31 ஜூலை, 2020

விகடன் சுஜாதா மலர்


படித்ததில் பிடித்தது என்று கேட்டிருப்பீர்கள். படித்ததில் தோய்ந்து, ரசித்து, மயங்கியது என்று கேள்விப்பட்டதுண்டா?

இதோ…

விகடன் சுஜாதா மலர். 

346 பக்கங்கள் முழுக்க்க்கக சுஜாதா… மட்டுமே. 

எனில் இப்போது சொல்லுங்கள். என் முதல் வரி சரிதானே? 

நாம், வாத்யாரின் போட்டோக்களைப் பார்த்திருக்கிறோம்… அவரின் கதைகளையும்  கட்டுரைகளையும் படித்துக்கொண்டே இருக்கிறோம். அவரைப் பற்றிய கட்டுரைகளைப் படித்திருக்கிறோம். புனித யாத்திரை படித்திருக்கிறோம்.  ஆனால் அத்தனையையும் மொத்தமாக ஒரே இடத்தில்!!

யெஸ்! சூப்பர் மார்க்கெட்!

அட்டையே எட்டு சுவை விருந்து. விதவிதமான சுஜாதாக்கள் பாஸ்போர்ட் சைஸில் சிரிக்கிறார்கள். 

திருமதி சுஜாதாவின் நினைவுப்பகிர்வு, வாலி, மனுஷ்யபுத்திரன், இரா முருகன், சுஜாதா தேசிகன், அமுதவன் ஆகியோர் அவரைப் பற்றிப் பகிர்ந்த கட்டுரைகள்.. 

செம டைஜஸ்ட்.

பிரித்தபின் முடிக்காமல் கீழே வைத்தால் அவர்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது என்று அர்த்தம்.  அவ்ளோ சுவாரஸ்யம்.

அவர் பாஷையில் சொன்னால் அச்சுக்கொட்றாப்பல கலர் போட்டோக்கள். இது வரை பலவற்றை நான் பார்த்ததேயில்லை. (கமலுடன் இருக்கும் போட்டோ ஒன்றில் நீல முழுக்கை ஷர்ட்டின் ‘கஃப்’பில் சின்னதாய் ஒரு நட்சத்திரம்.. சிம்பாலிக்?)

கறுப்பு வெள்ளையில் குழந்தை மாதிரி அடி மனசிலிருந்து சிரிக்கிறார் பாருங்கள் ஒரு சிரிப்பு… யம்மாடீ. 

அவருடைய திருமதியின் கருத்துக்களைக் ஊன்றி கவனித்தபோது … மிகுந்த புத்திசாலித்தனமும் பொறுமையும் தென்படுகின்றன. அதைவிட..  கணவரை என்னமாய்ப் புரிந்து வைத்திருக்கிறார்!

துவக்கக் கட்டுரை, கவிதை வடிவிலானது. ஆம்.. வாலி!

சில வரிகள்…

ஒரே ஊர்
ஒரே பேர்
அவனும் நானும் 
ரங்கராஜன் ஊரில்
ரங்கராஜன் பேரில்
எழுத்தார்வம் ஏற்பட்டபின்
அடியேன் இரண்டெழுத்திலும்
அவன் மூன்றெழுத்திலும் கரந்துறைய-
இருந்த இடத்தில் நின்றது 
இயற்பெயர். 
செகமனைத்தும் சென்றது 
செயற்பெயர்
•••
தமிழைக் கைப்பற்றினோம்
அடியேன்
மூன்றாம் தமிழ்மீதும்
அவன் முதல் தமிழ்மீதும்
கண் வைத்துக் காதல் முற்றினோம்!
•••
ஆஸ்பத்திரியில் என்ன கிழமை.. நாள்.. ஏது நடந்தது  ஒண்ணுமே தெரியலை. என் லைஃப்லேயிருந்து அந்த நாட்கள் காணாமல் போய்டுச்சு” மனுஷ்ய புத்திரனிடம் சுஜாதா சொன்னது. 

தமிழ் சினிமாவில் அதிகமாக திருட்டுக்கொடுத்த எழுத்தாளர் சுஜாதாதான்... காட்சிபூர்வமாக ஏதேனும் ஒரு பகுதியைச் சுடுவது சுலபமாக இருந்தது.. உதாரணமாக அவரது பதவிக்காக என்ற நாவல் பல பகுதிகளை பல சினிமாக்களில் பார்த்திருக்கிறேன்” என்கிறார் இவர். 

தமிழ் இயக்குநர்கள் பலர், தமிழ் எழுத்தாளர்களை ஒரு கறிவேப்பிலையாகப் பயன்படுத்துகிறார்கள் என்கிறார்.

“உங்களுக்கு சாகித்ய அகாடமி விருது கொடுத்தால் என்ன செய்வீர்கள்?” ‘திரும்பக் கேட்பதற்குள் செலவழித்துவிடுவேன்” சுஜாதாவின் பதில். 

புத்தகக் கண்காட்சிகளில் அவரை ஒரு முறை தொட்டுப் பார்க்கக் கைகள் நீளும் என்றும் “அவருக்கு இவ்ளோ வயசாயிடுச்சா…?! என்று அதிர்ச்சியுடன் பேசிக்கொள்வதையும் குறிப்பிடுகிறார். 
•••
இரா முருகனின் கட்டுரை பிரமா…..தம். நகைச்சுவையில் சுஜாதாவை ஒற்றி எடுத்த நடை. உருண்டு சிரிக்க வைக்கிறார். 

கல்யாணத்துக்கு சுஜாதா வராததால் ஹனிமூன் பெங்களூர்! சுஜாதாவுக்கு இந்தப்புத்தகங்களைக் கொடுக்கணும் என்று எடுத்து வைத்த போது அந்தப் பெண்-பெயரைக் கேட்டு மனைவியின் முகம் சூம்பியதை… கிராதகா என்று அவள் உறவினர் பார்த்ததை… எழுதி, பெங்களூரில் குல்கந்து சாப்பிட்டு அதே கையோடு சுஜாதா வீட்டு அழைப்பு மணியடித்தபோது ‘மணி சத்தத்தோடு சொச்ச குல்கந்து வாசமும் உள்ளே ஓங்கி அடித்திருக்கும்’ என்று சொன்னது முருகன் டச். 

சுஜாதா என்பது ‘சார்’ என்றவுடன் இவர் மனைவியின் முகம் மலர்ந்தது கற்பனைதான் என்றாலும் சுவாரஸ்யம்தான். 

முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட பதிப்பாளர் இரண்டாயிரம் கைமாற்றுக் கேட்க, முருகன் பி எஃப் லோன் போட்டுக்கொடுக்க (கஸின் மேரேஜ்) இவரையும் அழைத்துக்கொண்டு அந்தப் பதிப்பாளர், சுஜாதா வீட்டுக்குப்போக… ஆயிரம் ரூபாயை (பிளாஸ்டிக்) தட்டில் வைத்துக் கொடுத்த நிகழ்ச்சியை இதைவிட சுவையாய் எழுத முடியாது. அதன் கிளைமாக்ஸை இதைவிட சுவாரஸ்யமாய்க் கொடுக்க முடியாது. 

மார்ச் மாதம் என்பதால் ஆபீசில் இன்கம் டாக்ஸுக்குப் பிடித்ததால் ஆயிரம் ரூபாய் நிதி மாதிரி” என்று சுஜாதா சொன்ன நெகிழ்ச்சி.. 

‘என் சிறுகதைத் தொகுப்பு எப்போ வரணுமோ  அப்போ வரட்டும். இந்த சந்தோஷமே எதேஷ்டம்” என்று முருகன் சொன்ன நெகிழ்ச்சி..
வேறென்ன வேண்டும்!!

•••

சுஜாதா தேசிகன்.. 

“எப்படியாவது என்னை ஸ்ரீரங்கம் அழைச்சுண்டு போயிடு…” என்று வேண்டிய சுஜாதாவை அழைத்துக்கொண்டு போன அனுபவத்தை.. டிக்கெட் பரிசோதகர் “இவர்தானே மிஸ்டர் சுஜாதா” என்று கேட்ட இன்டரெஸ்டிங் ஆரம்பத்துடன் அண்ணனும் தம்பியும் கோவிலில் பேசிக்கொண்டவற்றை எழுதி.. அவரின் தளர்ச்சிக்கு வருந்தி..  

“இந்த ட்ரிப்புக்கு நான் எவ்ளோ தரணும்?”

“சிவாஜி படத்தின் ப்ரிவ்யூவுக்கு ஒரு டிக்கெட்” என்று சொன்ன தேசிகன் ஏற்கனவே ஒத்திகை பார்த்திருப்பாரோ?

கட்டுரையை இவர் முடித்திருக்கும் விதத்தில் கண்கள் நனைவது உறுதி (ஏற்கனவே படித்திருந்தால்தான் என்ன? எத்தனை முறை படித்தாலும்தான் என்ன? மீண்டும்+ படித்தேன்!)
•••
அமுதவன் கட்டுரை அற்புதம். நான் இரண்டு முறை படித்ததோடு என் கணவர் படிக்கும்போது கொக்கு மாதிரி எட்டிப் பார்த்து மூன்றாம் முறை படித்தேன். அதே இடங்களில் சிரிப்பு வந்தது.

கமல ஹாசன் சுஜாதாவைச் சந்திக்க விரும்பியதால்  அமுதவன் அதற்கு ஏற்பாடு செய்ததை எவ்வ்வ்ளோ சுவையாய்ச் சொல்லியிருக்கிறார். அதற்கு எத்தனை தடைகள். 

இந்தக் கட்டுரையில் எம் எஸ் பெருமாள் சாரும் வருகிறார். 

சுஜாதாவைச் சந்திக்க கமல் வெறித்தனமான ஆவல் காட்டியிருக்கிறார்!

கமல் வீட்டு வாசலில் அமுதவன்+ அகிலன் கண்ணன் காத்திருந்ததை... அங்கே சுஜாதா மாமனாரின் ஆஸ்டின் காரில் வந்ததை.. சரியாக வாசலில் வந்து  கார் நின்றபோது, “காம்பவுண்டுக்குள் நிறுத்த இடமிருக்காய்யா” என்று கேட்டதை.. ஸ்டார்ட் செய்தபோது மக்கர் செய்து அது நின்றுவிட்டதை.. சங்கடத்துடன் அதைத் தள்ளிவிடுமாறு மெல்க்யூவை அவர் கேட்டதை (அமுதவனை மெல்க்யூ என்று இயற்பெயர் சொல்லி அழைக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் சுஜாதா.. மற்றொருவர் … கிகி) 

மெல்க்யூவும்  அ.கண்ணனும் சுஜாதாவின் (மாமனாரின்) காரைத் தள்ளியதை.. பலம் போதாமல் அது இஞ்ச் இஞ்ச்சாக நகர்ந்ததை.. அப்போது அம்பாசிடரில் அங்கு வந்த கமல் ஓ..டி வந்து காரைத் தள்ளியதை, வாத்யார் பதறியதை… “பதற்றத்தில் எங்கயாவது பிரேக்கை கீக்கை அழுத்திப்புடாதீங்க” என்று  கமல் ஜோக் அடித்ததை… கமல் அறையில் அலங்காரப் பொருளாக நிஜ மண்டையோடு வைத்திருந்ததை.. க்ளாஸாய் வி(வ)ரித்திருக்கிறார் அமுதவன். 

கட்டுரையின் உச்சக்கட்டம்.. 

திரும்பிப் போகும்போது தானும் வரவா என்று கமல் கேட்க மகாபலிபுரத்திலிருந்து இந்த சந்திப்புக்காக விரைந்து வந்த கமல் மறுபடி மகாபலிபுரம் ஷூட்டிங் போக வேண்டுமே என்று சுஜாதா தயங்க.. “வழியில் கார் நின்னுடுச்சுன்னா தள்ளணும் இல்லையா” என்று கமலின் குறும்புக் கேள்வியுடன் கட்டுரை முடிகிறது.

•••

ஒரு ஆன்மிகப் பயணத்தை இப்படியுமா எழுத முடியும்? அழுகை.. சிரிப்பு.. திகில் என்று நவரசக்கட்டுரை அது. 

ஆளை விடுங்க. 346 பக்கத்தை ஒரு பதிவுக்காக இந்த அளவுதான் சுருக்க முடியும். நீங்களே வாங்கிப் படித்து பிரமித்துக்கொள்ளுங்கள்.


நன்றி : Ms வேதா கோபாலன், விகடன் மற்றும் முகநூல்.

கருத்துகள் இல்லை: