படித்ததில் பிடித்தது
அவளது வீடு
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
பக்கம் : 271
வகை : சிறுகதை தொகுப்பு
தேசாந்திரி பதிப்பகம்
எஸ். ரா வின் குரல் மீண்டும் மீண்டும் என் செவிகளின் கதவுகளை இடைவிடாமல் தட்டி தட்டி எனக்குள் ஒளிந்து உறங்கி கிடந்த வாசகனை மீட்டெடுத்து எனக்கு தந்தது. எஸ் ரா வின் உலக இலக்கிய அறிவைக்கண்டு நான் வியக்காத நாளே இல்லை. எப்படி ஒரு மனிதன் இத்தனை உலக இலக்கியங்களை கரைத்து குடிக்க முடியும், அதுமட்டுமில்லாமல் அவ்விலக்கியங்களை நம் தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல பெரும் பாடும் படுகிறார். அது சரி, தான் சுவைத்ததை உலகமே சுவைக்கவேண்டும் என்பவன்தானே எழுத்தாளன். எஸ் ராவை எங்கிருந்து தொடங்கலாம் என்று என்னும் வேலையில்,அவரின் படைப்புகள் ஆலமரம் போல் கிளைகளும்கூட வேரூன்றி நின்றிருந்தன, அதில் ஒரு சிறு கிளையான சிறுகதை தொகுப்பில் தொடங்குவோம் என்று இந்நூலை தேர்ந்தேடுத்தேன்.
இந்நூலில் மொத்தம் 20 கதைகள். ஆனால் நான் சமீபத்தில் வாசித்த சிறுகதை வரிசையில் மிகவும் கனமானவை இவைகள். பக்கங்களும், நூல் இடையும் தாண்டி ஒரு கதையும், கதை பேசும் களமும், அது கொடுக்கும் தாக்கமும் தான் ஒரு நூலை கணமாக்க முடியும். அப்படி பார்த்தால் இது மிகவும் கணமான ஒன்று. குறிப்பாக பி. விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்பு கதையை படித்தவுடன் என் உடல் நடுங்கியது, உள்ளம் பதறியது, இவுலகில் தான் நானும் வாழ்கிறேனா என்று என் நிழலின் மீதும், மிம்பத்தின்மீதும் காரி உமிழ்ந்தேன்.
தி ஜாவின் கதைகளில் பெண்களை ஒரு பெரும் சக்தியாகவும், அடக்கி ஆள முடியாத ஒரு ஆகுருதியாகவும் வலம் வருவார்கள், ஆனால் எஸ் ரா வோ நடைமுறையில் பெண்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அவர்கள் வழியே நம் கண்ணத்தில் அறையும்படி உரைக்கிறார்.
என்னை கவர்ந்த கதைகள் :
1.அவளது வீடு
2.எம்பாவாய்
3.பி விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்பு
4.கற்பனை சேவல்
5.தனலக்ஷ்மியின் துப்பாக்கி
6.காப்க்காவிற்கு செண்பகவல்லியை தெரியாது
7.அப்பா புகைக்கிறார்
8.சௌந்திரவல்லியின் மீசை
9.பிடாரனின் மகள்
சுதந்திரம் என்றால் என்ன? அதனை ஏன் நாம் எல்லோரும் இன்னொருவரிடம் தேடிக்கொண்டே இருக்கிறோம்? அவரவர் வாழ்க்கையை அவரவர் விருப்பப்படியே வாழ்ந்தால்தான் என்ன? இதில் எங்கிருந்து வந்தது ஆண் பெண் பாகுபாடு, வரையறை, கட்டுப்பாடு? சக உயிரினத்தை அடக்கியாளும் நாம் உயர்திணை என்று மார்தட்டி கொள்வது கேவலம்.
அகல்யாவின் தனிப்பட்ட ஆசையை அடித்து பிடுங்கி ஓரத்தில் அமர வைக்கும் அவளது வீடு.
நன்மதியின் வாசிப்பு பழக்கத்துக்கு கூட முட்டுக்கட்டை போட்டு முடக்கிவைத்த எம்பாவாய்.
பிறப்பினால் ஆண் என்ற கர்வத்தில் மனைவியை ஒரு சுகம் தரும் எந்திரமாய் மட்டும் பார்க்கும் பி. விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்பு.
தனி மனித சுதந்திரம், ரகசியம் இவை அனைத்து மனிதனுக்கும் அடிப்படை, பெண் என்பதால் அவளுக்குள் ரகசியமோ, தனி மனித சுதந்திரத்தை மறுப்பது தனலக்ஷ்மியின் துப்பாக்கி.
காப்பக்காவிற்கு செண்பகவல்லியை தெரியாது - இக்கதை நம்மை உறங்கவிடாத கதை. எல்லோராலும் ஒதுக்கப்படும் செண்பகவல்லி, யாராலும் கட்டுப்பாடு போடமுடியாத ஒரு உலகுக்குள் செல்ல விரும்பி பூனையாக மாறி தான் ஆசையை ஒரு நாள் வாழ்ந்தாலும் நிஜம் அவளுக்கு கொடுத்ததோ தனிமை தான். ஒரு வேலை என் திருமணத்திற்கு முன் இக்கதையை படித்திருந்தால் நான் செண்பகவல்லியை மணந்திருப்பேன்.
நாம் நம்முடன் பயணித்த சாமானியர்கள் என்று அழைக்கப்பட்ட பல ஆத்மாக்கள் திடீரென்று எங்கு சென்று மறைந்தார்கள் என்று தெரியவில்லை. ராப்பிச்சைக்காரன், அம்மி, குளவி கொத்துபவன், பூம் பூம் மாட்டுக்காரன், குடை ரிப்பேர் செய்பவன், சாணை பிடிப்பவன், பாம்பாட்டி, குரங்கு வித்தைக்காரன் இன்னும் ஏராளம். இவர்களுள் ஒருவனை பற்றிய கதையே பிடாரனின் மகள். இவர்களை கவனிக்க நமக்கு நேரமில்லை, இந்த உலகிற்கு அவர்கள் தேவையில்லை என்று யார் முடிவு செய்தது?
இரண்டு கண்கள் இருப்பதனால் மட்டுமே நாம் இந்த உலகை பார்க்கிறோம் என்பது அர்த்தமில்லை. உண்மையிலே நாம் இந்த உலகத்தை பார்கிறோமா? ரசிக்கிறோமா? அனுபவிக்கிறோமா? கண்ணுக்கு தெரிவதை பார்ப்பது வேறு அது சுயநலம், நம் மனதிற்கு தெரிவதை பார்க்கவேண்டும் அதுதான் உணர்வுபூர்வமான பார்வை. இதனை உணர்த்திடத்தான் பல நூற்றாண்டுகளாக எழுத்தாளன் போராடுகிறான், போராடி கொண்டுஇருக்கின்றான். ஆனால் வெற்றி மட்டும் பெறவில்லை. இந்த போராட்டத்தின் பெரும் போராளி எஸ். ரா. இந்த நூற்றாண்டிலாவது எழுத்தாளனின் இப்போராட்டத்திற்கு வெற்றி தேடி தருவோம். மனதால் இவ்வுலகை பார்த்து, உணர்ந்து, ரசித்து வாழ்வோம். நம்மிடம் இருப்பது ஒரு வாழ்வுதானே !
- இர.மௌலிதரன்
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக