26 ஜூன், 2020

தத்துவ மேடை : அராஜகவாதம் என்றால் என்ன?

[6/26, 07:13] Neyam-Satya: இன்றைய தத்துவம் 👇🏽

Anarchism என்று அழைக்கப்படும்
அரசின்மை வாதம் அல்லது
அராஜக வாதம்
[6/26, 07:21] Neyam-Satya: 

அராஜகவாதம் என்றால் என்ன?

அனார்க்கிசம் -Anarchism- என்ற ஆங்கில வார்த்தை தமிழில் அராஜகவாதம், அரசின்மைவாதம் என்பதாக மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இவற்றில் அராஜகவாதம் என்பது விமர்சனபூர்வமான மொழிபெயர்ப்பு என்றும், அரசின்மைவாதம் என்பது சற்றே கூடுதல் மென்மையுடைய மொழிபெயர்ப்பு என்றும் கருதலாம். இந்த ஆங்கிலச் சொல்லின் மூலம், அனார்க்கியா என்ற கிரேக்கச் சொல் அதற்கு “ஆட்சி செய்வோர் அற்ற” என்று பொருள். அனார்க்கிசம் என்ற சொல் பதினைந்தாம் நூற்றாண்டுகள் முதல் வழங்கி வருகிறது! இவற்றின் வரலாற்று விளக்கங்களை அளிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல, தற்போதைக்கு நான் அராஜகவாதம் என்று புரிந்துகொள்ளும் கொள்கையைக் குறித்துப் பேசவே இந்தப் பதிவு. அரசின்மைவாதம் என்ற மென்மையான, அனார்க்கிசம் மீது இரக்கம் கொண்ட மொழிபெயர்ப்பை விட, அராஜகவாதமே பொருத்தமானது என்றெண்ணுகிறேன்.
*
முதலில் சனநாயகம் என்றால் என்ன என்று கேட்டுக் கொள்ளலாம். இதற்கு வழமையாக மக்களால், மக்களுக்காக, மக்களோடு என்று பதில் சொல்லப்படும். இதில் உள்ளார இருக்கும் பொருள் மக்களால், மக்களுக்காக, மக்களோடு நடத்தப்படும் அரசு என்பது. இந்த அரசு எப்படிப்பட்ட அரசாக இருக்கவேண்டும் என்பதில் பல மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. அது எப்படித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? அது எப்படி நடந்துகொள்ள வேண்டும்? முதலில், நாம் சனநாயகம் என்பதை ஒரு அரசு முறையாகவே கருதி வந்திருக்கிறோம். நாடுகள் என்பதைத் தாண்டி நாம் சனநாயகத்தை யோசிப்பதில்லை, இதிலிருந்தே உலகின் முதல்/பெரிய சனநாயகம் என்பது போன்ற தம்பட்டங்கள் வருகின்றன. சனநாயகம் என்ற வார்த்தை வேண்டுமானால் கிரேக்கத்தில் உருவாக்கப் பட்டிருக்கலாம். ஆனால் அடிப்படையில் சனநாயகம் என்பது மனிதர்கள் சமமானவர்கள், அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை ஒரு சமத்துவமான முறையில் நிர்வகித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையே. பின் இந்த நம்பிக்கையின் மேல், அதனை நடைமுறைப்படுத்துவதற்காக அமைக்கப்படும் ஏற்பாடுகள். இப்படிப் பார்க்கும்போது சனநாயகம் என்பது மொழியைக் கடந்து, மனித அறிவின் அளவு பழமையானது. முதல்முறையாக ஒரு மனிதர்கள் கூட்டம், ஒரு விசயத்தைக் குறித்து உரையாடி முடிவெடுக்கும்போது அங்கே சனநாயகம் உண்டாகியிருக்கிறது. ஆனால் பழமையான சனநாயக அமைப்புகள் பலவும் அந்தப் பெயரால் அடையாளப் படுத்தப் படாததற்குக் காரணம் அவற்றில் வாக்கெடுப்பு முறைகள் இல்லாததுதான். நாம் வாக்கெடுப்பு என்பதுதான் சனநாயகத்தின் அடிப்படை என்று இப்போது கருதுகிறோம். வாக்கெடுப்பு நம் எல்லோரது குரலுக்கும் மதிப்பளிக்கும் ஒரு சனநாயக முறை என்று நம்புகிறோம். ஆனால்…
ஒரு அமைப்பில் பெரும்பான்மையோரின் பங்கு வாக்களிப்பதுதான் எனும்போது அது சனநாயக மயமான அமைப்பு என்று சொல்லமுடியாது. உதாரணத்திற்கு நீங்கள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறீர்கள், உங்கள் பள்ளி கடைசி நாளைக் கொண்டாட வகுப்பில் முடிவெடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் வகுப்புத் தலைவரும் அவர் நண்பர்கள் இருவரும் நேராக வந்து யார் யாருக்கெல்லாம் ரஸ்னா வேண்டும் கை தூக்குங்கள் என்கிறார், கொஞ்சம் பேர் கை தூக்கியதும் சரி நாம் சேர்க்கும் பணத்தில் எல்லோருக்கும் ரஸ்னா என்கிறார்.
அல்லது, யார் யாருக்கெல்லாம் ரஸ்னா வேண்டும், யார் யாருக்கெல்லாம் ஆரஞ்சு ஜூஸ் வேண்டும் என்று ஒவ்வொன்றுக்கும் கையைத் தூக்கச் சொல்லி 40இல் 21 பேர் எதற்கு கையைத் தூக்குகிறார்களோ அதையே எல்லாருக்கும் முடிவு செய்கிறார். அதை ஏற்க மறுப்பவர், தலைவருக்கு இந்த முடிவெடுக்கும் ஆற்றலைத் தரும் ஆசிரியரின் வன்முறைக்கு பயந்து அமைதியாக இருப்பார்கள்.
அல்லது, நாம் என்ன வாங்கலாம் என்று கேட்கிறார். ஆரஞ்சு ஜூஸ், ரஸ்னா, சர்பத் என்று மூன்று பதில்கள் வருகின்றன. அவற்றுக்கு வாக்கெடுப்பு நடத்தி அவற்றில் ஒன்றை முடிவு செய்கிறார்.
அல்லது, வகுப்புத் தலைவரே இல்லை. என்னென்ன செய்யவேண்டும் என்று பேசும்போது, நிறைய பேர் ரஸ்னா சொல்கிறார்கள், சிலர் சர்பத், ஆரஞ்சு ஜூஸ் என்கிறார்கள். எனவே அதைப் பற்றி பேசி ஒரு சமாதானத்துக்கு வருகிறார்கள். ஒன்று எல்லோரும் ரஸ்னாவை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது குறிப்பிட்ட அளவு ரஸ்னாவும், ஆரஞ்சு ஜூஸும், சர்பத்தும் வாங்குவதாக முடிவு செய்யலாம். இந்த அளவுகள் தெரியாதபோது அல்லது இந்த நடவடிக்கையின் முதல் நிலையைக் கடந்த பிறகு, புரிதலுக்கு உதவுவதற்காக வாக்கெடுப்பு நடத்தலாம். அது முடிவெடுக்கும் கருவியாக இல்லாமல்! அப்படி எல்லாம் முடிவெடுத்த பிறகும் எந்த முடிவுக்கும் ஒப்புக் கொள்ளாத ஒருவர் இருந்தால், அவரை இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டாயப் படுத்தாமல் இருக்கலாம், தீவிரமான சூழலில் கண்டுகொள்ளாமலும் விடலாம்.
இவற்றில் எது சனநாயக முறை என்று யோசிக்கலாம். அடுத்தது, ஆரஞ்சு ஜூஸ் அவ்வளவு முக்கியமான விசயமல்ல, இயல்பான ஒரு சூழலில், யாராவது ஒருவர் அதற்கு பொறுப்பெடுத்துக் கொண்டால், அவரிடம் வகுப்பில் எல்லோருக்கும் என்னென்ன வேண்டுமென்று கேட்டு அதற்கேற்ப முடிவெடுத்து வாங்குமாறு பொறுப்பை ஒப்படைத்துவிடலாம். ஆனால், பள்ளிக்கூடம் முழுமையும், அல்லது நம் தினசரி வாழ்க்கையை நிர்வாகிக்கும் ஒரு அமைப்பை, வன்முறையை அடிப்படையாகக் கொண்டு கட்டமைப்பதை நாம் ஏன் ஏற்றுக்கொள்கிறோம்?
*
சரி, வாக்கெடுப்பு நடத்தி அரசைத் தேர்ந்தெடுக்கிறோம். அரசு என்றால் என்ன? எளிமையாகவும், கொஞ்சம் தாராளமாகச் சொன்னால் இப்படிச் சொல்லலாம், நாம், நம் சக மனிதர்களோடு (நம் தேசம் அல்லது குறிப்பிட்ட வரையறையைச் சேர்ந்தவர்களோடு) ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கையை நிர்வாகிக்க ஏற்படுத்திய அமைப்பு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இந்த அரசு அமைப்பை ஏற்படுத்தவோ, அதில் பங்குபெறவோ இல்லை, அதைப் பற்றி யோசிப்பதும் இல்லை. நமது சமூகத்தை இயக்கும் ஏற்றத்தாழ்வுகளுடன் இதுவும் ஒத்திசைந்து செயல்படுகிறது. பல சமயங்களில் அதுவே ஏற்றத்தாழ்வின் அடிப்படையில்தான் இயங்குகிறது. அரசாங்கம் என்பது ஒரு டீஃபால்ட் தேர்வாக நம் வாழ்க்கையில் இருந்து வருகிறது. இயல்பான ஒன்றாக அதை நாம் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறோம்.
இந்த அரசாங்கம் என்ற அமைப்பின் அதிகாரம் எதிலிருந்து வருகிறது? வன்முறையில் இருந்து. அரசாங்கத்தின் எந்த விதமான சட்டங்களை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், நமது பார்வையில், நல்ல, தீய, அல்லது அர்த்தமற்ற சட்டமாகவும் இருக்கலாம். அதை நடைமுறைப்படுத்த அரசின் முதல் மற்றும் ஒரே அதிகாரம் வன்முறைதான், காவலர்கள், இராணுவத்தினர். கொரோனா தொற்றை எடுத்துக் கொண்டாலும், முகமூடி அணிவது நமக்கும் பிறக்கும் பாதுகாப்பானது என்பது மருத்துவ அறிவுரை. அதைப் பின்பற்ற வேண்டும் என்பதில் ஆட்சேபணைகள் இல்லை. இது அரசாங்கத்தை மையமாகக் கொண்டுள்ள நமது சமூகத்தில் எப்படி நடக்கிறது என்றால் அரசாங்கம் முகமூடி அணியச் சொல்லி பிரச்சாரம் மேற்கொள்கிறது, பின்னர் முகமூடி அணியாதவர்களின் மேல் வன்முறையை ஏவுவதன் வழியாக அதை நடைமுறைப்படுத்த முயல்கிறது. இங்கே முகமூடி அணிவது மருத்துவ அறிவுரையைப் பின்பற்றுவதில் இருந்து, வன்முறைக்கு ஆளாகாமல் இருக்க பின்பற்ற வேண்டிய சட்டமாகிறது.
*
சரி, அரசாங்கம் திடீரென்று இல்லாமல் போய்விட்டால் என்னாகும்? இதற்கு பெரும்பாலானோர் சொல்லக்கூடிய பதில், வன்முறை தலைவிரித்தாடும் என்பதே. பிரபல ஆங்கிலப் படங்கள் தொடங்கி பலவும் நமக்கு அப்படித்தானே சொல்லிக் கொடுத்திருக்கின்றன. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அரசு நம்மீது வன்முறையை செலுத்தும் என்ற அச்சம் இல்லாவிட்டால் கொள்ளை அடிப்பேன் என்றோ கொலை செய்வேன் என்றோ சொல்வதில்லை. மற்றவர்கள் அப்படிச் செய்வார்கள் என்றே சொல்வார்கள்.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் பாரிய வித்தியாசங்களை உருவாக்கி வைத்துள்ள சூழலில் அந்த ஏற்றத்தாழ்வுகளை நடைமுறைப்படுத்தும், அந்த ஏற்றத்தாழ்வுக்கெதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் அரசமைப்பு இல்லாமல் போகும்போது அது தொடர்பான வன்முறைகள் நிகழவே நிறைய வாய்ப்பிருக்கிறது. தனிச்சொத்து என்பதே வன்முறையால் நிர்வகிக்கப்படும்போது, அந்த வன்முறை இல்லாவிட்டால், தனிச்சொத்துக்கெதிரான உடனடி எதிர்வினைகள் இயல்பே. ஆனால் கொலைக் குற்றங்கள் போன்ற வன்முறைகள் அரசின் இடையூறில்லாத சமூகங்களில் கொலை போன்ற குற்றங்கள் குறையவே செய்கின்றன.
கற்பனையிலேயே நாம் இத்தகையதொரு சமூகத்தைக் கட்டி அதைப் பற்றிய விவாதங்கள் நடத்தலாம். ஆனால் இத்தகையதொரு சமூகத்தில் எத்தகைய பொருளாதார அமைப்புகள் இருக்கும் என்று விவாதிப்பதைவிட, மக்கள் அத்தகைய முடிவுகளை தாமே எடுக்க ஏதுவான சூழ்நிலைகளை அமைப்பதே முக்கியமானது. அதேபோல மக்கள், தனிநபர்கள் நல்லவர்கள் அல்ல, பிறர் நலனை இயல்பாகவே கவனத்தில் கொள்பவர்கள் அல்ல. எனவே இத்தகையதொரு அமைப்புக்கு ஏற்றவர்கள் அல்ல என்பது போன்று ப்ராக்டிகலாக பேசுவதாக சொல்பவர்களுக்கு, அராஜகவாதியான க்ரொபோட்கின் பல ஆண்டுகள் முன்னர் கூறிய பதில் இன்னமும் பொருத்தமாக இருக்கிறது. அதாவது நாங்களும் அதே காரணங்களுக்காகத்தான் இப்போதிருக்கும் அமைப்பை மாற்றச் சொல்கிறோம், இது சுரண்ட முயல்பவர்களுக்கு உதவுவதாக இருக்கிறது. சுரண்டலைத் தூண்டுகிறது. எனவே நாங்கள் சுரண்டலைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு அமைப்பைப் பரிந்துரைக்கிறோம்.
*
இப்படி சனநாயகத்தின் அடுத்தடுத்த கட்டங்களை யோசிக்கும்போது, தர்க்க ரீதியாக நமக்கு இறுதியாகக் கிடைக்கக் கூடிய முடிவுதான் அரசின்மைவாதம்.
எனவே அராஜகவாதம் என்பது, வன்முறையின் அச்சுறுத்தல் இல்லாமல் நாம் ஒன்றாக வாழும், ஒன்றாக வாழும்போது ஏற்படும் தேவைகளை ஏற்றத்தாழ்வுகள் இன்றி நிர்வகித்துக்கொள்ளும் ஒரு நடைமுறை. அல்லது அத்தகையதொரு நடைமுறையை மக்கள் ஏற்படுத்திக்கொள்வதற்கான சூழலை உருவாக்கித்தர முயல்வது.
இக்கட்டுரை பெரும்பான்மையும் டேவிட் கிரேபரின் கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. சில இடங்களில் த டெமாக்ரடிக் ப்ராஜெக்ட் புத்தகத்தில் அவர் எழுதியவை அப்படியே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. சில, அவரது கருத்துகளை என் புரிதலுக்கேற்ப மாற்றி எழுதியவை.

நன்றி --- எழுத்தாளர் வயலட் மற்றும் திரு நேயம் சத்யா

கருத்துகள் இல்லை: