"தற்பெருமை"
குரு ஒருவர் தன் சீடர்கள் சிலருடன் பேசியபடி, ஆற்றின் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
திடீரென குரு கால் வழுக்கி, நிலை தடுமாறி ஆற்றில் விழப்போனார்.
அப்போது அருகிலிருந்த ஒரு சீடன், “சட்’டென்று குருவின் கையைப் பிடித்து இழுத்து, அவரை ஆற்றில் விழாமல் காப்பாற்றினான்.
அவன் அவரைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், ஆற்றில் விழுந்த அவர், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்.
குருவும் மற்ற சீடர்களும் காப்பாற்றிய சீடனுக்கு, நன்றி தெரிவித்தனர்.
இதனால் அந்த சீடனுக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது.
பார்ப்பவர்களிடமெல்லாம், “ஆற்றில் விழ இருந்த குருவை நான்தான் காப்பாற்றினேன்.
இல்லாவிட்டால், இந்நேரம் குரு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருப்பார்’ என்று கூறத் தொடங்கினான்.
இந்த விஷயம் குருவின் காதுக்கு எட்டியது. ஆனாலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்.
மறு நாள் குரு அதே சீடர்களை அழைத்துக் கொண்டு, அதே ஆற்றின் கரையோரம் நடந்து சென்றார்.
அன்று சம்பவம் நடந்த இடம் வந்ததும், முன்பு தன்னைக் காப்பாற்றிய சீடனிடம்,
“என்னை ஆற்றில் தள்ளிவிடு!” என்றார்.
அந்த சீடன் திகைத்தான்.”ம்! தள்ளு!” என்றார் குரு.
”அது… வேண்டாம் குருவே!” என்றான் சீடன்.
”இது குருவின் உத்தரவு. கேட்டு நடப்பது உன் கடமை. ம்… என்னை ஆற்றில் தள்ளு!” என்றார்.
மிரண்டு போன சீடன் அவரை ஆற்றில் தள்ளி விட்டான்.
மற்ற சீடர்கள் என்ன நடக்கப் போகிறதோ? என்று திகிலுடன் பார்த்தனர்.
ஆற்றில் விழுந்த குரு, எந்தவித பதட்டமும் படாமல், அமைதியாக நீந்திச் சென்று மறுகரையைத்
தொட்டு விட்டுத் திரும்பி வந்தார்.அதைப் பார்த்த சீடர்கள் அனைவரும் திகைத்தனர்.
குரு கரை மேலே ஏறி வந்தார்.தள்ளி விட்ட சீடனைப் பார்த்தார்.
“இப்போதும் நீ தான் என்னைக் காப்பாற்றினாயா?” என்று கேட்டார். அந்த சீடன் தலை குனிந்தான்.
”ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ள செயல். ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொள்வது அந்த மனிதாபிமான குணத்துக்கே இழுக்கைத் தேடித் தரும். அந்த மனிதன் ஒருநாளும் சான்றோனாக முடியாது!” என்றார்.
குரு தற்பெருமை கொண்ட சீடன், குருவிடம் மன்னிப்புக் கேட்டு, தற்பெருமை எண்ணத்தைக் கைவிட்டான்..
“எனக்குத் தெரியும்” என்பதற்கும்,எனக்கு மட்டும்தான் தெரியும்” என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
எல்லாம் தெரிந்த மனிதனும் இல்லை, எதுவும் தெரியாத மனிதனும் இல்லை” என்ற உலக உண்மையை மறந்த மனிதன்தான் ,இந்த தற்பெருமை வலையில் விழுந்து அவமானப் படுகிறான்.
மனதில் ஏற்படக்கூடிய களங்கங்களில், பிறருடைய வெற்றியைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாதிருப்பது ஒன்று.
பொறாமை குணமே மிகவும் கொடியது. வீண் கர்வம், பொறாமை, அகம்பாவம் என்பன ஓரினத்தைச் சேர்ந்தவை.
மனிதனுடைய உண்மையான இயல்பின் வேர்களை அவை வெட்டிவிடும்...
நாம் மலையாக இருப்பினும் மண் கும்பம் என உணர்வு கொள்ள வேண்டும்.. *என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜீ*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக