#சிறுகதை
#அம்மா
சாப்பிட்டு விட்டு சற்று கண்ணயரலாம் என்று ஊஞ்சலில் படுத்தாள் அம்புலு. தூக்கம் வரவில்லை. இதென்ன வாழ்க்கை? சாப்பிடுவது தூங்குவது தவிர வேறொன்றும் இல்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி விதிக்கப்பட்டு இருக்கிறது? போன ஜென்மத்தில் ஏதேனும் பாவம் செய்திருப்பேனோ? அதுதான் இந்த எண்பதாவது வயதில் யாருமில்லா அனாதையாக அவஸ்தை படுகிறேனோ? நினைக்க நினைக்க மனம் வேதனையில் ஆழ்ந்தது. கடந்த கால நினைவுகள் வந்து வந்து போனது.
16 வயதில் ராமச்சந்திரனை கை பிடித்து வந்தவள் தான். முதலில் கூட்டு குடும்பத்தில் மாங்கு மாங்கென்று வேலை. கர்ப்பப் பை மிகவும் பலவீனமாக இருந்ததால் எல்லாம் இரண்டு மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை என்று இல்லாமல் போனது. குழந்தை இல்லாத கவலையை விட சுற்றமும் உறவும் மலடி என்று தன் காதுபட கூறியதுதான் மிகுந்த வேதனையை அளித்தது.
பெரியவர்கள் இறைவனடி சேர மற்றவர்கள் தத்தம் குடும்பத்தை அமைத்துக் கொண்டு தனியாக போய் விட தன்னுடைய நாற்பதாவது வயதில் தனிக் குடித்தனம் நடத்த ஆரம்பித்தாள் அம்புலு
குழந்தை இல்லாத குறையை தன்னுடைய அன்பினால், பாசத்தினால் மறக்கச் செய்தார் ராமச்சந்திரன். அம்புலு முகம் கோண நடந்து கொண்டதில்லை. மாசத்தில் பாதி நாட்கள் நிலபுலன்களை கவனிக்க கிராமத்திற்கு சென்று விடுவார். வசதிக்கு ஒன்றும் குறைவு இல்லை. அம்புலு கேட்டதெல்லாம் கிடைத்தது.
நகரத்தில் தோட்டத்துடன் மிகப் பெரிய வீடு. வேலைக்கு ஆட்கள் என்று எல்லாவித வசதிகளையும் செய்து கொடுத்திருந்தார்.
கிராமத்தில் அவர் தன்னை விட மிகவும் வயது குறைந்த பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என்று தன் காது பட மற்றவர்கள் கூறிய போது அதை நம்பவில்லை அம்புலு. இருந்தாலும் தனக்கு கவலை இல்லை என்று சொல்லி விட்டாள்.
வயதாக வயதாக கிராமத்துக்கு போவதை குறைத்துக் கொண்டார் ராமச்சந்திரன். ஒரு கட்டத்தில் நிலபுலன்களை விற்று விட்டு நகரத்திலேயே இருக்க ஆரம்பித்தார். பக்கத்தில் உள்ள காலிமனையில் வீடு கட்டி அதை நாலு குடித்தனங்களாக போட்டு வாடகைக்கு விட்டார். வங்கியில் கணிசமாக பணம் டெபாசிட் செய்து அதிலிருந்து மாதம் மாதம் வட்டி வருமாறு ஏற்பாடு செய்தார்.
தன் கடமைகளை நிறைவேற்றி விட்டு இறைவனடி போய் சேர்ந்தார். முதலில் கணவர் இல்லாத குறை தெரிந்தாலும் அவர் செய்து வைத்த ஏற்பாடுகளினால் மிக விரைவில் துக்கத்திலிருந்து மீண்டு வாழ்க்கையை நடத்த தொடங்கினாள் அம்புலு.
மாதா மாதம் வாடகை வருகிறது. வங்கியிலிருந்து வட்டி வருகிறது. தன் ஒருத்திக்கு இது எதேஷ்டம். நகரத்தில் காசு கொடுத்தால் எல்லாம் கிடைத்து விடுகிறது. சாதம் மட்டும் வைத்துக் கொண்டால் போதும். கறி, கூட்டு, சாம்பார், ரசம் கிடைக்கிறது. எனவே கஷ்டம் என்பது இல்லை.
ஆனால் இது மட்டும் போதுமா? கணவர், குழந்தைகள் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? கடவுள் எதற்காக என்னை இன்னும் வைத்திருக்கிறார்? எல்லோரும் நாத்தனார் குழந்தைகளை தத்தெடு, தங்கை குழந்தைகளை தத்தெடு என்று சொன்ன போது வேண்டாம் என்று நிராகரித்து விட்டேன். அதெப்படி ஓட்டுதல் வரும்? என் குழந்தைகள் போல் வருமா?
கடவுளே இன்னும் எதற்காக என்னை உயிருடன் வைத்திருக்கிறாய்? இங்கேயே நரகத்தை அனுபவி என்றா? நினைக்க நினைக்க கண்ணீர் வந்தது. அசதியில் அப்படியே தூங்கிப் போனாள்.
அழைப்பு மணி ஓசை கேட்டது சட்டென்று எழுந்தாள். யார் இந்த நேரத்தில்? வீட்டு வேலை செய்பவள் சாயந்தரம் அல்லவா வருவாள். யாராக இருக்கும் என்று நினைத்தவாறே கதவை திறந்து பார்த்த போது அங்கே கண்ட காட்சியை பார்த்து அதிர்ச்சியானாள்.
யார் இது? என் கண்களையே நம்ப முடியவில்லையே..அவரா? என் கணவரா? இது எப்படி சாத்தியம்? பேச்சு வரவில்லை அம்புலுவுக்கு.
"அம்மா" என்று அழைத்து தன் கையை பற்றியவரைக் கண்டதும் உடம்பு அதிர்ந்தது.
அம்மாவா? நானா? முதன் முதலில் தன்னை அம்மாவென்று அழைக்க கேட்டு உடலெங்கும் ஒரு இன்ப அதிர்ச்சி அலை பெருகியது. மனம் கசிந்து தாய்மை உணர்வு வியாபித்தது. கண்களில் கண்ணீர் சுரந்தது.
புரிகிறது....இவன் என் கணவரின் இரத்தம்...என்னுடைய மகன்.
நான் மலடி அல்ல. என்னுடைய மகன் எதிரில் இருக்கிறான் என்று கூவ வேண்டும் போல் இருந்தது.
அம்மா, என் பெயர் ரகு, நான் உள்ளே வரலாமா என்று கேட்டு விட்டு சுவாதீனமாக உள்ளே வந்து ஊஞ்சலில் அமர்ந்தான். நான் கிராமத்தில் இருந்து வருகிறேன். அம்மா இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்பா எங்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து விட்டுதான் வந்துள்ளார். அவர் இறந்த செய்தி தாமதமாகத்தான் எங்களுக்கு தெரிந்தது.
என்னுடைய பையனும் பெண்ணும் மேல் படிப்புக்காக இங்கே வர வேண்டியதாக உள்ளது. அதற்கு வீடு பார்த்து விட்டு அம்மாவாகிய உங்களையும் பார்க்கலாம் என்று வந்தேன் என்றான் ரகு.
நல்லா இருக்கு...இவ்வளவு பெரிய நம்மோட வீட்டை விட்டு வெளியில் இடம் தேடறான்..ஒழுங்கா எல்லோரையும் கூட்டிக்கிட்டு மூட்டை முடிச்சோட வந்து சேரு என்று அதட்டினாள் அம்புலு.
கடவுளே இதற்காகத்தான் என்னை இன்னும் உயிருடன் வைத்திருந்ததாயா? எனக்கு அம்மா என்ற உணர்வு கிட்டத்தான் இந்த மிச்ச வாழ்க்கையா?
இனிமேல் என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய உனக்கு கோடானு கோடி நன்றி என்று கடவுளை மானசீகமாக வேண்டினாள் அம்புலு.
நன்றி: திரு ஸ்ரீதர் கோபால், சுஜாதாவின் கடைசி பக்க ரசிகர் குழு, முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக