27 ஏப்., 2020

நூல்நயம்

எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து
குறுங்கதை 48 அன்னாகரீனினா பொம்மை வாங்குகிறாள்

தனது மகன் செர்யோஷாவின் பிறந்தநாளுக்குப் பரிசளிக்க விளையாட்டுப் பொம்மைகளை வாங்க விரும்பினாள் அன்னாகரீனினா.

மனிதர்கள் தராத ஏதோவொரு அன்பை, நெருக்கத்தைப் பொம்மைகள் தருகின்றன. அதைச் சிறுவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். கணவனையும் மகனையும் விட்டுப் பிரிந்து காதலனுடன் வாழும் அன்னாவிற்கு எந்தப் பொம்மையை வாங்குவது எனத் தெரியவில்லை.

மனக்குழப்பம் கொண்டவர்களால் பொம்மைகளைத் தேர்வு செய்ய இயலாது. பொம்மைகள் களங்கமின்மையின் அடையாளம். மௌனத்துணை.

பொம்மைகள் வழியாகவே சிறுவர்கள் தங்களைப் பெரியவர்களாக உணருகிறார்கள். அதனால் தான் பொம்மைக்கு ஒரு சிறுமி சோறு ஊட்டுகிறாள். தூங்க வைக்கிறாள்.

அன்னாகரீனினா பொம்மை கடையிலிருந்த விதவிதமான பொம்மைகளைப் பார்த்தபடியே இருந்தாள். பொம்மைகளின் கண்கள் உயிர்ப்பற்றவை. பொய்யான சிரிப்புக் கொண்ட பொம்மைகளின் முகம் செயற்கையானது. .. அடியும் வலியும் பொம்மைகளை ஒன்று செய்யாது. பெரியவர்களுக்குப் பொம்மை என்பது விலைக்கு வாங்கப்படும் பொருள். சிறார்களுக்கோ பொம்மைகள் கோபத்திற்கும் ஆசைக்குமான வடிகால்.

காலம் சிலரைப் பொம்மையாக்கித் தானே உருட்டி விளையாடுகிறது உண்மையில் அன்னா தன்னையே ஒரு பொம்மையாக்கி மகனிடம் தரவே விரும்பினாள். எந்தப் பொம்மையும் அன்னையாக முடியாது தானே.

எவ்வளவு அழகான பொம்மையாக இருந்தாலும் அது தரும் சந்தோஷம் நீடிப்பதில்லை. விரைவிலே தூக்கி எறியப்படும். பிய்த்து எறியப்படும். தன் வாழ்க்கையும் அந்த நிலைக்கு வந்துவிட்டிருப்பதை அன்னா அறிந்திருந்தாள்.

பொம்மைகளைத் தேர்வு செய்ய முடியாமல் நிற்கும் அன்னாவைப் பார்த்து கடைப்பையன் கேட்டான்

“எந்த வயது பிள்ளைக்குப் பொம்மைகள் தேடுகிறீர்கள்“.

“தாயைப் பிரிந்த பையனுக்கு“ என்றாள் அன்னா

“சாப்பிடும் போதும் உறங்கும் போதும் தான் சிறுவர்களுக்கு அன்னையின் நினைவு வரும். மற்ற நேரங்களில் அவர்கள் வேறு உலகில் சஞ்சரிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். இந்தப் பொம்மையைப் பாருங்கள். அதன் இதயம் திறந்து அதற்குள்ளிருந்து ஒரு குருவி வெளியே வந்து சப்தமிடும். இயக்கி காட்டவா“

அன்னா கரீனினா தலையாட்டினாள்

அந்தப் பையன் பொம்மையை இயக்கி காட்டினான். பொம்மையின் இதயப்பகுதியிலிருந்த சிறிய கதவு திறந்து சிவப்புக்குருவி வெளியே எட்டி சப்தமிட்டது. எல்லோர் இதயத்திற்கும் இப்படியொரு சிறு குருவி இருக்கத்தானே செய்கிறது. எப்போது வெளியே எட்டி சப்தமிடும் என்று தான் அறிய முடியவில்லை.

அன்னா அந்தப் பொம்மையை வாங்கிக் கொண்டாள். அதை நேரிலே மகனிடம் கொடுக்க விரும்பினாள். கணவன் இல்லாத அதிகாலை நேரம் பார்த்து மகனைக் காணச் சென்றாள். அம்மா இறந்துவிட்டதாகத் தந்தை சொன்னது பொய் என உணர்ந்த மகன் படுக்கையிலிருந்து எழுந்து ஆசையாக அம்மாவைக் கட்டிக் கொண்டான். பேச முடியாமல் விம்மினாள் அன்னா. கணவன் வருவதற்குள் வெளியேறி விட வேண்டும் என்ற பதைபதைப்பில் மகனிடம் ஏதோ பேசினாள். படிக்கட்டில் கணவன் வரும் ஓசை கேட்டது. பதற்றமாக எழுந்து வெளியேறினாள்.

கணவன் எதிரே வந்துவிட்டான். இரண்டு பொம்மைகள் போல அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவனும் எதையும் கேட்கவில்லை. அவளும் எதையும் சொல்லவில்லை.

பதற்றத்தில் அன்னாகரீனினா ஆசையாக வாங்கிவந்த பொம்மையை மகனிடம் கொடுக்கவில்லை. தரப்படாத பரிசு போலக் கனக்கும் பொருள் உலகில் வேறில்லை. அந்தப் பொம்மை இனி என்ன செய்வது என அவள் வேதனைப்பட்டாள். எல்லாத் தவறுகளுக்கும் தானே காரணம் என நினைத்து வருந்தினாள். அதன் பிறகே ரயிலில் விழுந்து அன்னாகரீனினா தன்னை மாய்த்துக் கொண்டாள்.

அவள் வாழ்வும் ஒரு பொம்மையைப் போலவே ஆனது.

நன்றி : திருமதி சந்திரபிரபா ராமகிருஷ்ணன் , முகநூல். 

கருத்துகள் இல்லை: