10 ஜன., 2024

நூல் நயம்

சென்னை புத்தகக் காட்சி: சிறப்புப் பதிவு 3:
.......................................
*சொன்ன வார்த்தைகளின் இடையே சொல்லாத வார்த்தைகள்!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
.......................................
  *அகில இந்திய அளவிலும் அகில உலக அளவிலும் அறியப்படும் தமிழ் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. கும்பகோணத்திலிருந்து எழுத வந்தவர்களில் மிக முக்கியமான ஒரு படைப்பாளி. 

  முறையாகத் தமிழ் படித்தவர். `தமிழிலக்கியத்தில் வைணவம்` என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இந்த ஆய்வேடு இதே தலைப்பில் நூலாகவும் வெளிவந்துள்ளது. 

  சிலப்பதிகாரத்தை முழுதும் கற்றவர். அதன் வெளிப்பாடே `கொங்கைத் தீ` என்ற அவரது நவீன நாடகம். தமிழைக் கசடறக் கற்ற அவர், ஆங்கில இலக்கியத்திலும் ஆழங்கால் பட்டவர். 

 ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய தி. ஜானகிராமனிடம் பள்ளிப் பருவத்தில் இவர் கல்வி பயின்றிருக்கிறார்.

  (தி.ஜா.வின் மாணவர் இந்திரா பார்த்தசாரதி என்ற செய்தியைப் போல், இந்திரா பார்த்தசாரதியின் மாணவர் ஆதவன் என்ற செய்தியும் குறிப்பிடத் தக்கது.)

  `சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை` என நான்கு வகைகளில் இவரது எழுத்து நதி ஓடுகிறது. இன்னும் வற்றாத ஜீவநதியாகத் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. 

  அமுதசுரபி மாத இதழில் இப்போதும் இவர் மாதந்தோறும் எழுதி வருகிறார். `இந்திரா பார்த்தசாரதி பக்கங்கள்` என்ற தலைப்பில் இவரது எழுத்துகளை அமுதசுரபி பெருமையுடன் வெளியிட்டுவருகிறது. 

  தொண்ணூற்றி மூன்று வயதான இவர், தம் படைப்புகளைக் கணிப்பொறியில் அச்சுக்கோத்து மின்னஞ்சலில் பத்திரிகைகளுக்கு அனுப்பி வருகிறார் என்பது இன்றைய நவீன உலகத்திற்கு ஏற்ப அவர் தன்னை எப்படியெல்லாம் இசைவாகப் பொருத்திக் கொள்கிறார் என்பதன் அடையாளம்.  

 நாற்பது ஆண்டுக் காலம் தில்லியிலேயே பேராசிரியராகப் பணிபுரிந்ததால் அவரது படைப்புகளில் தில்லிக் களன் அதிகம். அரசியல் பின்புலனை மையமாக வைத்தே தமது பல நாவல்களை உருவாக்கியுள்ளார். 

   அதில் மிகத் தீவிரமான சமகால அரசியல் விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளார். 

 அவரது தொடக்க கால நாவலான `தந்திரபூமி`, அவரின் நெருங்கிய நண்பரான நா. பார்த்தசாரதியின் தீபம் மாத இதழில்தான் தொடராக வெளியாயிற்று. அந்த நாவலில் இந்திராகாந்தி ஒரு பாத்திரமாக வருகிறார். 

  சாகித்ய அகாதமி விருது, சரஸ்வதி சம்மான் விருது என்ற முக்கியமான இரு அகில இந்திய விருதுகளைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் இவர் மட்டுமே. தமிழக அரசு விருதையும் பெற்றிருக்கிறார். 

 போலந்து நாட்டில் வார்சா பல்கலைக் கழகத்தில் சில ஆண்டுகளும், பின்னர் புதுச்சேரி பல்கலைக் கழக நாடகத் துறையில் சில ஆண்டுகளும் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். 

  (இவர் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த காலத்தில் அங்குள்ள நாடகத் துறை `சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளி` என அழைக்கப்பட்டது. தற்போது அந்தப் பெயர் நீக்கப்பட்டு நாடகத் துறை என்று மட்டுமே அழைக்கப்படுகிறது.) 

 இ.பா. பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றவர். இந்திய அரசு `பத்மஸ்ரீ` விருது கொடுத்து இவரை கெளரவித்துள்ளது. 

  பதினேழுக்கும் மேற்பட்ட நாவல்கள், ஆறுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள், நாடகங்கள், கட்டுரைகள் என இவர் படைத்த எழுத்துகள் ஏராளம்.

   `காலவெள்ளம், குருதிப் புனல், தந்திர பூமி, சுதந்திர பூமி, தீவுகள், வெந்து தணிந்த காடுகள், திரைகளுக்கு அப்பால், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன` உள்ளிட்ட இவரது பல நாவல்கள் தமிழ் வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தவை. 

இவர் எழுதிய முதல் சிறுகதையே ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரமாகியது. 

 கணையாழியில் வெளியாகி சாகித்ய அகாதமி பரிசுபெற்ற இவரது `குருதிப்புனல்` நாவல் கீழ்வெண்மணி படுகொலை பற்றிப் பேசுகிறது. `தீவுகள், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன` உள்ளிட்ட இவரது பல நாவல்கள் கல்கி வார இதழில் தொடராக வெளிவந்தவை.

   `திரைகளுக்கு அப்பால்` என்ற நாவல் தினமணிகதிரில் சாவி ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் தொடராக வெளியாயிற்று. 

  சாதனை படைத்த எழுத்தாளர் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். சிறுகதை, நாவல் ஆகிய இரு துறைகளிலும் கூட இவருடைய பலம் என்பது அவற்றில் வரும் உரையாடல்கள்தான். 

  எனவே உரையாடலையே பிரதானமாகக் கொண்ட நாடகத் துறையில் இவரால் அதிகம் சாதிக்க முடிந்ததற்கு இவரது பலம் எதில் என்பதை இவர் உணர்ந்து கொண்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். 

 தி. ஜானகிராமன், `வடிவேலு வாத்தியார், நாலு வேலி நிலம்` ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர். கு. அழகிரிசாமியின் கம்பரின் வரலாற்றைக் கூறும் `கவிச்சக்கரவர்த்தி` நாடகம் புகழ் பெற்றது.

 மகாபாரதப் பாத்திரமான கர்ணனைக் கதாநாயகனாகக் கொண்டு பி.எஸ். ராமையா எழுதிய `தேரோட்டி மகன்` என்ற நாடகம் தமிழில் தடம் பதித்த நாடகம். 

  இவர்களெல்லாம் நாடகங்கள் ஓரிரண்டு எழுதினார்களே தவிர நாடகத் துறையில் எண்ணிக்கை சார்ந்து அதிகம் முயலவில்லை. இவர்கள் நாவலாசிரியர்களாகவும் சிறுகதை ஆசிரியர்களாகவுமே அறியப்படுகிறார்கள். 

 இவர்களுக்கு இணையாக வைத்துச் சொல்லப்படக் கூடிய இலக்கிய ஆளுமையான இந்திரா பார்த்தசாரதி, நாவல், சிறுகதைத் துறைகளுக்கு மட்டுமல்லாமல், நாடகத் துறைக்கும் கணிசமான அளவில் பங்களிப்புச் செய்துள்ளார். 

  அதனால் சிறுகதை, நாவல் ஆசிரியராக மட்டுமல்லாமல், நாடக ஆசிரியர் என்றும் இந்திய அளவில் அறியப்படும் பெருமையைப் பெற்றுள்ளார். இவரது நாடகங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தி மேடை நாடகங்களாகவும் அரங்கேறியுள்ளன.  

 `பசி, மழை, போர்வை போர்த்திய உடல்கள், கால யந்திரங்கள்` உள்ளிட்ட சமூக நாடகங்கள், `கிங்லியர், அவுரங்கசீப், ராமானுஜர்` போன்ற வரலாற்று நாடகங்கள் எனப் பதினைந்து  நாடகங்களுக்குமேல் எழுதியவர்.  

    `நந்தன் கதை` போன்ற இவரது சில நாடகங்கள் ஏராளமான முறை மேடையேறியவை. 

   இந்து முஸ்லிம் நல்லிகண்ணத்தைப் பிரதானப்படுத்தி இவர் எழுதிய `அற்றது பற்றெனில்` என்ற சிறுகதை இலக்கியச் சிந்தனை அமைப்பின் ஆண்டுப் பரிசைப் பெற்றது. அந்தச் சிறுகதை அமுதசுரபி மாத இதழில் வெளிவந்த கதை. பின்னர் அது இலக்கியச் சிந்தனை அமைப்பின் ஆண்டு விழா ஒன்றில் மேடை நாடகமாகவும் நடிக்கப்பட்டது. 

 இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துகள் பலவும் உளவியல் ரீதியாக மனிதர்கள் எப்படியெல்லாம் இயங்க நேர்கிறது என்பதையும் மனிதர்கள் எப்படிச் சூழ்நிலையின் கைதிகளாக உள்ளார்கள் என்பதையும் ஆராய்பவை. 

  (குருதிப்புனல் நாவல் கூட கீழ்வெண்மணி படுகொலைச் சம்பவம் குறித்து உளவியல் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதுதான்.) 

 இ.பா.வின் படைப்புகள் நவீன வாழ்வின் இறுக்கங்களைப் பற்றிப் பேசுபவை. இன்றைய நடுத்தர வர்க்கத்தின் மன உளைச்சல்களைப் பதிவு செய்பவை. 

  இவரது `உச்சி வெய்யில்` என்ற குறுநாவல், லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டம் வெளியிட்ட `அறுசுவை` என்ற தொகுப்பில் இடம்பெற்றது. 

  அதுவே நடிகர் சிவகுமார் கதாநாயகனாக நடிக்க, கே.எஸ். சேதுமாதவன் இயக்க்ததில் `மறுபக்கம்` என்ற தலைப்பில் திரைப்படமாக வெளிவந்து நான்கு தேசிய விருதுகளைப் பெற்றது. 1990ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. 

   இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளை ஆய்வுசெய்துதான் நான் முனைவர் பட்டம் பெற்றேன். அதன்பொருட்டு அவர் நாடகங்களையும் நாவல்களையும் சிறுகதைகளையும் பலமுறை படித்தேன்.

   ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதிது புதிதான அனுபவங்களை அந்தப் படைப்புகள் கொடுத்தன. 

   இ.பா. பூடகமாக எழுதுவதாலும் சொன்ன வார்த்தைகளின் இடையே சொல்லாத வார்த்தைகளுக்கு வழி விடுவதாலும் அவரது படைப்புகள் பலமுறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிய புதிய அர்த்தப் பரிமாணம் கொள்கின்றன. 

  இந்தப் பண்பையே அவரது எழுத்தின் முக்கியச் சிறப்பு என்று சொல்ல வேண்டும். 

 இந்தப் பண்பு இ.பா.வின் வேர்ப்பற்று நாவலிலும் உண்டு. கணையாழியில் தொடர்கதையாக இடம்பெற்ற அதை நாவல் என்பதா, அல்லது சுயசரிதை என்பதா என்ற கேள்வி எழுகிறது. 

  இரண்டுக்கும் இடைப்பட்டது என வைத்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட காலத்துச் சமூக மற்றும் அரசியல் சூழலை இந்த நாவல் தன் பக்கங்களில் சிறைப்பிடித்துள்ளது. 

  சமகால அரசியல் அந்தந்தக் காலத்துச் சமூகத்தின்மேல் செலுத்தும் தாக்கத்தை இப்படைப்பு வரிவரியாக விளக்குகிறது. 

  இந்தப் படைப்பைப் படித்து முடிக்கும்போது ஒரு குறிப்பிட்ட காலத்து அரசியல் மற்றும் சமூக வெள்ளத்தில் முங்கிக் குளித்துக் கரையேறியதுபோன்ற அனுபவம் ஏற்படும். 

  இ.பா.வின் தனித்த எழுத்து முத்திரைகளை இந்த நாவலெங்கும் வாசித்து அனுபவிக்கலாம். `வேர்ப்பற்று` என்ற இந்த நாவலுக்கு இந்தத் தலைப்பை விட வேறு எந்தத் தலைப்பும் இத்தனை பொருத்தமாக இருந்திருக்க இயலாது. 

*வேர்ப்பற்றைப் புத்தகமாக வெளியிட்டுள்ள சிறுவாணி வாசகர் மையத்திற்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.* 
......................................
நன்றி:

கருத்துகள் இல்லை: