ஆராச்சார்
—————
ஆராச்சார் என்றால் மலையாளத்தில் தூக்குப் போடுகிறவன் என்று பொருள்.இந்தத் தலைப்பில் புகழ் பெற்றமலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீரா படிக்கிறவ ர்களை அதிர வைக்கும் ஒரு நாவலை எழுதியிருக்கிறார்.மனித வாழ்க்கையின் குரூர அத்தியாயங்களைக் குலை நடுங்கும்படி படைத்துக் காட்டுகிறது அவருடைய எழுத்து.இந்த நாவலின் இன்னொரு சிறப்பு இதன் களம் கொல்கத்தா. முற்ற முழுக்க வங்கமொழிப் பாத்திரங்களைக் கொண்ட நாவலை ஒரு மலையாள எழுத்தாளர் கூர்மையாகத் தந்திருப்பது பெரு வியப்பு.
கொல்கத்தா மயானத்தின் அருகில் இறைச்சிக் கழிவுகள் நாறும் சாக்கடை.யும்,அழுகிச் சிதைந்த மீன் களின் எலும்புகள் கிடக்கும் முற்றமும் கொண்ட இடிந்து தகர்ந்த வீட்டில் வசிக்கும் பாரம்பரியமான தூக்குப் போடுபவர்களின் குடும்பத்தைச் சுற்றிச் சுழல்கிறது கதை.இடையறாது செல்லும் பிண வண்டிகளாலும் பாடைகளாலும் நிரம்பி வழியும் தெரு் .எரியும் பிண வாடைக்கு நடுவே வாழும் மக்கள்.அந்தக் குடும்பத்தில் கடைசி வாரிசாக இருக்கும சாதனாவுக்குத் தூக்குப் போடும் தொழிலைப் பெற நடக்கும் போராட்டம். மூக்கைப் பிடித்துக் கொண்டு குமட்டலை அடக்கியபடி இந்தக் கதையில் சாதனாவோடு பயணிக்கிறோம்..வங்க வரலாறே ஆங்காங்கே மின்னுகிறது.
மன்னராட்சிக் காலம்,வெள்ளையர் வருகை ,சுதந்தரப் போராட்டம ஏன் திரிணமூல் வருகை உட்படப் பலப்பல வரலாறுகள் குறுக்கும் நெடுக்கும் வந்து போகின்றன.ஒரு எடுத்துக் காட்டு….
சுதந்தரப் போராட்டத்தில் வங்கத்தில் ஆயுதப் புரட்சியில் நம்பிக்கையுள்ள அநுசீலன் சமிதி போன்ற ரகசியச் சங்கங்கள் செயல்பட்ட காலம்.இளந்தலைமுறையினரான சூர்யா சென்,கல்பனா த்த் ஆகியோர் ஈடுபட்ட ஒரு நிகழ்வில் கல்பனா தப்பி விடுகிறார். சூர்யா சென்னின் நண்பன் நேத்ரா சென்
அவனைச் சாப்பிட அழைத்துச் சிக்கவைத்துக் காட்டிக் கொடுத்துவிடுகிறான் . சூர்யா சென் தூக்கிலிடப் படுகிறான்.பழி வாங்கக் கருதிய புரட்சிச் சங்க இளைஞன் ஒருவன் நேத்ரா சென் வீடு புகுந்து அவனை வெட்டிக் கொல்கிறான் பின்னர் காவல் துறை நேத்ரா சென் மனைவியை விசாரிக்கிறது.
மனைவி சொல்கிறார்: “இதோ இந்த இடத்தில் தான் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.நான் பரிமாறிக் கொண்டிருந்தேன்.திடீரென ஒரு இளைஞன் வந்து அப்படியே அவர் தலையைக் குனிய வைத்து வெட்டிவிட்டான்.இது தான் நடந்தது. ஆனால் வெட்டியவன் யாரென்று நிச்சயம் சொல்ல மாட்டேன்.”என்ன கேட்டும் கொலை செய்தவனைக் காட்டிக் கொடுக்க மறுத்துவிட்டார் மனைவி.
மற்றவர் காரணம் கேட்டபோது அவர் சொன்னார்: “மக்களின் கனவை அந்த ஆள் காட்டிக் கொடுத்து விட்டான்.அந்த நிமிடத்திலிருந்து அவனை என் வீட்டுக்காரனாக நான் மதிக்கவே இல்லை.”
இப்படி அபூர்வமான வரலாறுகளையும சேர்த்துப் பின்னிய நாவல் இது.கேரள சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது,ஓடக்குழல் விருது,மத்திய சாகித்ய அகாதமி விருது என விருதுகளை வாரிக் குவித்துள்ள கே.ஆர.மீராவின் நாவல் இதுவரை (2020) 39 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழில் சாகித்ய அகாதமி வெளியீடாக(செந்தில் குமார் மொழிபெயர்ப்பில்) வெளி வரவுள்ளது.
———————27.08.21
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக