31 ஜூலை, 2020

கருத்து மேடை : ஈ-பாஸ்

ஈ-பாஸ் சிக்கல்கள் 

நடந்து முடிந்த - நடந்துகொண்டிருக்கிற நடைபெறவிருக்கிற லாக்-டவுன்களின் மிகச் சிக்கலான கட்டுப்பாடு ஈ-பாஸ் நடைமுறைதான். இந்த விஞ்ஞான யுகத்தில் ஒரே மாவட்டத்துக்குள் மனிதனின் வாழ்க்கைத் தேவைகள் அமைவது இந்தியாவிலேயே அதிக ஊதியம் பெறும் நடிகர் ரஜினிகாந்த்க்கே சாத்தியமில்லை எனும்போது தினமும் நூறு இருநூறு மட்டும் சம்பாதிக்கும் அன்றாடம் காய்ச்சிகளுக்கு எப்படிச் சாத்தியமாகும்? அதுவும் மாவட்ட எல்லைகளின் அருகில் வசிப்பவர்களுக்கு இது ஏறத்தாழக் குடும்பத்துடன் தற்கொலை முடிவை நோக்கித் தூண்டும் கட்டாயம்தான்.

இந்தக் கொடூரத்தில் பொதுப்போக்குவரத்தும்        ஈ-பாஸ் முறையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் எனலாம். தேவதானப்பட்டி எனும் ஊர் தேனி-திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. சுமார் பத்து கிலோ மீட்டர் தூரத்தில் வத்தலக்குண்டு எனும் நகரம். மணிக்கொடி கால எழுத்தாளர் சி சு செல்லப்பா அவர்களின் ஊர். இது திண்டுக்கல் மாவட்டத்துடன் சேர்ந்தது. தினமும் சுமார் நூறுக்கும் மேற்பட்ட சிறு குறு வியாபாரிகள் காய்கறிகள் உட்பட பலவித அத்தியாவசியப் பொருட்களை அதிகம் செலவில்லாமல் பேருந்துகள் மூலம் தேவதானப்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு கொண்டுசென்று வியாபாரம் செய்து 'அன்றாடம் காய்ச்சி' வந்தார்கள். 

இப்போது பேருந்தும் இல்லை, ஈ-பாஸ் கட்டாயம் வேறு. அவர்களின் வீட்டு அடுப்புகளில் பாஸ் எதுவும் எடுக்காமலேயே ஈக்கள் ஒருவேளை உட்கார்ந்திருக்கலாம். இதில் 100 வியாபாரிகள் என்பது 100 குடும்பங்கள். மொத்தம் சுமார் 500 பேர் பாதிக்கப்படலாம். இதில் vice-versaவாக வத்தலக்குண்டுவிலிருந்து அருகாமைக் கிராமங்களுக்குச் சென்று வியாபாரம் செய்யும் சிறு குறு வியாபாரிகள் 100 பேர் என்று எடுத்துக்கொண்டால் அந்தப் பக்கம் 500 பேர் பாதிப்பு. மொத்தம் 1000. இந்த நிலைதான் எல்லா மாவட்ட எல்லைகளுக்கும். சென்னை, கோவை போன்ற பெரு மாவட்ட எல்லைகளில் இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்காகும். 

பாண்டிச்சேரியையும் சமூகம் நமது மாவட்டங்களில் ஒன்றாகத்தான் கருதுகிறது. அதையும் சேர்த்தால் 40 மாவட்டங்கள். 40000 பேரின் சோற்றில் அடி. இது வியாபாரிகள் கணக்கு மட்டும்தான். விவசாய, தொழில் தேவைகள், வேலைக்குச் செல்பவர்களின் எஸ் டி டி தனி. ஜூனில் பொதுப்போக்குவரத்துப் பாதி அளவு இயக்கப்பட்டபோது இவர்கள் அரை வயிறாவது சாப்பிட்டார்கள். ஜூலையில் மறுபடியும் வயிற்றடி விழுந்தது . 'கண்ணிழந்தான் பெற்றிழந்தான்' என்பது போல இது பிழைப்பைக் கொடுத்துப் பிடுங்கியதற்குச் சமம். 

இதோடு மட்டுமல்லாமல் ஈ-பாஸ் குளறுபடிகள் கொரோனா எண்ணிக்கையை விடவும் கூத்தாட்டம் போட்டன.  முடிந்த பயணத்திற்குப் பாஸ் எடுப்பது முதல் போலிப் பாஸ்கள் வரை அவரவர் வசதிக்கேற்ப பாஸ் யூஸ் ஆனது. குழந்தைகளை வண்புணர்வு செய்த பேடிகள் முதல் சாத்தான் குளம் கொடூரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வரை பலர் ஈ-பாஸ் இல்லாமலேயே எந்த மாவட்டங்களுக்கும் சென்று அங்கு பிடிபட்டார்கள். ஆனால் தக்காளி கூறு ஐந்து ரூபாய் என்று விற்றுப் பிழைத்துக் கொண்டிருந்த மூதாட்டிகளைக் குடிசைக்குள் பட்டினியோடு முடக்கியது ஈ-பாஸ் நடைமுறை.

ஒவ்வொரு லாக்-டவுன் நீட்டிப்பிலும் சென்னையிலிருந்து பல லட்சக் கணக்கானோர் இரு சக்கரவாகனத்திலேயே கூடக் குடும்பத்துடன் சொந்த ஊரை நோக்கிப் பயணிக்க, வட மாநிலத் தொழிலாளர்கள் நாட்டின் பல பாகங்களில் நடந்தே ஊர் சென்றார்கள். இன்றைக்கும் பெரியகுளம் - தேனி ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன. நகரங்களுக்குள் ஆட்டோ, டாக்ஸிக்கள் கூட்டமாகப் பயணிக்கின்றன. ஞாயிறு அசைவத்திற்குக் கட்டாய ஊரடங்கு விடப்பட்டதால் சனிக்கிழமை மதியம், மாலைகளில் நகரப் பகுதிகள் பொக்குவரத்து நெரிசலில் கிட்னி பிதுங்கி முழிக்கின்றன. 

ஒவ்வொரு கடை வீதியும் ரங்க நாதன் வீதியாகி கொரோனாவின் விதியானது. டாஸ்மாக் மகாதிமித்யம் நான் சொல்லி சமூகத்திற்குத் தெரிய வேண்டியதில்லை.  இதில் பொதுப் போக்குவரத்தை மட்டும் முடக்கி யாது உபயோகம்? சில பல கோவில்களில் கும்பாபிஷேகம் உட்பட பல வித வழிபாடுகள் பெரும் பக்தர் கூட்டத்துடன் நடந்தது கோவில் சாதனை மற்றும் கோவிட் சாதனை. திருமலைக் கோவிலில் அர்ச்சகர், பணியாளர் உட்பட்ட 200 பேருக்குக் கொரோனா என்றால் அங்கு வந்து வழிபட்டுச் சென்ற லட்சக்கணக்கான பக்தர்களில் எத்தனை பேருக்குத் தொற்றுப் பரவி இருந்திருக்கும்?

சரி, பிறகு என்ன செய்யலாம்? பொதுப் போக்குவரத்தையும் திறந்துவிட்டுக் கொரோனா வளர்ச்சித் திட்டம் தீட்டலாமா? என்று நீங்கள் கேட்பீர்கள். அதுதான் இந்தப் பேரிடர் காலத்தின் மிக முக்கியச் சிக்கல். அன்றாடச் சோற்றுக்கும் வழி வேண்டும். தீயாய்ப் பரவும் கொரோனாவுடனும் அன்றாடம் மன்றாட வேண்டும் என்னும் இமாலாய முயற்சியில் கதகளி ஆடுகின்றன அரசுகள். ஆனால் சுமார் நான்கரை மாத காலம் இத்தனை கட்டுப்பாடுகள் போட்டும் கொரோனா கட்டுப்படவில்லை என்பது கட்டுக்கதை இல்லை. 

இப்போதுதான் 'அனைவருக்கும் மாஸ்க்' என்ற ரேஷன் கடைக் கொள்கைக்கே வந்துள்ளோம். ஆனால் தனி ஒழுக்கம் இல்லாதவர்கள் இந்த மாஸ்க்கையும் அணியப் போவதில்லை என்பது வேறு விஷயம். இதே போல வசதி இல்லாதவர்களுக்கு இதே ரேஷன் கடைகள் மூலமாகவே நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கலாம்.  சந்தையில் ஒரு ரூபாய் மதிப்பு முதல் தரமான மாத்திரைகள் கிடைக்கின்றன. அரசே மொத்தக் கொள்முதல் செய்யும்பொழுது விலை இன்னும் குறையும். வசதி படைத்தவர்கள் இதையும் வாங்க ஆயிரம் ரூபாய்க்கு வரிசையில் நின்றதைப் போல முனைப்புக் காட்டாமல் இருந்தால் அது சாலச் சிறப்பு. 

இதே போல ஈ-பாஸ்களையும், வாகனங்களையும் சோதனைக்கு உள்ளாக்கும் திருவாளர் திருவிளையாடல் காவல் துறையை கொரோனாத் தடுப்புச் சுகாதார முறைகள், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் பஞ்சாயத்துகளைக் கவனிக்க வைக்கலாம். உத்தரவுக்குப் பணியாத அலட்சிய பொது ஜனம் உதைக்குப் பணிந்தால் கொரோனாவின் ஓட்டம் குறையும். மற்ற கட்டுப்பாடுகள், நோய்த் தடுப்பு வாழ்வு முறைகளைப் பொது ஜனமே முன் வந்து கடைப்பிடித்தால் நிச்சயம் கொரோனா குறட்டை விடும். நமக்கு வெகு காலம் முன்பாகவே பாதிக்கப்பட்ட நாடுகளில் இப்போது க்ரிக்கெட் மேட்ச்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பது கவனிக்க வேண்டிய செய்தி - பார்வையாளர்கள் கட்டுப்பாடு இருந்தாலும். துபாயிலும் செப்டம்பரில் ஐ பி எல் துவங்கவிருக்கிறது. நாம் நான்-வெஜ் வாங்க மட்டும் முண்டியடிக்கிறோம்.

பட்டினிச் சாவுகளைத் தவிர்க்கவாவது  பொருத்தமான சமயோசிதமான துணிச்சலான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இப்போது உள்ளோம். அந்த சமயோசித முடிவு என்பது நிச்சயம் ஈ-பாஸ் முறையோ அல்லது நூறு சதவீதம் பொதுப் போக்குவரத்தை முடக்குவதோ அல்ல. ஏனென்றால் மந்திரிகளுக்குக் கிடைக்கும் இன்னோவாக்களும் ஆன்மீகச் செம்மலுக்குக் கிடைக்கும் லம்போகினிக்களும் நமக்குக் எப்போதும் கிடைக்கப் போவதே இல்லை. ஜெயவிலாஸ் பஸ்ஸே ஜெயம். அரசுப் பேருந்தே அனுதினம்.

மீண்டு வருவோம்.

#உளறுவதெல்லாம_உண்மை

பரிமேலழகன் பரி

நன்றி :  திரு.பரிமேலழகன் பரி,  திரு ஜமீல் ஜலாலுதீன், புதிய தகவல்கள், முகநூல்.
 

கருத்துகள் இல்லை: