27 நவ., 2021

நூல் நயம் : இறுதி யாத்திரை :- எம். டி. வாசுதேவன் நாயர் (தமிழில் :-கே. வி. ஷைலஜா)


***Reading Marathon  2021-50***

***RM.. ID.. # 00105***

**# *44--50* #**

புத்தகத்தின் பெயர்:-                இறுதி யாத்திரை
ஆசிரியர் :- எம். டி. வாசுதேவன் நாயர்
தமிழில் :-கே. வி. ஷைலஜா 

பக்கம்:- 176 

வெளியீடு :-வம்சி புக்ஸ் 
தொலைபேசி :-   *9445870995 

மனிதனுடைய வாழ்க்கையில் பலதரப்பட்ட கொண்டாட்டங்கள் வருவதும் போவதும்  இயற்கையே. அவற்றில் சில மறக்கமுடியாமல் உள்ளத்தில் குடி கொள்கின்றன. சில சிறிது காலத்தில் மறந்தே போய்விடுகின்றன. ஒரு** **திருமண விழாவிற்கோ அல்லது பிறந்ததின விழாவிற்கோ, அன்றி  ஒரு கோவில் திருவிழாவிற்கோ, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அங்கு சென்றபின் மனிதனின் மனம் பல திசைகளிலும் ஊடுருவிச் செல்வதை யாரும் சொல்ல மறுப்பார்கள். அவை** **நிகழ்காலமாகவும் இருக்கலாம் அல்லது ஏற்கனவே தனக்கு ஏற்பட்ட அனுபவமாகவோ அன்றி ஏற்பட்ட அவமானமாகவோ இருக்கலாம், இவற்றை மீள் சிந்தனைக்கு சில விநாடிகளில் ஆய்வு செய்து அதனை தனது சக மனிதர்களுடன் பங்கெடுப்பதில் முக்கிய  ஆர்வம் காட்டுவதில் மும்மரமாக இருப்பார்கள்.

அப்பா இறைவனிடம் போய் சேர்ந்து விட்டார். அவரை ஒவ்வொருதரும் எப்படிப் படுக்கவைக்கவேண்டும், குளிப்பாட்ட வேண்டும், இன்னும் யார் யார் வரவேண்டும், எப்படியான மரவிறகுகளைக் கொண்டு எரியூட்ட வேண்டும், யார் கடைசியாக கொள்ளி வைக்கவேண்டும் என்று, இது போன்ற சம்பாசனைகளுடன் ஆரம்பமாகிறது ***இறுதி யாத்திரை* **நாவல். வெவ்வேறு இடங்களில் வேலைபார்க்கும் **4 பிள்ளைகளும்** வந்தபின் தான் அப்பாவின்  இறுதிக் கிரிகைக்கள் ஆரம்பமாக இருக்கின்றன. அம்மா ஏற்கனவே இறைவனடி சேர்ந்துவிட்டார்.

**உண்ணி, அப்பு, ராஜா, குட்டேட்டன்,** ஆகிய 4 பிள்ளைகளும் வந்துவிட்டனர், பார்க்கவேண்டிய காரியங்களை செய்ய முன்வருகிறர் **சாத்துக்குட்டி மாமா.**

 தங்கள் சொந்த வீட்டிலிருந்து வெகு தூரத்தில் வேலைபார்க்கும், வசித்துவரும் பிள்ளைகள் அப்பாவின் மரணசடங்கிற்கு வந்தாலும் வழமைபோல், அப்பா எங்களுக்கு என்ன செய்தார் என்ற கேள்விகள் ஒவ்வொருதர் மனதிலும் மேகக் கூட்டங்கள் வந்து போவதுபோல் போய்க் கொண்டிருப்பதைப் போல ஆசிரியர் மிக யதார்த்தமாக நாவலைக் கொண்டு செல்கிறார்.

கடந்தகால நிகழ்வுகளைத் திருப்புகிறது நாவல். அப்பா இறந்ததிலிருந்து எரியூட்டும் வரை சமகால நிகழ்வுகளைச் சொன்னாலும் அவரது பூர்வீக வரலாற்றையே பார்க்க முடிகிறது. **அப்பாவின் பெட்டிக்குள் **என்ன மறைத்து வைக்கப்பட்டிருக்கும் என்பதனை ஆவலுடன் திறந்து பார்க்கவேண்டும் என்று அவசரப்பட்டபோது, இல்லை எல்லாம் முடியட்டும் அதன் பின் உடைக்கலாம் என்ற சம்மதத்துடன் பிற்போடுகிறார்கள் பிள்ளைகள். அதில் வாசிப்போராகிய எங்களுக்கும் ஒரு உத்வேகம் வரும்படி ஆசிரியர் நகர்த்துகிறார்.

வாசிக்கும் போது இந்நாவல் ஆசிரியரது சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் போல் ஊகிக்க முடிகிறது. அப்பாவின் வாழ்க்கை இலங்கையில் கண்டிக்கருகாமையில் அமைந்துள்ள அடிகண்ணாவ என்ற கிராமத்தில் அவர் மிகவும் கஷ்டப்பட்டு தனது சிறிய நிறுவனத்தை நடத்திவந்தார். கெ. என். நாயர் என்ற பெயரைக் கொண்ட அப்பா, எப்போதும் மற்றவர்களிடம் கையேந்தாத பழக்கமுடையவர். உண்ணி **சிலோன்** சென்றபோது, ஏற்பட்ட சங்கடங்களை அறிய, நாவலைப் புரட்டுங்கள்.

ஒருவன் இறந்த பின்னர், அவனது ஈமைச் சடங்கில் கலந்து கொள்ள வந்த அனேகமானவர்கள் அவனது பெருமைகளையும், வாழ்ந்த வாழ்க்கைத் தரத்தையுமே முணுமுணுப்பார்கள். ஆனால் சொந்தப் பிள்ளைகளோ, நிலத்தைக்கூட பங்குபோட நினைப்பார்கள். இறுதி யாத்திரை யின் போது மனதில் ஏற்படும் குழப்பங்களையும், சஞ்சலங்களையும் ஆசிரியர் எம். டி. வாசுதேவன் நாயர் வெளிக் கொண்டு வருவது மிகவும் பாராட்டத்தக்கது.

இந் நாவலை சிறந்த முறையில் மொழி மாற்றம் செய்துள்ள** கே. வி. ஷைலஜா **அவர்களுக்கு என் பாராட்டுகள்.. வாசிக்கும் போது நாங்கள் கூட அவரின் இறுதிப் பயணத்தில் பங்கேற்ற ஒரு பிரமையை ஏற்படுத்துகிறார் **ஷைலஜா** அவர்கள். இந்நாவலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும், தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு விதத்தில் கடந்தகால நினைவுகளை முன் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை... 

வாசியுங்கள்... மிக அருமையான நாவல்...

நன்றிகள்

பொன் விஜி - சுவிஸ்.

நன்றி :

Ms PON VIJI,
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

கருத்துகள் இல்லை: