தகம் பரிசளித்துள்ளது. இந்த புத்தகம் என் உணர்வோடு கலந்தது. பெருமகிழ்ச்சி...
நன்றி :
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக