சிக்மண்ட் ஃப்ராய்டின் ‘நாகரிகமும் அதன் அதிருப்திகளும்’
Sigmund Freud’s ‘Civilisation and its discontents’
———
எம்.டி.முத்துக்குமாரசாமி
———————-
1930 இல் முதன் முதலில் பிரசுரமான சிக்மண்ட் ஃப்ராய்டின் ‘நாகரிகமும் அதன் அதிருப்திகளும்’ என்ற நூல் அவரது புத்தகங்களில் நான் அடிக்கடி வாசிக்ககூடிய நான்கு நூல்களுள் ஒன்று. ‘நாகரிகமும் அதன் அதிருப்திகளும்’ மனித மனதின் துயருற்ற கனவெனவே நம் முன் விரிகிறது. அதுவரை தனிமனித மனத்தின் ஆழங்களையும் அவற்றின் கலங்கிய நீரோட்டங்களையுமே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த ஃப்ராய்ட் இந்நூலில் மனித நாகரிகத்தைப் பற்றிய தன் பார்வையை முன்வைக்கத் தலைப்படுகிறார். ஒரு அறுவை சிகிக்சை நிபுணரின் துல்லியத்துடனும் ஒரு கவிஞனின் ஒளி நிரம்பிய பார்வையுடனும் ஃப்ராய்ட் மனித நாகரிகத்தின் மையத்தில் தளைகளற்ற மனித ஆசைகளுக்கும் நாகரிகத்தின் அதிகாரம் மிக்க விதிகளுக்கும் இடையில் இருக்கும் என்றுமே தீர்க்கவியலாத முரண்களையும் மோதல்களையும் சொல்கிறார். மனிதனின் உள்ளார்ந்த விழைவுகளான மேலாண்மை நாட்டமும் (aggression) தன்னழிவுக்கான ஆசைகளும் (self destruction) பண்பாடுகளின் இரும்புக்கூண்டிற்குள் சிக்கியிருக்கும் கதையை ஃப்ராய்ட் மெலிதான வருத்தம் தோய்ந்த மொழியில் சொல்கிறார்.
ஃப்ராய்டின் உரைநடை விலகலுடையதாகவும் அதே சமயத்தில் மனிதனின் மேல் கொண்ட அன்பின் அக்கறையால் சுமையேறியதாகவும் இருக்கிறது. ஓரிடத்தில் அவர், “ நாம் இவ்வுலகில் எதிர்கொள்ளும் வாழ்க்கை கடினமானதாக இருக்கிறது; அது ஏராளமான வலிகளையும், ஏமாற்றங்களையும், நிறைவேற்ற இயலாத வேலைகளையும் நமக்குத் தருகிறது. அவற்றைத் தாங்கிக்கொள்ள நாம் மேலோட்டமான மருந்துகளால் தீர்வு காண இயலாது. அப்படிப்பட்ட மேலோட்டமான மருந்துகள் முன்று; சக்தி வாய்ந்த பதிலீடுகள், போதையேற்றும் பொருட்கள், வேறு பல திசைத் திருப்பல்கள். “ என்று எழுதுகிறார். இப்படிப்பட்ட நிலையை வைத்து நாம் மனித நாகரிகம் பகுத்தறிவின் பாற்பட்டு முன்னேறிவந்திருப்பதாகச் சொல்ல முடியாது; அது ஒரு விதமான இருத்தலியல் மூச்சுத்திணறலில் இருக்கிறது; தனது மூச்சுத் திணறலை அனுமானிக்கவும் அதற்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கவும் முயற்சி செய்து செய்து தோற்றுக்கொண்டிருக்கிறது.
ஃப்ராய்டினுடைய அடிப்படை ஆய்வுக்கருதுகோளாக அடிமனதின் தன்னுணர்வான ஆசைகளுக்கும் நாகரீகத்தின் ஒடுக்கும் விசைகளுக்கும் இடையில் எழும் தொடர்ந்த, கடும் மோதல்களைச் சொல்லலாம். அடிமனது நம் ஆதித் தேவைகள், தூண்டுதல் விசைகள், தீவிர காம உணர்ச்சிகள் ஆகியவற்றின் நீர்த்தேக்கம்; எப்போது பீறிட்டு உடையும் என்று சொல்ல முடியாது. நாகரீகம் என்பதோ சமூகத்தின் விதிகள், சட்டங்கள், தணிக்கைகள், தடை செய்யப்பட்டவைகளின் தொகுப்பு ஆகியவை அடங்கியது. ‘மானுட விடுதலை என்பது நாகரீகத்தின் பரிசல்ல’ என உரக்க அறிவுறுத்தும் ஃபிராய்ட் நாகரீகத்தின் வளர்ச்சிக்கு முந்தைய ஆதி மனிதன் இப்போதைய மனிதனை விட அதிக சுந்ததிரவானாக இருந்தான் என்று எழுதுகிறார்.
தனி மனிதனின் ஆதி அடி மனதிற்கும் நாகரீகத்தின் கட்டுப்படுத்தும் விசைகளுக்கும் இடையே உள்ள மோதலை ஃப்ராய்ட் இரண்டு உந்துவிசைகளாகப் போராட்டமாகப் பெயரிடுகிறார் ஈராஸ் (Eros) உயிர் உந்துணர்வு அல்லது உயிர் விசை; அது நம்மை சக மனிதத் தொடர்புக்கும், இன்பத்திற்கும் படைப்பிற்கும் சதா நம்மைத் தள்ளிக்கொண்டே இருக்கிறது. அதற்கு நேரெதிரானது தானடோஸ், (Thanatos) இறப்பு விருப்பு; இந்த இருண்ட அழிவு சக்தி சக மனிதனின் மேல் மேலாண்மையை (aggression) நிறுவுவதற்கும் தன்னைத் தானேயும் பிறரையும் அழிக்க சதா தூண்டிக்கொண்டிருப்பது. நாகரீகம் இந்த இரண்டு கட்டுப்படுத்த இயலாத தனி மனித விழைவுகளையும் (desires) சமூகப் பாதுகாப்பையும், ஒழுங்கு நிரைந்த நற்சமூகத்தையும் தருவதாக ஆசை காட்டி தொடர்ந்த உழைப்பு, அதற்கான புகழ் சன்மானம் என வெகுமானங்களைக் கொடுத்து அடிபணிய வைக்கிறது. அடிமனித ஆசைகளுக்கும், நாகரீகம் தரும் வெகுமானங்களும் இடையிலான பண்டமாற்றிற்குக் கடுமையான விலையைத் தனிமனிதன் தரவேண்டியிருக்கிறது. ஒரு மனிதன் இன்னொரு சக மனிதனை நாகரீகத்தின் சட்டகத்திற்குள் சந்தித்த மறு கணமே அடுத்தவனை அடிமை கொள்ள யத்தனிக்கிறான். தனி மனிதனின் படைப்பு சக்தியான ஈரோஸ் அவனைக் கலை இலக்கியம் அறிவியல் என மட்டுறுத்துகிறது (sublimation) என்றால் இன்னொரு அழிவு சக்தியான தானடோஸ் பொறாமை, போட்டி, வெகுமானங்களை அடைவதற்கான சலிப்பற்ற இயக்கம் என அவனுடைய மகிழ்ச்சியைப் பறித்துவிடுகிறது. தனிமனிதனின் மகிழ்ச்சியைப் பறித்துக்கொள்வதில்தான் ஒரு நாகரீக சமூகத்தின் நிலைத்திருப்பதற்கான அடிப்படை அமைந்திருக்கிறது. ஃப்ராய்ட், மகிழ்ச்சி பறிபோவதால் தொடர்ந்து திருப்தியின்மையால் தவிக்கும் தனி மனிதர்களால் ஆன சமூகத்தை நம் கண் முன்னால் நிறுத்துகிறார்.
ஃப்ராய்ட் தன்னுடைய ஆய்வில் மதங்களையும் விட்டுவைப்பதில்லை. மதத்தை வலி நிவாரணியாகவும் விஷமாகவுமே ஃப்ராய்ட் பார்க்கிறார். ‘நாகரீகமும் அதன் அதிருப்திகளும்’ நூலில் ஓரிடத்தில், ஃப்ராய்ட் ‘ தொடர்ந்து இவ்வுலக வாழ்க்கையை மரணத்திற்குப் பின்னான இன்னொரு வாழ்க்கைக்குத் தயார் செய்வதாக மாற்றும் மதம் என்ன நோக்கத்தை நிறௌவு செய்ய இயலும்’ என வினவுகிறார். இறப்பிற்குப் பின்னான இன்னொரு வாழ்க்கை எனும் பொய்மை மதங்களை நிலைநிறுத்துகிறது. இங்கே சமூகத்தில் நிலவும் ஏற்ற தாழ்வுகளை சகித்துக்கொள்ள மதங்கள் உதவி செய்கின்றன. இறப்பிற்குப் பின்னான சொர்க்கம் என்பது சமூக கட்டுப்பாட்டுக்கான நாகரீகத்தின் கருவி. குரூரமாகவும், சந்தர்ப்பங்களாலும், அசந்தர்ப்பங்களாலும் வழி நடத்தப்படுவதாகத் தோன்றுகின்ற மனித வாழ்க்கையை, சகித்துக்கொள்ளக் கொடுக்கப்படும் சில கருத்தாக்க உதவிகளே, இனிப்பு மிட்டாய்களே மதங்களும் அவற்றின் மெய்யியல்களும்.
‘நாகரீகமும் அதன் அதிருப்திகளும்’ ஒரு அடக்கி ஒடுக்கப்பட்ட கனவுகளின் தொகுப்பு போலவே வாசிக்கக்கிடைக்கிறது. மேதைமையோடு ஃப்ராய்ட் ஒரு சமூகம் ஒழுங்காக இயங்குவதற்கு மன அளவில் நாம் கொடுக்கும் விலைகளை, நமது சமரசங்களை அதனால் உருவாகும் குற்ற உணர்வையும் படம் பிடித்துக்காட்டுகிறார். ஃபூக்கோவின் சிந்தனையான பண்பாட்டு அதிகாரத்தை ஒவ்வொருவரும் அகவயப்படுத்திக்கொள்ளுதலைப் பற்றிய சில முன்னோடி சிந்தனைகளையும் ஃப்ராய்டின் ‘நாகரீகமும் அதன் அதிருப்திகளும்’ நூலில் நாம் வாசிக்கிறோம்.
‘நாகரீகமும் அதன் அதிருப்திகளும்’ மனித நிலையின், மனித விலங்கு மனதின் நிழல் மூலைகளை நோக்கிய பயணம். அந்த நனவிலியின் இருள் மூலைகளை ஒளியூட்டுவதன் மூலம் ஃப்ராய்ட் நம்மை நாமே அறிந்துகொள்ள முடியும் என நம்பினார் என்று கருதுவதற்கு இடமிருக்கிறது. மனித மனதின் இடையறாத துன்பத்திற்கும் அதன் அதிருப்திகளுக்கும் மூன்று காரணங்களை ஃப்ராய்ட் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொல்கிறார். ஒன்று இயற்கையின் பேருரு; இயற்கையின் பேருருவிற்கு முன்னால, மனிதன் தூசாக நிற்கிறான்; அவனுடைய அறிவோ, அவனுடைய தொழிநுட்பங்களோ ஓரளவிற்கு மேல் பயனற்று ஓய்ந்துவிடுகின்றன. இரண்டாவது நமது உடல்களின் அழியக்கூடியத் தன்மை. இறப்பை நோக்கியும் அழிவையும் சிதைவையும் நோக்கி சதா நகர்ந்துகொண்டிருக்கும் உடல் எப்படி நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்? இவை இரண்டையும் விட அதிகமாக மிக ஆழமாகக் காயங்களையும் விடுபடவே இயலாத நரக வேதனையையு தருபவை நாம் பழகும் சக மனிதர்களே என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார். நாகரீகம் தன் ஒழுங்கைக் காப்பற்றிக்கொள்ள உருவாக்கும் போட்டிகளும் பொறாமைகளும் வெகுமானங்களும் நிராகரிப்புகளும் ஒரு மனிதன் தன் சக மனிதனை அடித்துக்கொல்வதற்கான, காயப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும். ஃப்ராய்ட் பாலியல் விழைவுகளை உயிர் உந்து சக்தியான ஈரோஸுக்கும் இறப்பு உந்து சக்தியான தானடோஸூக்கும் பொதுவானதாகக் கருதுகிறார் என்பதும் நாம் கவனிக்க வேண்டியது .
மொத்தத்த்தில் ஃப்ராய்டின் ‘நாகரிகமும் அதன் அதிருப்திகளும்’ ஒரு meloncholic masterpiece; கலாச்சார இலக்கிய ஆய்வுகளுக்கு ஒரு மூல நூல். அடிப்படையான பிரதி.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக