உணவுப் பொருட்களில் வண்டு, பூச்சி வராமல் இருக்க!
உளுத்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால் மாவு மாதிரியான பொருள் வெளியேறும். தட்டியபிறகு டப்பாவில் வைத்தால் வண்டு வராது.
பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்புத்தூள் கலந்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தினால் வண்டுகள், பூச்சிக் கூடுகள் பிடிக்காது.
பருப்புகளில் பெருங்காயத்தை தட்டிப்போட்டு வைத்தால் பூச்சி வராது.
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பில் பூச்சி வராமல் இருக்க காய்ந்த வேப்பிலைகளையும் வசம்புத்துண்டுகளையும் போட்டு வைத்தால் போதும். உளுத்தம்பருப்பு எனில் மஞ்சள் தூளும், உப்பும் கலந்து வைக்கலாம்.
அரிசியில் மிளகாய்வற்றல் சிலவற்றைப் போட்டு வைத்தால் வண்டுபிடிக்காது.
புளியை வாங்கி வந்ததுமே அதிலுள்ள கொட்டைகளையும், நார்களையும் நீக்கிவிட்டு நன்கு வெயிலில் காயவிட்டு சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் அடைத்துவிட்டால் ஓர் ஆண்டுக்கு மேல் புழுக்கள், பூச்சிகள் வராமலிருக்கும்.
பயிறு, தானியங்களில் வேகமாக வண்டுவிழும். அந்த டப்பாக்களில் பூண்டையோ, மஞ்சள் துண்டையோ அல்லது வசம்புப் பொடியையோ கலந்து வைத்தால் சீக்கிரம் வண்டு பிடிக்காது.
தனியா டப்பாவில் நாலைந்து துண்டுகள் அடுப்புக்கரியை போட்டுவைத்தால் வண்டுகள் அண்டாமல் இருக்கும்.
எள் டப்பாவில் சிறிது நெல்லைப்போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
பூண்டில் புழு வராமல் இருக்க அதில் கேழ்வரகை சிறு மூட்டையாக கட்டிப் போடலாம்.
சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளில் எறும்பு வராமலிருக்க கொஞ்சம் கிராம்புகளை அதில் போட்டு வைத்தால் போதும்.
நன்றி: தினமணி நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக