26 ஜூன், 2020

பிரமிள் நினைவுகள்

பிரமிளும் விசிறி சாமியாரும் - அழகிய சிங்கர்

மீனுக்குத் தண்ணி
மிருகத்துக்கு
பிராண வாயு
மனிதாத்மாவுக்கோ
மனம் தான் வெளி.

-பிரமிள்

கோபி கிருஷ்ணனின் "மிகவும் பச்சையான வாழ்க்கை" என்றொரு கதை இருக்கிறது. பச்சை ஜட்டி கதை. 
கோபியின் கதைகளில் அதைத்தான் முதலில் வாசித்தேன். வெற்றுப்பகடி போலிருந்தது. உள்ளார்ந்த அர்த்தம் விளங்கவில்லை. பின் கோபியின் வாழ்க்கையை குறித்து அவருடைய ஒரு பேட்டியில் வாசித்தேன். அதன் பிறகு "காணி நிலம் வேண்டும்" என்றொரு கதை படித்தேன். இப்போது "மிகவும் பச்சையான வாழ்க்கை" என்ற கதை மிகப்பச்சையாக இருக்கிறது. ஒரு கலைஞன் எப்படி வாழ்ந்தான் என்பதை தெரிந்து கொண்டு அவனுடைய படைப்புகளை வாசிக்கையில் அது மேலும் அர்த்தப்படுவதாயிருக்கிறது. அல்லது அவனுடைய மொத்த படைப்புகளையும் வாசிக்கும் போதுதான் அவனுடைய படைப்பின் சாரத்தை குறித்து நாம் முழுவதுமாய் புரிந்து கொள்ள முடியும். 

பிரமிளைப் புரிந்து கொள்ள இந்தப் புத்தகம் ஏதோ ஒருவகையில் உதவுகிறது. பிரமிள் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தீவிர உபவாசி. விசிறி சாமியார் 
யோகி ராம் சுரத்குமாரின் நெருங்கிய நண்பர். பிரமிள் பல நண்பர்களுக்கு ஆன்மீகவாதியாகவே அறியப்படுகிறார்.  இலங்கையிலிருந்து 1960வாக்கில் வெளியேறி தமிழகம் வந்து தமிழகத்திலேயே இருந்துவிட்டார். வாழும் வரை தனியாவே வாழ்ந்தார். குடும்பமே இல்லை. அவருடைய முழுப்பெயர் அஜித்ராம் பிரமிள் என்று தெரிந்து கொண்ட போது இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்தேன். "அஜித்ராம் பிரமிள்".

பிரமிளைக் குறித்து ஒரு விடயம். 
அதன் அரசியலை நோண்டிப் பார்க்கும் போது ஜிவ்வென்று இருந்தது. 
ஒருமுறை அழகிய சிங்கரைப் பார்க்க அவருடைய அலுவலகம் சென்றிருந்தாராம். அங்கு ஸ்ரீனிவாசன் என்று ஒருவரைப் பார்த்தவுடன் பிரமிள் சூடாகிவிட்டாராம். வேறொரு எழுத்தாளர் குழுவில் இணைத்து திட்ட ஆரம்பித்துவிட்டாராம். 

"எனக்கும் தமிழ் தான் உயிர் என்றாலும் 
அதை மற்றவர்கள் மீது விடமாட்டேன்".

இது ஞானக்கூத்தன் கவிதை.

"ஆமாம் பிறர் மீது மூச்சுவிடத்தான் விடுவேன்.. என்ன பண்ணுவ நீ" என்ற ரீதியில் பிடித்து கத்த ஆரம்பித்துவிட்டாராம். 

பார்ப்பனர்களின் ஆதிக்கம் எழுத்துலகில் கோலாச்சிக்கொண்டிருந்தபோதே பிரமிள் அடித்து ஆடியிருக்கிறார். 

"ஒரு பாப்பாத்தி நகத்தோடு
என் பறைநகம் மோதி
மனம் அதிர்ந்தது.
கோபத்தில் மோதி 
கலந்தன கண்கள்.
பிறந்தது 
ஒரு புது மின்னல்.
ஜாதியின் கோடைமேவிப் பொழிந்தது
கருவூர்ப் புயல்"..

இந்தக் கவிதையைப் படித்துவிட்டு பலரும் காண்டாயிருக்கக்கூடும். இப்போதும் ஆவார்கள்.

பின்பொருமுறை ஆத்மாநாம் இரங்கல் கூட்டத்தில் வந்து பேச ஆரம்பித்தார். அப்போது அவர் பேச்சில் ஒரு விம்மல் இருந்தது. தொண்டை கரகரத்தது. 
அவர் எல்லோருக்கும் பிடித்த ஆத்மாநாமின் "வெளியேற்றம்" கவிதையை தழுதழுத்த குரலில் வாசிக்கத் துவங்குகிறார். 

"சிகரெட்டிலிருந்து
வெளியே தப்பிச் செல்லும்
புகையைப் போல்
என் உடன்பிறப்புகள்
நான் 
சிகிரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில் 
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே 
எதிர்பாக்கிறேன்
அவ்வளவுதானே"

ஒருமுறை பிரமிள் தன் பக்கத்து 
வீட்டுப் பெண்மணியிடம் தன் வீட்டு கரண்ட் பில்லை கட்டச் சொல்லி பணம் தந்திருக்கிறார். பெண்மணியும் பில்லை கட்டிவிட்டு ரசீதை பிரமிளிடம் தந்திருக்கிறார். ஏதோ பிசகு உள்ளதென்று நினைத்து பிரமிள் அந்தப் பெண்மணியை திட்டிவிட்டார். பெண்மணி மனமுடைந்து அழுதேவிட்டார். ஆனால் தவறு பிரமிளுடையது. அதை உணர்ந்து கொண்ட பிரமிள் அந்தப் பெண்மணியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 
அந்தப் பெண்மணி மிரண்டு போனார்.
இந்த விடயத்தை வாசிக்கையில் எனக்கு சிலிர்த்துக் கொண்டது. இதே போல சிலிர்ப்பு கோபிகிருஷ்ணனை வாசிக்கும் போதும் ஏற்பட்டது. 

இந்தப் புத்தகத்தில் பிரமிள் சொன்னதாக ஒரு குறிப்பு வருகிறது.
"கிருஷ்ணமூர்த்தி ஒருவரைத் தொட்டால் ஒன்றுமில்லை. ஆனால் கிருஷ்ணமூர்த்தியை தொட்டால் நமக்கு ஏதாவது பிரச்னை ஏற்படும்". 

இதை எப்படிப் புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை. நண்பர்கள் விளக்கலாம்.

பிரமிளுக்கு மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்படுகிறது. மருந்து வேண்டி
அழகிய சிங்கருக்கு எழுதிய ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் ஒரு வரி இப்படி எழுதியிருக்கிறார். 

"No news from Amirtharaj. Perhaps he does not want to call without bringing some money or other. This is absurd. Tell him to come. I need people to talk to. It helps. 

"I need people to talk" -

கருத்துகள் இல்லை: