2 அக்., 2021

நூல் நயம் : அமெரிக்க நாட்கள் - சுஜாதா

வாசிப்பு மாரத்தான் 2021/46/75
நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா
ஏழாம் வார தலைப்பு;பயணம்
V. நாகலட்சுமி
Id no;313
புத்தகத்தின் பெயர் 60 அமெரிக்க நாட்கள்
ஆசிரியர் சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
விலை 50 ரூபாய்
80 பக்கங்கள்
திரு சுஜாதா, அவர்கள் ஐந்து முறை அமெரிக்கா சென்று விட்டு, வந்த பிறகு இந்த புத்தகத்தை 2007 இல் எழுதியிருக்கிறார். இந்த நூல் எழுதப்பட்ட காலத்தை தாண்டி ,அதன் ஆதார உண்மைகள் என்றும் மாறாதவை.
வியப்புகளின்றி, எதார்த்தமாக, அதன் மனிதர்களின்,குறிப்பாக அங்கு போய் சேர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்வின் உண்மைகளையும், பாசாங்குகளையும் யோக்கியமாக எழுதியுள்ளதாக கூறியுள்ளார்.
17 பொருளடக்கம் கொண்ட புத்தகம் இது.
அமெரிக்கா செல்ல விரும்புபவர்களை நான்கு வகைகளாக பிரிக்கலாம்.
ஒன்று.மாணவர்கள்,இவர்கள் ஜி. ஆர். இ, டோஃபல் மார்க்கமாக செல்பவர்கள்.
2. தாய்மார்கள் ,தமது பெண்கள் பிரசவத்திற்காக செல்லுபவர்கள்,
3.டூரிஸ்ட் விசாவில் செல்பவர்கள், 4.கம்யூட்டர் புரோகிராம் எழுத செல்பவர்கள்,
டில்லி ஹாங்காங் 5 மணி நேரம், ஹாங்காங் சான்பிரான்சிஸ்கோ சுமார் 12 மணி நேரம்,மறுநாள் கிளம்பி முதல் நாள் வந்து சேரும் வினோத பயணம், சர்வதேச தேதி கோட்டை பின்பக்கமாக கடப்பதால் ஏற்படும் குழப்பம், என்று ஆசிரியர் கூறுகிறார்.
சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் அமெரிக்காவின் மேற்கு வாசல்,
முதல் ஆச்சரியம்;எத்தனை சீனர்கள்? அவர்கள் அனைவரும்,அவசரமாக அமெரிக்கா குடி வந்து கொண்டிருக்கிறார்கள்,என்பது தெளிவாக தெரிகிறது.சீன மொழியிலும், ஸ்பானிஷ்மொழியிலும், அறிவிப்புகள் ஒலிக்கின்றன.
சான் மேடியோ,என்ற பகுதி சிலிகான் பள்ளத்தாக்கு, என்று சொல்லப்படும் உலக பிரசித்தி பெற்ற டெக்னாலஜி தலைநகரின், விளிம்பில் அமைந்துள்ள அமைதியான இடம். இங்கு ஆசிரியரின் உறவினர் வீட்டில் தங்கி இருந்தாராம். அப்போது அந்த இடத்தைப் பற்றிய வர்ணனையாக,
அவ்வப்போது கார்கள் பெருமூச்சுடன் செல்ல,
பறவைகள் இல்லாத நீல வானத்தில் காற்றில் லேசான குளிர்,
சற்று தூரம் சென்றால்" பே "என்னும் வளைகுடாவில் அதிக குளிர்,
விமானங்கள் இறங்கி ஏறும் விமான நிலையம்,
சாலையில் பறிப்பார் இல்லாமல், தாழ்வாக தொங்கும் ஆரஞ்சு பழங்கள்.
அருகே, சான்ஜோஸ்(san jose) இங்கே நிறைய இந்தியர்கள், நாக பஞ்சமி,
வரலட்சுமி விரதம்,
கோகுலாஷ்டமி,
ஆவணி அவிட்டம்,
எல்லாம் விடாமல், கொண்டாடுகிறார்கள்.
இந்தியாவில் நாம் செய்வதை எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே, மிகையாகவே, அவர்கள செய்வது, தெளிவாக தெரிகிறது. உதாரணம்,வேத பாராயணம்,பஜனைகள், லட்சுமி அபிஷேகங்கள்,சந்தோஷிமாதா பூஜை, பாலாஜி அபிஷேகம்.

சைனா,வியட்நாம், போன்ற தேசங்களில் இருந்து அமெரிக்காவில் குடி புகுந்தவர்கள்,என்னதான் அமெரிக்க பிரஜையாக இருந்தாலும், உள்ளத்தினுள்ளே,நான் ஒரு சீனன், வியட்நாமஸ்,என்று சொல்லிக் கொள்கிறார்கள்.ஆனால்,இந்தியர்கள் பெரும்பாலும் தன் அடையாளங்களை, மறைக்க தான் விரும்புகிறார்கள்.
இந்தியர்அனைவரும், அமெரிக்க உச்சரிப்பில் தான் பேசுகிறார். இங்கு வந்த உடனே அடையாளங்களை மாற்றிக் கொள்ளும் அவசரம் தெரிகிறது. இருந்தும்,தோற்றம் எளிதில் காட்டிக்கொடுத்து விடுகிறது.
பெரும்பாலும், அமெரிக்காவில் குடியேறும் இந்தியர்களின் குறிக்கோள், ஒரு வீடு,2கார்,அரைடஜன் கிரெடிட் கார்டுகள், அமெரிக்காவில் பிறந்த 1,2 குழந்தைகள், கொஞ்ச காலம் ஏதாவது ஒரு கம்பெனிக்கு உழைத்துவிட்டு, சொந்தத்தில் ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி துவங்குவதுதான். அமெரிக்காவில், குழந்தை பிறப்பது முக்கியம். அப்போதுதான் அவர்கள், அமெரிக்க பிரஜைகள். அவர்கள் இவ்வாறு தம் குழந்தைகளை, அமெரிக்க பிரஜைகள் ஆக்கும் பொழுது,அவர்கள் இந்தியாவில் வந்து செட்டில் ஆகும் உரிமையை விட்டு விடுகிறார்கள், என்று தான் தோன்றுகிறது. இந்தியாவில் பிறந்து, வளர்ந்தவர்களுக்கு,இந்தியா திரும்பிச் செல்வது ஒரு சில வருஷங்களில், மிக மிக சிரமமாக இருக்கிறது. இந்த குழந்தைகள், அமெரிக்காவில் வளர்ந்து, தாய் மொழி தெரியாமல்,ஆங்கிலம் மட்டும் தெரிந்து, வீட்டில் ஒரு கலாச்சாரம், வெளியே மற்றொரு கலாச்சாரம், என்கிற இரு நிலைகளில் உள்ள முரண்பாட்டின் இடையே வாழ்ந்து, வளரும் இவர்களுக்குச் சொந்த நாட்டின் கதவுகள் பிறக்கும்பொழுதே,மூடப்பட்டுவிட்டன.
அமெரிக்காவில் குடிபுகுந்த இந்தியர்கள் பலவகை. ஆரம்பத்தில் அதிகம் திறமை தேவையில்லாத,வேலைகளுக்காக, பிழைப்பு தேடி வந்தவர்கள்.இந்த நாட்டிலும் அவர்கள் சமூக, மற்றும் பொருளாதார முன்னேற்றம் பெற, இரண்டுஅல்லது மூன்று தலைமுறையாய், ஆயிற்று
நடு அறுபதுகளில்,அமெரிக்காவின் குடி போனவர்கள் படித்தவர்கள்.
இந்திய நடு வர்க்கத்தைச் சார்ந்த மாணவர்கள்,மேல் வர்க்கத்தைச் சார்ந்த மாணவர்கள்,கல்லூரிகளில் படித்தவர்கள்,மேல்படிப்புக்காக வந்தவர்கள்இங்கே வேலை கிடைத்து செட்டில் ஆனவர்கள்,புதிய திறமை _யாளர்கள் அங்கே இருக்கும் சூழ்நிலையை கொண்டு அவர்களால் சிறக்க முடிந்தது. எழுபதுகளில், தொழில்துறையில் மேம்பட்டவர்கள், அவர்கள் எழுபதுகளின் மத்தியில் கொஞ்சம் பொருளாதார சுதந்திரமும், தைரியம் பெற்று, சொந்த தொழில் தொடங்க முற்பட்டார்கள். ரியல் எஸ்டேட், இந்தியன் ஸ்டோர், கேசட் கடைகளில் தான் முதலில் கவனம் செலுத்தினார்கள்.கொஞ்சம், கொஞ்சமாக, ஹைடெக் தொழில் துறையிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள்.
இன்று,ஆயிரக்கணக்கான இந்தியர்கள், சிலிக்கன் பள்ளத்தாக்கில், சிறுசும்,பெருசுமா சொந்த கம்பெனி வைத்திருக்கிறார்கள். அமெரிக்க பொருளாதாரத்தில், வேலை வாய்ப்புகளையும்,சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதில் இவர்கள் தாக்கம் கணிசமானது.
அடுத்து சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து, நியூயார்க் வருவதற்கு அமெரிக்காவின் குறுக்கே பறக்க ஆறு மணி நேரம் ஆகிறது.
கடிகாரத்தை 2 மணிநேரம் தள்ளி வைக்க வேண்டியிருக்கிறது
நியூயார்க் கலாச்சாரத்திலும், நடை, உடை பாவனைகளில் மிகவும் மாறுபட்ட நகரம்தான்.ஆங்காங்கே, பாலங்களையும், பாட்டைகளையும் கடக்க டாலர்கள் கேட்கிறார்கள்.
புதுப்பித்த சுதந்திர தேவியின் சிலை இங்கு இருக்கிறது.

அடுத்தது, டெக்சஸ்,இது தமிழ்நாட்டை விட பெரிய மாநிலம்.எப்பொழுதுதோ செவ்விந்தியர்களுக்கு சொந்தமாக இருந்தது.ஸ்பானிஷ்,பிரெஞ்சு டிராப்பர்கள்,ஆங்கில அமெரிக்க பிராட்டஸ்டன்ட் மதபோதகர்கள் என்று பலவிதமாக,பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு நெப்போலியனின் யுத்த செலவுக்கு பணம் போதாமல்,ரொம்ப சீப்பாக அமெரிக்காவிற்கு விற்கப்பட்டு இன்று இதன் பழங்குடியினரின் ஞாபகங்கள் ஏதாவது மிச்சம் இருக்கிறதென்றால் மெஸ் கிட் போன்ற சில பெயர்கள் மட்டுமே.
டல்லஸ்,டெக்சஸ் மாநிலத்தின் மிக முக்கியமான நகரம்.டெக்சஸ் இன்ஸ்றுமெண்ட்ஸ் போன்ற பெரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள், பலவற்றின் தலைமைச் செயலகங்கள் இங்கேதான் இருக்கின்றன.
இங்குள்ள தமிழர்கள், சபா அமைத்துஅருமையான ஒளி,ஒலி அமைப்பு கொண்ட அரங்கத்தில்,
தமிழ்நாட்டில் உள்ள முன்னணி பாடகர்களை அழைத்து வந்து, மிகுந்த ஆர்வத்துடன்,கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கைதட்டி உற்சாகப்படுத்தி, கச்சேரி கேட்கிறார்கள்.

ஆசிரியர் அங்கு சென்ற சமயம், ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துக் கொண்டிருந்த நேரம். கிளிண்டன் டெமாக்ரடிக் கட்சியிலும், பாப் டோல் ரிபப்ளிகன் கட்சியிலும்,ராஸ் பெரோ சீர்திருத்தக் கட்சியிலும், மற்றும் ஒருவர், என நான்கு பேர் போட்டியிட்டு கடைசியில் கிளின்டன் ஜெயித்த சமயம்.
தேர்தல் தினத்தின்போது,நம்மூர் போல லவ்ட் ஸ்பீக்கர்,தோரணம், திருவிழாக்கோலம் ,போஸ்டர் ஏதுமில்லை.எல்லாம் டிவி பிரச்சாரம் தான். அமெரிக்காவில் 50 சதம் மக்கள் பங்கு கொண்ட தேர்தல் அது.

சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள பொது நூலகம் அப்பொழுதுதான் கணிப்பொறி மயமாக்கப்பட்டது நூலகத்தில் நுழைந்ததும் ஸ்பேஸ் ஸ்டேஷன் போல இருக்கிறது. 5 மாடிகளின் உப்பரிகையிலிருந்து, மையத்து ஏட்ரியத்தை எட்டிபார்க்க முடிகிறது.20 லட்சம் புத்தகங்கள் எங்கே வைத்திருக்கிறார்கள்? என்று தெரியாமல்,அத்தனை விஸ்தாரம். காணுமிடமெல்லாம், கணிப்பொறி முனையங்கள் .அதில்,ஹெல்ப் என்னும் வார்த்தையை தேர்ந்தெடுத்ததும் எப்படி புத்தகங்களை அந்த நூலகத்தில் தேடுவது? என்று கணிப் பொறிசொல்கிறது. ஒரு நிமிஷத்தில் பர்சிவலின் தமிழ் ஆங்கில அகராதி எந்த செல்ஃபில் இருக்கிறது! என்று, ஈசியாக கண்டுபிடிக்க முடிந்தது.
அமெரிக்காவின் கனவு தொழிற்சாலை ஹாலிவுட், லாஸ் ஏஞ்சல்சில் இருப்பது, எல்லோருக்குமே தெரியும். யுனிவர்சல் ஸ்டுடியோ, டிஸ்னிலேண்ட் இரண்டுமே மிகப்பெரிய சுற்றுலாத்தலம்.
டிஸ்னி லேண்ட்டில், முழு தினம் உலாவிய போது,எத்தனை வழிகளில் பார்வையாளர்களிடமிருந்து பணம் பிடுங்க முடியும்? என்று கவனிக்க முடிந்தது, என்கிறரர்.
டிக்கெட்டு 30 டாலர். உள்ளே போனதும், மிக்கி மவுஸ் குல்லாயிலிருந்து, மின்னி பலூன், ப்ளூட்டோ டி-ஷர்ட், 5 டாலர் 10 டாலர், என்று பத்தடிக்கு ஒரு தடவை பிள்ளைகள் மூலம் பிடுங்க வைத்து, இறுதியில் வரும் போது, கிரெடிட் கார்டு தேய்ந்துவிடும்.
டிஸ்னிலேண்ட் குழந்தைகளுக்கும், ஒருநாள்,குழந்தைகளாக இருக்க விரும்பும் அப்பா அம்மாக்களுக்கும் தான்.
பண்டாஸ் மேஜிக்,என்று அவர்கள் நதிக்கரைகள் நடத்திய லேசர் காட்சிதான்,மிகவும் அற்புதமாக இருந்தது. வால்ட் டிஸ்னி கதாபாத்திரங்கள், அனைத்தும் வானில் விசிறப்பட்ட லேசான நீர் திரையில் லேசர் பிம்பங்களாக, டெக்னிக் உதவியுடன் உயரத்தில் தெரிந்தது.
அமெரிக்கர்களின் முன்னேற்றத்திற்கு, மக்களின் அறிவுத் திறனையோ, இயற்கை வளங்களயோ, தொழில்நுட்ப முன்னேற்றமோ,முக்கிய காரணங்களாக சொல்ல முடியவில்லை. இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடுகள் மிகவும் பின்தங்கியுள்ளன. நுட்பமான அறிவு படைத்த மக்களைப் பெற்ற, இந்திய நாட்டு குழந்தைகள் பிச்சை எடுக்கிறார்கள்.தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் கண்ட பிரான்ஸ் ஜெர்மனி ஜப்பான் போன்ற நாடுகள், முன்னணிக்கு வர முடியவில்லை கல்விமுறை ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.பிள்ளைகளின் தனித்திறமைகளை இளமையிலேயே கண்டுபிடித்து, விளையாட்டிலும், படிப்பிலும்,சிறந்தவர்களை அவர்களால், தேர்ந்தெடுக்க முடிகிறது. கல்வித் திட்டங்களில் மனப்பாடம் என்று இல்லாமல், இயல்பாக கற்கும் முறைகள் இருப்பதும்,ஒரு காரணம்.
மேலும் கல்வி வேலைக்காக அல்ல, கல்விக்காக வேலை, ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்தால் வேலை கிடைக்கிறது.அந்த வேலையில் சம்பாதித்து,பணம் சேர்த்து விருப்பப்பட்ட கல்வியை அடைய முடிகிறது.நம் நாட்டில் இது தலைகீழாக
இருக்கிறது.
வேலை இல்லாதவர்களை, ஆதரவற்றவர்களை, வயதானவர்களை,அரசாங்கம் கவனித்துக் கொள்கிறது .
எல்லோரும் பணம் பண்ணுவதில் கவனமாக இருப்பதால், எல்லோருக்கும் வேலை வாய்ப்பு இருப்பதால், இன மத கலவரம் இல்லை.
கோபித்துக் கொள்ளக் காரணம் இருந்தாலும்,நேரம் யாருக்கும் இல்லை.
நூற்றுக்கணக்கான ஜனங்கள், இங்குமங்கும் இலக்கின்றி திரிவதை கண்டதும் நாட்டின் இத்தனை மனிதவளத்தை வீணடிக்கும் அவலம் தாக்குகிறது. இந்தியா மோசமான நாடல்ல, மோசமாக ஆளப்படும் நாடு, என்பது அமெரிக்கா போய் வந்தபின் விளங்குகிறது.
அமெரிக்காவில் கார் ஓட்ட கற்று கொண்டால் வாழ்க்கையின் வண்ணமே வேறு, 80 90 வயசு தாத்தாவெல்லாம்,
அனாயசமாக கார் ஓட்டுவார்கள். பாட்டிகள் ரூஜ், லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வார்கள்.
இந்தியாவிலிருந்து செல்பவர்கள் டிஸ்னி வேர்ல்டு, டிஸ்னிலேண்ட் நயாகரா,பிட்ஸ்பர்க், கிராண்ட் கான்யன் இதெல்லாம் போய் தீர்ந்தபின் அமெரிக்காவாக இருந்தாலும் இந்தியாவாக இருந்தாலும் வாழ்க்கையை ஓரிரு அறைக்குள் வாழ பழக வேண்டும்.
எல்லா வீட்டிலும் வாஷிங் மெஷின், டிஷ் வாஷர், மைக்ரோ வேவ்,வாக்குவம் கிளீனர் நான்கும் கட்டாயமாக இருக்கும்.
அங்கு செல்லும் வயதானவர்கள் எப்படி இருக்க வேண்டும்? எப்படி எல்லாம் இருக்கக் கூடாது?
திருமணம் முடிந்த பின்,அங்கு செல்லும் இளம் பெண்கள், அவர்களுடைய ஆசைகள்,எதிர்பார்ப்புகள்,
பின்னர் அவற்றை எப்படி எல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது,என்பது பற்றியும்,
அவர்களுக்கு குழந்தைகள் அங்கு பிறப்பதில் இருந்து ஸ்கூலில் சேர்த்து,அங்குள்ள அட்டகாச குழந்தைகளுக்கிடையே சோனி
பிச்சான் ஆக வளர்வது, மற்றும் வெஜிடேரியனா?நான் வெஜிடேரியனா?இந்தியனாகவா?அமெரிக்கனாகவா? எப்படி வளர்க்கிறது?என்பது பற்றி புரியாத நிலை, 
என்று அமெரிக்க சமூக,கலாச்சார, அரசியல், பொருளியல், வாழ்க்கையினை மற்றும் அங்கே வாழும் அமெரிக்க இந்தியர்களின் பல தரப்பினரின்,
பொதுவான பிரச்சனைகள் குறித்து சுஜாதா தனக்கே உரிய கூர்மையான பார்வையின் வழியாக சித்தரிக்கிறார்.
அங்குள்ள பத்திரிக்கைகள், இலக்கியங்கள், இன்டர்நெட் என்று நிறைய விஷயங்கள் எழுதியிருக்கிறார்.
படித்து தெரிந்து  கொள்ளலாம்.

நன்றி :


கருத்துகள் இல்லை: