5 செப்., 2018

இன்று ஒரு தகவல்-85: 'சதி' (எ) உடன்கட்டை ஏறுதல்

கணவன் இறந்து போனதும்
அவனை எரிக்கும் நெருப்பில் மனைவியை தள்ளிவிட்டு கொன்று விடும் சதி என்ற பழக்கம் இந்து மதத்தில் மிக விமரிசையாக இருந்திருக்கிறது.

இது நமக்கு தெரிந்த செய்திதான். அதில் இரண்டு வகையான சதி இருக்கிறது.

ஒன்று சகமரணம்.
கணவன் உடலோடு உடனே எரிந்து போவது.

இரண்டாவது அனுமரணம்.
ஒருவேளை மனைவி கர்ப்பமாக இருந்தால் அவர் உடனே கணவனோடு எரிய தேவையில்லை.

பொறுமையாக குழந்தையை பெற்று கொள்ளலாம். அதே சமயம் கணவனின் செருப்புகளை எடுத்து வைத்திருப்பார்கள். குழந்தை பெற்று முடித்த உடன். கணவனின் செருப்போடு தன்னை எரித்துக் கொள்ள வேண்டும்.

கணவனோடு எரிந்தால் சகமரண சதி பழக்கம் அது.
கணவனின் செருப்போடு எரிந்தால் அனுமரண சதி பழக்கம் அது.

இதிலேயே இரண்டு வகை இருந்திருக்கிறது.

சில இடங்களில் குழியில் வைத்து கணவனை எரிக்கும் போது மனைவி அதில் குதித்து விடுவாளாம்.

சில இடங்களில் கணவனின் உடலோடு சேர்த்து வைத்து மனைவியின் உயிருள்ள உடலையும் கட்டி வைத்து ஒன்றாக தீமூட்டி கொல்வார்களாம்.

இதில் என்ன கொடுமை என்றால் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் சிலர் மார்போடு அணைத்துக் கொண்டு தீயில் குதிப்பார்களாம்.

இந்த சதி கொலை பழக்கத்தை அதிகம் பரப்பியது. தொடர்ந்து பிரச்சாரம் செய்தது, இதை தக்க வைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று போராடியது எல்லாம் உயர்சாதி இந்து புரோகிதர்கள்தாம்.

இந்தியாவின் இந்த கொடூர பழக்கத்தை முதன் முதலில் கண்டித்த இந்தியராக மூன்றாம் சீக்கிய குருவான அமர்தாஸை சொல்கிறார்கள். போர்ச்சுகீசியர்களும் இதை எதிர்த்தே வந்திருக்கிறார்கள். 1772 யில் தொடங்கி

Warren Hasting
Lord Cornwallis
Wellesley
Lord Minto
Lord Hastings
Lord Amherst

என்று எத்தனையோ ஆட்சிப் பொறுப்பு அதிகாரிகள் வந்தாலும் நேரடியாக சதிப்பழகத்தை எதிர்த்து சட்டமியற்ற அவர்கள் பயந்தே இருந்தார்கள்.

சுப்ரீம் கோர்ட் கூட மக்களை கோபப்படுத்தாமல் எதைவேண்டுமானாலும் செய்யுங்கள் என்றே வலியுறுத்துகிறது.

அப்போதுதான் வருகிறார் ஹீரோ Lord Bentinck .
கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் ராஜாராம் மோகன் ராய் போன்ற தலைவர்கள் பெண்டிக்கை சதி பழக்கத்தை நிறுத்தும் சட்டம் கொண்டு வர வலியுறுத்துகிறார்கள்.

-சட்டம் நிறைவேற்றுவது,

-மக்களிடம் விழிப்புணர்ச்சி உண்டு பண்ணுவது,

-பெங்கால் பீகாரில் முதலில் சதிப்பழகத்தை ஒழிப்பது

என்ற மூன்று எண்ணத்தோடு பெண்டிக்
இப்பிரச்சனையை அணுகுகிறார்.

சதி பழக்கத்தால் இத்தனை பெண்கள் மடிகிறார்கள் என்ற கணக்கெடுத்து அதை செய்தி தாள்களில் வெளியிடுகிறார்.

இது மக்கள் மத்தியில் ஒரளவுக்கு விழிப்புணர்வைக் கொடுக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இப்பிரச்சனையை பார்த்த மக்கள் ஒட்டுமொத்தமான பலியைப் பார்த்ததும் அது பற்றி யோசிக்க தொடங்குகிறார்கள்.

ஆனால் உயர்சாதி இந்துக்கள்,மற்றும் இந்து புரோகித கூட்டம் சதியை நீக்ககூடாது என்றே வலியுறுத்துகிறார்கள்.

ஒரு வழியாக டிசம்பர் 4 , 1829 ஆம் வருடம் சதிப்பழக்கம் செய்வது குற்றமென்ற சட்டத்தை இயற்றுகிறார் பெண்டிக்.

இதற்கு இந்துக்கள் பலர் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க “ நான் சட்டமியற்றிவிட்டேன். நீங்கள் வேண்டுமானால் லண்டன் அரசிடம் தனியே மனு கொடுங்கள். நான் அதை தடுக்க மாட்டேன்” என்கிறார்.

உடனே உயர்சாதி இந்துக்கள் Francis Bathie என்னும் ஆங்கிலேயரைப் பிடித்து அவருக்கு நிறைய பணம் எல்லாம் கொடுத்து சதி பழக்க நிறுத்த சட்டத்துக்கு எதிராக மனு கொடுத்து அனுப்புகின்றனர்.

நல்ல வேளையாக அக்கப்பலில் ஒட்டை விழுந்து அது ஒரிடத்தில் நின்றுவிட்டது.

அதற்கு அந்த ஃப்ரான்சிஸ் பத்தி “வழக்கமாக இப்படியான கப்பல் மூழ்கிவிடும். இன்று நான் மூழ்காமல் இருக்கிறேன் என்றால் அதற்கு அந்த சதிமாதாவே காரணம்.
நான் மன்னரிடம் சொல்லி சட்டத்துக்கு ஸ்டே வாங்கி வருகிறேன் என்று ஒருவழியாக அங்கு சென்று மனு கொடுத்திருக்கிறார்.

ஆனால் ராஜா ராம் மோகன்ராய அதற்கு முன்பே லண்டன் போய்விட்டார்.

அங்கு சென்று அனைத்து அதிகாரிகளிடம் அது எப்பேர்ப்பட்ட கொடுமையான பிரச்சனை என்று சொல்லி புரிய வைக்கும் போது அங்கே பிரான்சிஸ் பத்தி உயர்சாதி இந்துக்கள் கொடுத்த மனுவை எடுத்து வருகிறார். மிக விரிவான விவாதம் நடக்கிறது. முடிவில் சதிக்கு எதிரான சட்டம் செல்லும் என்றே லண்டன் அரசு சொல்லிவிட்டது.

இப்படியாக பெண்டிக்கும் ராஜா ராம் மோகன் ராயும் நம்மூர் பெண்களை காப்பாற்றி இருக்கிறார்கள்.

மதம் என்பது பெண்களை எப்படியெல்லாம் அடக்கி இருக்கிறது என்பதை இதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

Vijay Bhaskavijay

கருத்துகள் இல்லை: