22 அக்., 2014

இன்று ஒரு தகவல்-42: சொர்க்கமாக மாறிய 'குஜராத் கூவம்'



சொர்க்கமாக மாறிய 'குஜராத் கூவம்'

‘கூவம் என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது சென்னையில் ஓடும் சாக்கடை ஆறுதான். கூவம் என்பது ஓர் அழகான ஆறாக இருந்தது; அது இன்று மாசுபட்டுக் கிடக்கிறது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஓடும் சபர்மதி நதிகூட நமது கூவம் ஆற்றைப்போன்றே சாக்கடை ஆறாகத்தான் ஓடியது. ஆரவல்லிப் பள்ளத்தாக்கிலிருந்து பல அணைகளைக் கடந்து அகமதாபாத்துக்கு வரும் இந்த நதி, வருடத்தில் பல மாதங்கள் தண்ணீரே இல்லாமல் கிரிக்கெட் விளையாடும் இடமாகப் பயன்பட்டு வந்தது. நகரின் சாக்கடை நீர் மட்டுமின்றி தொழிற்சாலைக் கழிவுகளை கொட்டும் இடமாகவும் இருந்தது.
அன்றாடம் காய்ச்சிகள், நகர்ப்புற வறுமையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்நதியின் கரையோரத்தில் கணிசமான அளவு குடியேறியிருந்தனர். எப்போதாவது திடீரென்று நிகழும் வெள்ளப்பெருக்கால், அந்த மக்களும் அவர்களின் உடமைகளும் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகின. எப்போதாவதுதானே தண்ணீர் வரும் என்பதால் அங்கு வாரச் சந்தையும் கூடியது. எதற்கு வெட்டியாக இடத்தை விட்டுவைப்பது என்று அதனை ஆக்கிரமிக்கும் கூட்டம் வேறு.

ஆனால், எட்டே ஆண்டுகளுக்கு உள்ளாக, அந்த நதி அடியோடு மாறிவிட்டது. முன்பு, ஜீவனற்று மெல்ல மெல்லச் செத்துக்கொண்டிருந்த நதி, இப்போது வற்றாத ஜீவநதி ஆகிவிட்டது. 10.6 கி.மீ தூரத்துக்குச் சலசலவென நிற்கும் சுத்தமான நீர், மனத்துக்கு மகிழ்ச்சி ஊட்டுவதோடு நகருக்குப் புதுப் பொலிவையும் கொடுக்கிறது.
நதியின் துர்நாற்றத்தைத் தவிர்க்க மூக்கை மூடிக்கொண்டு சென்றவர்கள் இப்போது, குடும்பத்தோடு சென்று, அங்கு மாலைப் பொழுதையும் விடுமுறை நாட்களையும் கழிக்கிறார்கள். படகு சவாரியும் செய்கின்றனர்.

மழைக்காலங்களில், சபர்மதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அது அகமாதாபாத் நகரினுள் புகாமல் இருக்க நதியின் இருபுறமும் பலமான தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டன.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தத் திட்டம் முடிந்து திறப்பு விழா நடப்பதற்கு முன்பாகவே, ஆற்றங்கரை ஓரத்தில் இருந்த சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, மாற்று வீடுகள் வழங்கப்பட்டன.  டுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் அவர்கள் குடியமர்த்தப்பட்டனர். அதுவும் அகமதாபாத் மாநகரின் எல்லைக்குள்ளாகவே. கேட்கவா வேண்டும்? உடனேயே அவர்கள் அந்த வீடுகளுக்குக் குடி போய்விட்டனர். அவர்களுக்கு மின்சாரம், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனேயே செய்து தரப்பட்டன.

2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். படகுப் போக்குவரத்தையும் அவர் தொடங்கி வைத்ந்தார்.

அகமதாபாத் வாசிகளுக்கு, தற்போது பொழுதுபோக்கு அம்சமாக இது மாறியுள்ளது. தண்ணீர் நதியில் எப்போதுமே நிரம்பியுள்ளதால், நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் இனி, வெள்ளப் பெருக்கு பற்றிய அபாயமும் இல்லை.

நதியை மையமாகக் கொண்டு, பல சிறிய, பெரிய தொழில்கள் பெருக வாய்ப்புள்ளது. காலம் காலமாக அகமதாபாத்துக்குக் குடிநீர் வழங்கி வந்த சபர்மதி, இனி என்றுமே தவறாமல் தண்ணீர் வழங்கும் என்ற பெருமிதமான நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்பெல்லாம், இந்தியாவில் உள்ள கூவம் போன்ற ஆறுகளை எப்படி அழகுபடுத்தலாம் என்பதற்கு முன்மாதிரியான திட்டங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டிய நிலை இருந்தது. இப்போது அப்படி அல்ல. குஜராத் சென்று சபர்மதி ஆற்றைப் பார்த்தாலே போதும். பல வெளிநாடுகளுக்கும் இது முன்மாதிரியான திட்டமாக அமைந்துள்ளது.

நன்றி: தேனி பிஜெபி

கருத்துகள் இல்லை: