குற்றாலம் - நெல்லையப்பனின்
பயணக் கட்டுரை
மந்தி சிந்து கனிகளுக்கு வான்
கவிகள் கெஞ்சும் என்று திரிகூட ராசப்பக் கவிராயர் அன்று பாடிய குற்றாலம் எப்படி
இருந்தது என்று யாம் அறியோம். குறவஞ்சி காட்டும் குறி சொல்லும் குறத்தி கண்ணில்
படுகிறாளா என்று குற்றாலம் முழுவதும்
தேடியும் பலனில்லை.
குற்றாலநாதர் ஆலயம் 2000 ஆண்டுகள்
பழமையானது என்று ஆலயத்திற்குள் புதிய ப்ளெக்ஸ் பேனர் வைத்திருப்பது நல்ல முரண்.
மேலும் வைணவ ஸ்தலமாக இருந்த குற்றாலத்தை அகத்தியர் சிவஸ்தலமாக மாற்றியதாக அது
சொல்வது அகத்தியருக்கு பெருமை சேர்ப்பதாய் இல்லை. அகத்தியர் இது போன்ற வேண்டாத
வேலைகளையெல்லாம் செய்திருப்பாரா என்று உங்களைப் போலவே எனக்கும் சந்தேகம்
இருக்கிறது. தகவலின் நம்பகத்தன்மை குழல் வாய் மொழி அம்மைக்கே வெளிச்சம்.
தென்காசி பழைய பேருந்து
நிலையத்திலிருந்து இலஞ்சி, மேலகரம் வழியாக சின்னப் பேருந்தில் இரவு 10 மணிக்கு
குற்றாலம் வந்து தனியாக இறங்கிய போது, எந்த வித முன்னேற்பாடும் செய்யாமல்
வந்ததால் கொஞ்சம் பதற்றம் தான். கொட்டும்
அருவிக்கு அருகில் 600 ரூபாய்க்கு நல்ல அறை கிடைத்தது அதிஷ்டம் தான்.
பஞ்ச பூதங்களில் நான்கை நன்கு
அனுபவிக்க சீசனில் குற்றாலம் வந்து ஒரு மூன்று நாட்களாவது தங்குங்கள் என்று
உங்களுக்கு சிபாரிசு செய்யும் வண்ணம் இந்த சுகானுபவம் வாய்த்தது.
நொங்குப் பதனியும், சிறிய சுரைக்காய் அளவில்
பேரிக்காயும், மங்குஸ்தான் பழமும், ஸ்ரீவில்லிபுத்தூர் சொசைட்டியின் பில்ட்டர்
காபியும், இன்ன பிறவும் உபரி சுகங்கள். ரோட்டோர கடையில் சாம்பிள் கொடுத்த
ஜாதிக்காய் ஊறுகாயும் தான். போனால் போகிறது. ஜாதி இருந்து விட்டுப் போகட்டும்
ஊறுகாயில் மட்டும்.
குற்றாலத்தில்
இறங்கும் போதே கிடைத்த முதல் செய்தி, வெள்ளப் பெருக்கு காரணமாக அருவியில்
குளிக்கத் தடை. மகாத்மா காந்தி சொன்னது ஞாபகம் வந்தது. ஒருமுறை காந்தியார்
திருக்குற்றாலம் வந்திருந்த போது அவரை அருவிக்கு அழைத்துச் சென்றனர் நீராட.
நீராடுமுன் மகாத்மா கேட்ட கேள்வி- “இந்த அருவியில் தாழ்த்தப் பட்டோர் நீராட அனுமதி
உண்டா?”.
இல்லை என்று பதில் வரவே, அவர்கள் குளிக்க
அனுமதி கிடைத்த பிறகு நான் குளிக்கிறேன் என்று நம் தேசப் பிதா அருவியில்
குளிக்காமலேயே வந்து விட்டார். அது அன்று பெருக்கெடுத்து ஓடிய ஜாதி உணர்வுக்கு
காந்தி போட்ட தடை. இது வெள்ளப் பெருக்குக்கு அரசு போட்ட தடை.
வெள்ளப் பெருக்கு
காரணமாக பஞ்ச பூதத்தில் முதன்மையான “நீரை” அன்று இரவு அனுபவிக்க முடியவில்லை. மாறாக, தங்கும் விடுதியில், இரண்டாவது மாடியில், நீண்ட
வராண்டாவின் முடிவில், கொட்டும் அருவி கண்ணுக்கு நன்கு தெரியும் இடத்தில்
நாற்காலியில் வசதியாக அமர்ந்து கொண்டேன். கண்ணுக்கு விருந்தாய் ஆர்ப்பரிக்கும்
அருவியும், காற்றின் கூத்திற்கு ஆடிய பெரு மரங்களும், அதற்கு இணையாய் TABTabTabTab- இல் இருந்து பிரவாகமாய் பெருகி வழிந்த நல் இசையும், பின் பாதியில்
சேர்ந்து கொண்ட சாரலும் –விடிய விடிய களியாட்டம் தான். என்ன... பத்தினிப் பெண்
மட்டும் பக்கத்தில் இல்லை.
மறுநாள் தடை நீங்கியதும் வட்டியும் முதலுமாக ஒவ்வொரு அருவியிலும் மாறி
மாறி குளித்துக் களித்தேன். குற்றாலத்தில் இரண்டு அறிவிப்புகள் கவனம் ஈர்க்கின்றன
. ஒன்று வனத்துறை. மற்றது காவல் துறை. குரங்குகளுக்கு உணவளித்து அவற்றை
கெடுக்காதீர்கள். அவைகளின் உணவு வனங்களில் உள்ளது என்ற அறிவிப்பு எனக்கு புதிய
செய்தி. சிந்திக்க வேண்டிய விஷயமும் கூட.
1.
பொது இடங்களில் மது
அருந்தாதீர்கள்.
2.
நகையணிந்து அருவியில்
குளிக்கக் கூடாது.
3.
வனங்களுக்குள்
அனுமதியின்றி செல்ல வேண்டாம்.
4.
அருவியில் சோப்பு,
ஷாம்பு, எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.
5. அருவியில் பெண்கள்
பகுதிக்கு ஆண்களும், ஆண்கள் பகுதிக்கு பெண்களும் கண்டிப்பாக செல்லக்கூடாது
-காவல்துறையின் இந்த அறிவிப்பு, பலகையுடன் நில்லாது ஒலி
பெருக்கியிலும் குற்றாலம் முழுவது ஒலிக்கிறது. “காவல்துறை உங்கள் நண்பன்” என்று மிரட்டும் குரலில் ஒலிக்கும் போது தென்கச்சியார் அருமை
புரிகிறது.
காற்று இரண்டு
நாட்களும் சுழற்றி சுழற்றி அடித்தது. ரசிகமணி டி.கே.சி மகாரசிகர் தான். அவர்தானே குற்றாலத்தையும் கம்பனையும்
உயர்த்திப் பிடித்தவர். குற்றாலத்தில் அவர் வீட்டில் நடந்த “வட்டத்தொட்டி” இலக்கிய கூட்டங்களும், இலக்கியத்திற்கு இணையாய் அங்கு நடந்த வாசனை
மிகு சமையல் பற்றியும் படித்தது ஞாபகம் வருகிறது.
பெரிய அருவி,
ஐந்தருவி இவைகளின் பிரம்மாண்டம் தாண்டி அமைதியாய் விழும் சிற்றருவியில்
குளித்ததுதான் முதல் தரமாய் அமைந்தது. பெரிய அருவி, ஐந்தருவி இவைகளின் முகப்பு
முழுவதும் கமர்சியல் ஆகிவிட்ட நிலையில், வனம் சூழ் சிற்றருவிக்கே என் வாக்கு.
சிற்றருவிக்கு செல்லும் வழியில் அருவிக்கு படியேறும் இடத்தில் உள்ள பெரிய மரமும்,
அதன் வட்ட மேடையும் அருமையான இடம். விட்டால் அப்படியே உறங்கி விடலாம். “ஆசை முகம்
மறந்து போச்சே!” வையும் “எப்படி பாடினரோ” வையும் செவிக்குணவாய் தந்து இந்தக் கட்டுரையின் முக்காலே மூனு வீசம்
பகுதியை நான் எழுதியது அந்த மேடையில் இருந்து தான்.
குற்றாலத்தில் நான்
கவனித்த ஒரு ஆச்சர்யம்: ஆண்கள், பெண்கள், சிறியவர், பெரியவர் அனைவரும் தங்கள்
நடை,உடை,பாவனை பற்றி பெரிய பிரக்ஞை இன்றி வெகு இயல்பாய் குளியல் உடையில், ஈர
உடையில் எல்லா இடங்களிலும் பவனி வருவது. அது குற்றாலம் மட்டுமே கொடுத்த
சுதந்திரம். நான் எடுத்திருக்கும் வீடியோ பல இடங்களில் தரையையும், கால்களையும்
காட்டுவது, எதிரே வரும் ஈர உடை பெண்களை நான் படம் பிடிக்க விரும்பவில்லை என்றோ,
அல்லது புதிய இடத்தில் வம்பு எதற்கு என்றோ, உங்கள் மனம் போல் சரியாகவோ, தவறாகவோ
நீங்கள் புரிந்து கொள்ளலாம். அல்லது காமிரா நாணித் தரை நோக்கியதாக சமாதானமாய்
முடித்து விடலாம்.
பெரிய அருவியில்
இரவில் வெள்ளை வெளேரென்று பால் போல் பொங்கும் தண்ணீர், ஒரு ஓரத்தில் பிரிந்து
தனியே விழுவது, ஏதோ லிங்கத்திற்கு
பாலாபிஷேகம் நடப்பது போல் தெரிவதாக நான் சொன்னால் நாத்திக நண்பர்கள்
என்னைக் கோபிக்கக் கூடாது. சொல்லப் போனால் அந்த மலையே ஒரு இஷ்ட தெய்வம் போலவும் அதற்கு துவந்த ஸ்படிக நீராபிஷேகம்
நடப்பதாகவும் உங்களால் உணர முடிந்தால், வாழ்க்கையில் முக்கியமான கட்டத்திற்கு
தாங்கள் வந்து விட்டதாக அர்த்தம்.
நம் பன்னாட்டு
நிறுவனங்களுக்கு நான் ஒரு பரிந்துரை
செய்கிறேன். தங்கள் ஊழியர்கள் மன அழுத்தம் குறைய, பயிற்சி வகுப்புகளையும்,
மாதந்திர, வருடாந்திர ரிவ்யு கூட்டங்களை குற்றாலத்தில் நடத்துங்கள். இடைவெளி
குறையும். கருத்து வேறுபாடுகள் மறையும். ஒரே குடும்பமாய் உணர்வார்கள். நீங்கள்
எதிர்பார்ப்பதை விட நல்ல பலன் கிடைக்கும்.
மற்றபடி மழையில்
நனைந்ததும், நடுரோட்டில் கண்டெடுத்த அலைபேசியை உரியவரிடம் சேர்த்ததும், என்னை
புலியருவிக்கு அழைத்துப்போன ஆட்டோ ஓட்டுனர், தான் எடுக்கும் படத்தில் எனக்கு
நடிக்க விருப்பமா எனக் கேட்டதும், (படம் பெயர் டாஸ், ப்ளெக்ஸ் போஸ்டர்
ஆட்டோவில் இருந்தது, நம்ம ஸ்டாலின்
மகனுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்), பயணத்தில் எதையும் தொலைக்காமல் வீடு
வந்ததும் குற்றாலத்திற்கு தொடர்பில்லாத விஷயங்கள். (சிற்றருவியில் மறந்து
வைத்துவிட்ட பிசாத்து ஒற்றை ஈர உள்ளாடையை கணக்கில் கழித்துவிடலாம்- திருஷ்டி
கழிந்தது போங்கள்!)
உடலும், மனமும்,
புத்துணர்வால் நிறைந்திருக்க, பிரியா விடை பெற்று குற்றாலம் பேருந்து நிலையம்
எதிரில், செங்கோட்டை வண்டியை நிறுத்தி, அதில் நான் ஏற முயல, என்னை தள்ளிக்கொண்டு
இரண்டு பெண்கள் கீழே இறங்கினார்கள். தலையில் சிறிய கொண்டை, நெற்றியில் பெரிய
பொட்டு, கிராமத்து நூல் புடவை, தோளில் நார் கூடை, இருவர் கையிலும் ஒரே அளவான
சின்னக் கறுப்புக்கோல் – குறிக்கோல்?
-மல்லாடி
நெல்லையப்பன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக