1 ஆக., 2020

இன்றைய வாசிப்பு : தி. ஜானகிராமனின் நாவல்கள்



இன்றைய வாசிப்பு :
"தி. ஜானகிராமனின் நாவல்கள் ""


ஒரு மறு வாசிப்பு அனுபவம் "
திரு தி.சு.நடராஜன் அவர்கள் எழுதியது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் வெளியிட்டுள்ளது .
விலை ரூபாய் 45 /மொத்த பக்கங்கள் 58. முதல் பதிப்பு 2013.
   என்ன படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது திரு வேடியப்பன் அவர்கள் பரிசாக கொடுத்த பத்து இதழ்கள் "நிலவெளி "கண்ணில் பட்டது.
     டிசம்பர் 2019 இதழ் நோக்கும்போது ஜெயகாந்தன் பற்றி பேராசிரியர் திரு நடராஜன் ஏதோ நேர்காணல் சொல்லியிருப்பதாக கண்டேன் .எடுத்து படிக்க ஆரம்பித்தேன் .அதில் அவரின் பேட்டியை முழுமையாக வெளியிடப்பட்டிருந்தது .சிறுகுறிப்பு போல அவர் எழுதிய புத்தகங்கள் அவர் குறித்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது .
     81 வயதான பிறகும் கூட அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார் .அவர் எழுதிய புத்தகம் "தி ஜானகிராமன் நாவல்கள் ஒரு மறு வாசிப்பு அனுபவம்" என்ற புத்தகம் கண்டேன் .அந்த புத்தகம் என்னிடம் இருப்பதாக நினைவுக்கு வர அக்டோபர் 2017 இல் வாங்கியது ,எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
   பேராசிரியர் திரு தி.சு.நடராஜன் அவர்கள் திருத்தங்கல் என்ற ஊரில் விவசாயக் குடும்பம் பின்புலத்தில் 1939ஆம் ஆண்டு பிறந்தவர் .தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர் .திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும் ,மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் , வார்சா பல்கலைக்கழகம் ,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார் .
    சாகித்ய அகாதமி ஞானபீடம் போன்ற இலக்கிய அமைப்புகளில் செயல் ஆற்றி உள்ளார் .
     தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற துடன் இணைந்து இன்று வரை ஆர்வத்துடன் இயங்குகிறார் .கணக்கற்ற புத்தகங்கள் எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்த்துள்ளார். சாகித்திய அகாதமி தொகுப்புகள் :தமிழில் திறனாய்வு பனுவல்கள் ,புதிய தமிழ் இலக்கிய வரலாறு 3 தொகுதிகள் எழுதியுள்ளார் .
     இன்றும் ஒரு இளைஞரைப் போல செயல்பட்டு கொண்டிருக்கும் இவரின் இந்த புத்தகம் வாசிப்பதில் ஒரு உந்துதல் பெறுகின்றேன்.
   பொதுவாக இளைஞர்கள் ஏனையவர்கள் இதுபோல ஆய்வு பணியை மேற்கொள்வார்கள் .எம்பில் படிப்பவர்களும் முனைவர் பட்டம் பெற முனைபவர்கள் இதுபோல ஆய்வுகளுக்காக எழுதுவார்கள். ஆனால் தி.சு .நடராஜன் அவர்கள் இந்த முதிய இளைய வயதில் இதுபோல் புத்தகம் எழுதுவது ஆச்சரியம் தக்கதாக உள்ளது.
****

   தமிழ் இலக்கிய உலகில் திஜாவிற்கு என்று ஒரு நாற்காலி இருந்தது .அவரது புதினங்கள் இன்றைய நவீன தமிழ் இலக்கியத்தோடு மட்டுமல்லாமல் நாளைய தமிழ் இலக்கிய உலகத்தின் வாயிலில் நின்று வரவேற்பவை.
       தி.ஜாவின் படைப்பு இலக்கியத்திற்கான ஒரு கனம் இருக்கும்; ஒரு நிறம் இருக்கும் .அது தமிழ் இலக்கியவாதிகளின் 
உள் உணர்வுகளோ டு  பேசி கலக்கும் குணமுடையது.
***
முன்னோட்டமாக கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது :
தமிழில் புனைகதை உலகத்தில்
வரலாற்றின் ஒருபகுதியாகிப் போனவர் 
தி .ஜானகிராமன் .தமிழ் இலக்கியம் உரைநடையில் கதைகள் சொல்லி, நவீனமாகிக் கொண்டிருந்த காலத்தில் அவரோடு இணைந்து நின்ற தன் பங்களிப்பைச் செய்திருக்கிறார் .
நவீன தமிழ் இலக்கியத்தின் பரப்புகளை புரிந்து கொள்ள விரும்புகிற போது 
தி. ஜாவையும் சேர்ந்து புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது . தி. ஜா.வுக்குப்  பிறகு தமிழ் புனைகதை உலகம் வேறுபட்ட திசைவழிகளோடு கூர்மையாகவும் விசாலமாகவும் வளர்ந்து வந்திருக்கிறது. புதிய புதிய சொல்லாடல்களை நிகழ்த்திக் கொண்டே அவை ,கதைகளை பிரதி பண்ணுகின்றன .
அவற்றினூடே தி. ஜா வை மறுவாசிப்பு செய்த போது அவருடைய வலிமை தெரிகிறது .அவருடையஅவசியத் தேவையும் தெரிகிறது .அதேபோது போதாமையும் புரிகிறது .",என்பதாக நடராஜன் அவர்கள் குறிப்பிடுகிறார் .
மேலும் ,
"அன்று ,கும்பகோணம் ,தமிழ் இலக்கிய சூழலுக்கு ஒரு முக்கியமான மையம் .
கு.ப.ராஜகோபாலன் ,தி ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு ,எம் .வி .வெங்கட்ராம், ஆகியோர் இந்த மையத்தின் நாயகர்கள்.

       "உறைக்க வைப்பது தி.ஜாவின் பாணி. அல்ல; உணரவைப்பது அவருடைய பாணி. அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் இன்றும் பரவலாக தீவிர வாசிப்புக்கு இடம் தந்து வருகின்றன."என்கிறார் ஆசிரியர்.
    தி. ஜா.விடம் மேல் ஆதிக்கம் செலுத்துவதாக காணப்படுவது," ஆண் பெண் உறவு "பற்றிய நிலைப்பாடும், அதனை சுற்றி சூழ்ந்து கிடக்கிற அதன் மொழியும் தான் .இந்த உறவு ,காதல் என்பதை புரிந்து கொள்வதிலும் ,அதனை வாழ்வதிலும் ,ஜோடி தேர்வு பற்றிய நடவடிக்கையிலும்  , அதன் விளைவான திமிறல்களிலும் ,என்று இப்படியாகப்பட்ட சூழமைவுகளோடு பின்னிக் கிடக்கிறது.
     தீர்மானத்தைக் கொண்ட எல்லையில் நின்று கொண்டு ,அதற்குள் மனித நேயத்தோடும் மாற்று தேடுகிற ஒரு அனுதாபத்தோடும் மனித உணர்வுகளை சொல்லோவியங்கள் ஆக்குகின்றன 
தி. ஜா.வின் நாவல்கள்.
      " தி.ஜாவின் நாவல்களை மீண்டும் வாசிப்பு செய்கிறபோது காதல் ,மோகம், குடும்ப உறவு ,தாய்மை , ஆண் என்னும் ஆளுமை முதலிய 
 நிறுவனகருத்தோட்டங்களுக்கு அவை மாற்று பனுவல்களை முன்வைப்பதும், மனித உடல்களை அழகியல் சார்ந்த மொழி பிரதேசங்களாக கொண்டு வருவதையும், மரபு சார்ந்த தத்துவங்களையும் ,சமயம் சார்ந்த புநிதங்களையும்  மற்றும் நம்பிக்கைகளையும் கவிழ்த்துவிட்டு போன்ற முயற்சிகள் தென்படுவதையும் மேலும் சந்திக்கிறோம்."என்கிறார் ஆசிரியர்.

 " தி.ஜாவின் வாசிப்புத் தளம் உயிர்ப்புடன் விளங்குவதற்கு இப்ப்படி சில சங்கதிகள் சாட்சிகளாக நிற்கின்றன .இந்த நூலும் அப்படியாகப்பட்ட சாட்சியங்களை முன்வைத்து வாசிப்புகளை பகிர்ந்து கொள்கிறது "என்று திரு நடராஜன் அவர்கள் முன்னோட்டமாக தெரிவிக்கிறார்.
*****
இனி *தி .ஜானகிராமனின் நாவல்கள் ஒரு
மறு வாசிப்பனுபவம் *புத்தகத்தின் உள்ளே செல்வோம் வாருங்கள்.:......
    தி. ஜா.வின் பல நாவல்களை கட்டுரைகளை கதைகளை எல்லாம் படித்து பல தலைப்புகளில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

1)இடமும் காலமும் :
தி ஜானகிராமனின் நாவல்கள் அனைத்துமே சுதந்திர காலத்திற்குப் பின்னர் தான் எழுதப்பட்டன .ஆனால் இவற்றின் கதைகள் சற்று முந்திய தமிழகத்தின் நிலையை பெரிதும் நிலைக்களனாக கொண்டிருக்கின்றன. தஞ்சையை ஒட்டிய பகுதிகளிலேயே அநேகமாக எல்லாக் கதைகளும் நிகழ்வதாக அவர் எழுதி இருப்பார் .காரணம் தஞ்சை மண்ணில் அவர் கிளைத்து ,திளைத்து வாழ்ந்து அனுபவம் கொண்டதுதான் .இதன் காரணம் பற்றி அவரை *பிராந்திய எழுத்தாளர்" என்று க. நா.சுப்ரமணியம் கூறுகிறார். அதனை இந்த ஆசிரியர் மறுக்கிறார். படைப்பிலக்கியத்தில் வட்டாரம் என்ற சொல் பொய்யானது ,தவறானதாகும். படைப்புத் துறையில் ஈடுபட்டு இருப்பவனை பொறுத்த அளவில் அது ஒரு பொருளற்ற சொல் .சாதாரணமாக அவன் வாழ்க்கையையே சித்தரிக்கின்ற பரிமாணம் அதற்கு ஒரு பின்புலம். அவ்வளவுதான் .என்கிறார் ஆசிரியர்.
2) "பின்புலம் "
பின்புலமாக தேர்ந்தெடுக்கப் பட்ட இந்தத் தஞ்சை சீமை ஆசிரியருக்கு மிகவும் தொடர்புடையதாகவும் அமைந்துவிடுகிறது. தான் பிறந்து வளர்ந்த தஞ்சை சமூகத்தின் ஆன்மாவை மிக அழகாகப் புரிந்துகொண்டு சித்தரிக்க வசதியாக உள்ளது என்கிறார் ஆசிரியர்.
பாரதியார் குறிப்பிடும் மகாசக்தியின் பெண்ணாக இந்த சமூகத்தை கலைவடிவமாக மறு உற்பத்தி செய்ய கருதுகிற போது காதல், திருமணம், குடும்பம், என்ற நிறுவனங்களுக்கு இடையே உயிர்ப்புடன் பின்னி,  திணறிக்கொண்டு கிடக்கும் ஆண் பெண் உறவுகளில் பிரதானமாக தி. ஜா.வுக்கு முன் தரிசனம் ஆகின்றன .இவை உண்மையானவை ;ஆனால் தொன்மையானவை; உணர்வு வடிவமானவை .மொழியால் தூலப்படுத்துவதற்கு முரண்டு பிடிப்பவை. அதே சமயம் தர்ம சங்கடமானவை.ஆனால், சொல்லப்பட வேண்டியவை. நெருடலான இந்த உணர்வுடன் பரிமாணங்களில் அவர் புலப்படுத்தி இருக்கின்ற கலைத்திறனும் கருத்தமைவும் கவனத்தை ஈர்ப்பவை; நேர்த்திகளுடன் கூடிய நல்ல மாதிரியாக நிற்பவை" என்கிறார் ஆசிரியர் 

3)பிரச்சினைகள்:
இந்த நாவல்களில் பொதுவாக இழையோடும் பிரச்சனை ,மரபு மாற்றங்கள் பற்றியது .இதனை மையமாகக் கொண்டு முன் நிறுத்துவதாகவும் ,அல்லது மாதிரியாக இருந்து இனம் காட்டுவதாகவும் ஆண் பெண் உறவுகள், தி. ஜா .வின் நாவல்களில் எடுத்துரைப்பு செய்யப்படுகின்றன .இப்பிரச்சனை சிதறி கொண்டிருக்கும் நிலவுடைமைச் சமுதாயத்தின் மத்தியில் இருந்து எடுக்கப்படுகிறது. "என்கிறார் ஆசிரியர்.
4) "பொருந்தாத் திருமணம் ":
பொருத்தமற்ற மண உறவு என்பது முக்கியமாக உடல்வாகுகளிலும், வயதுகளிலும் ,உணர்வுகளிலும் உள்ள வேறுபாடுகளை சார்ந்தவையாகவே ஆசிரியரால் சித்தரிக்கப்படுகிறது .
அம்மா வந்தாள் நாவலின் அலங்காரத்தம்மாவுக்கும் தண்டபாணிக்கும்,
மரப் பசுவில் சீராளிக்கும் அவள் கணவனுக்கும் ,மோகமுள் தங்கத்திற்கும் தலைமைக் குமாஸ்தாவிற்க்கும், உள்ள முடிச்சு பொருத்தமில்லாத முடிச்சாகவே வருணிக்கப்படுகிறது .இந்த பொருத்தம் என்பது பெண்ணுக்கு தான் பாதிப்பு .
சோரம் போகிறாள் .ஆனால் சோரம் கோரம் என்பதெல்லாம் மூன்றாவது பேர்வழிகள் சொன்ன வார்த்தை .பாதிக்கப்படுவதாக சொல்லப்படுபவர்கள் அப்படி நினைக்க வேண்டுமே ? தி. ஜா .என்ற படைப்பாளியும் அப்படி நினைப்பதாகத் தெரியவில்லை" என்கிறார் ஆசிரியர்.
5) "சமூக அங்கீகாரம் "
       "சமூகத்தில் அங்கீகாரம் என்பது பெண்ணுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது .சமூகத்தின் பெரும் நீரோட்டத்தில் சட்டமும் சமூகமும் ஏற்றுக் கொள்ளாத உறவுகள் நடைமுறையில் பெண்ணை ஒரு வன்மத்துடன் துன்புறுத்துகின்றன .ஆண் பாதுகாப்பாக இருந்து கொள்கிறான் .இதனை மோகமுள் அழகாகச் சித்தரிக்கிறது .
  சைமொன் பெயுவோர்(Simon De Beauvoir, The Second Sex)கூறுவதுபோல இந்த சமுதாயத்தின் ஆண்-பெண் இணைப்பானது , சேர்ப்பானது விருப்பத்தின் அடிப்படையில் அமையப் பெறுவது 
இல்லை .ஒரு வகையான 
நிர்ப்பந்தங்களின் அடிப்படையில் அமைகிறது .இதனால் ஏங்கல்ஸ் கூறுவதுபோல "சோரம் போதல் "ஒரு சமூகநீதி ஆகிவிடுகிறது "என்கிறார் ஆசிரியர்.
6)"சோரம் போதல் "
சோரம் போதல் பற்றி சொல்வதில் 
தி. ஜா.வுக்கு ஒரு தனி ஈடுபாடு இருக்கிறது. உண்மைதான் .பல நாவல்களில் இதனை சித்தரிக்கின்றார் .இந்த செயல்களை முன்னெடுத்துச் செல்பவர்கள் பெரும்பாலும் பெண்களே .அவர்களுக்கு ஏதோ ஒரு சூழல் இருக்கும்.
7)"சுதந்திரக் காதல் "
தி.ஜா.வின் பெண்கள் பல வகைப்பட்ட பரிமாணங்களின் பிரதிநிதிகள். பெண்ணடிமைத்தனத்தின் வெவ்வேறு அடையாளங்கள் என்ற முறையிலும், உணர்ச்சிகளின் வண்ணங்களுக்கு உகந்த பிம்பங்கள் தருபவர்கள் என்ற முறையிலும், ஒரு சமூக மாற்றத்தின் திசைவழியில் அடையாளங்களாக நிற்பவர்கள் என்ற முறையிலும் ,இப்படிப் பெண் கதைமாந்தர்கள் பல்வேறு கோணங்களில் அசைவுகளில் சித்தரிக்கப் பட 
வேண்டியவர்களாக இருக்கிறார்கள் .இதன் மேல் சிறப்பான கவனம் கொண்டு இருக்கிறார் .அவருடைய சிறப்புகளில் இது முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.", என்கிறார் ஆசிரியர் .
8)"காதல் கோணங்கள்".
         உடல்களின் கட்டற்ற சுதந்திரமான விளையாட்டுகளுக்கும் ,உறவில்லாத உறவுகளுக்கும் இடையே காதல் என்பது இல்லை .காதல் அவசியம் இல்லாமல் இருக்கலாம்.
காதலை கண்டு கொள்ளாமல் போய்விட முடியுமா? .தனி மனித உணர்வுகளும் சமூக நிலைப்பாடுகளும் ஊடாட்டம் செய்கிற காதலை தி.ஜா .மறக்கவில்லை. எதார்த்தமாக சித்தரிக்கவே  விரும்புகிறார். அதற்கு பல வடிவங்கள் உண்டு .அந்த வடிவங்களோடு சித்தரிக்கிறார் ,"என்கிறார் ஆசிரியர்.
9)"பாபு -யமுனா ".
        மோகம் முப்பது நாள் குத்தும் .அப்புறம் மங்கிப் போய்விடும் என்பார்கள் .ஆனால் பாபு 10 ஆண்டுகளாக காத்திருந்தானே. எட்டின மோகம் மட்டுமல்ல எட்டாத போகமும் அப்படித்தான் .ஆனால் தயக்கம் ,பயம், எவ்வனம் ,கர்வம் ,பிடிவாதம் ,ஆதரவு எல்லாம் ஒரு முடிவுக்கு வருகிறது .மோகம் முள்ளாக அல்லாமல் முள்களிடையே கனியாக நிற்கிறது.
10)"பெண் அசாதாரணமானவள்."    
          அசாதாரணத் தன்மை வாய்ந்த இத்தகைய பெண்களைப் பார்க்கிற ஆண்கள் இவர்களை பார்த்து பயப்படுகிறார்கள். இவர்களை முழுமையாக அடைய முடியுமா என்று எண்ணி பிரமிப்பு அடைகிறார்கள் . அவளை நடைமுறை வாழ்வில் இருந்து தூக்கிக் கொண்டு போய் கோயிலில் உட்கார வைப்பது தான் ஆசிரியர் நோக்கமா. என்னதான் அற்புத பண்புகள் நிறைந்தவளாக இருந்தாலும் சாதாரணமானவளாக இருந்தாலும் எந்தப் பெண்ணும் அல்லது ஆணும் மனித வர்க்கத்தை சேர்ந்தவர் தான்.

11)"கூட்டுக் குடும்பம் "...
கூட்டுக் குடும்பமாக சேர்ந்து வாழ்கிற குடும்ப அமைப்பைத் தான் தி.ஜா.வின் புனைவுகளில் பரவலாகக் காணப்படுகிற குடும்பம் .அது பொருத்தமில்லாத உறவுகளால் ஆனதாக இருக்கலாம், பொருமிக் கொண்டிருக்கலாம் .கத்தரித்து ஓட நினைக்கலாம் . பொங்கிக் கொண்டும் இருக்கலாம் .ஆனால் இவற்றின் ஊடே  சமரசத்தோடும் ,பெரும் நீரோட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் குடும்பம்தான் தி.ஜா.வின் நாவல்களில் தூக்கலாக காணப்படுகிறது என்கிறார் ஆசிரியர்.

12)"தரங்கள் பல ".....
தி.ஜா.வின் நாவல்கள் பொதுவாக எல்லாமே ஒரே தரத்தில் அல்ல .முதல் நாவலாகிய அமிர்தம் ஒரு கலைப்படைப்பு என்ற முறையில் தோல்வி அடைந்த ஒரு நாவல் .11 ஆண்டுகள் கழித்து பிறந்தது மோகமுள் .எவ்வளவு வேறுபாடு .
நாவலின் கட்டமைப்பு எடுத்துரைக்கும் போது சொல்லுகிற விஷயத்தின்அடர்த்தி, அதனுடைய தேவை,பொருத்தம், ஒரு கதை மாந்தர்களின் வகைமாதிரி தன்மைகள், நடப்பியல் சார்பு ,மொழிநடை என்ற நிலைகளில் பார்த்தால் 'மோக முள்ளுக்கும்' 'அம்மா வந்தாளுக்கும் 'சிறப்பான இடங்கள் உண்டு என்கிறார் ஆசிரியர்.
13)"இருத்தலின் கணங்கள் "...
  "கணங்களை இருத்தலின் 
துணுக்குகளாகவும் ,நித்தியங்களாகவும் கண்டு அதனை சுகிப்பது உண்மையின் வடிவம் எனக் கொண்டு அந்த வாழ்வு நிலையை சித்தரிப்பதாக இதன் பெரும் பகுதி அமைந்துள்ளது .ஆனால் முடிவாக தி.ஜா. வாழ்க்கை பற்றிய இன்னொரு நிலைப்பாட்டை அதிலேயே முன்வைக்கிறார் .நிலையாமை, முக்கியமாக இளமை நிலையாமை பற்றிய உணர்வு நிலை ,வருங்காலத்தைப் பற்றிய ஒரு பாதுகாப்பின்மை ,மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் கட்டற்ற மனநிலை, அதற்கிடையே அடங்கிப்போன ஒரு சமரச மனப்போக்கு ,என்று இப்படி ஒரு நிலைப்பாட்டையே மரப்பசு இறுதி வாசிப்பாக  முன்வைக்கிறது" என்கிறார் ஆசிரியர்.
14)"சோரமும்  சகிப்பும் "..
  "சோரம் போதல் தி.ஜா.வின் நாவல்களில் ஒரு முக்கியமான எடுப்பு. அலங்காரம் சுய நினைவுடன் தன் குடும்பத்தில் உள்ளோர் கணவர் உட்பட அறிந்திருக்க சோரம் போகிறாள் .அப்படி இருந்தும் அருவருப்பு எதுவும் இல்லாமல் அதே நேரத்தில் அனுதாபத்துடன் சித்தரித்து இருப்பது இந்த நாவலின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று .பன்முக வாசிப்புகளுக்கு ஒரு பரந்த வெளியை அலங்காரத்தின் படைப்பு தருகிறது,"என்கிறார் ஆசிரியர்.
15)"பாத்திரப்படைப்பு "...
பாத்திரப் படைப்புகளை பொறுத்த அளவில் எல்லா பாத்திரங்களுமே, பொதுவாக ஜீவன் நிறைந்தவர்களாக அமைந்திருக்கின்றன.
பா. வேங்கடராமன் கூறுவது போல (கணையாழி டிசம்பர் 71)"மனித இயல்பும், வாழும் காலத்தில் நிறை குறைகளை உடைய, லட்சிய ஜீவன்களாக ,ஜீவத் துடிப்பும் யதார்த்த இணைப்பும் உடையவையாக இப்பாத்திரங்கள் அமைந்துள்ளன .தலைமைப் பாத்திரங்கள் மட்டுமல்ல ,சிறு பாத்திரங்களை அமைப்பதிலும் தி. ஜா.கவனம் செலுத்துகிறார்."
   " பிராமணக் குடும்பங்களில் இருந்தே தன்னுடைய கதைமாந்தர்களை தேர்வு செய்கிறார் .பழமையையும் சம்பிரதாயங்களையும் ,அதே சமயத்தில் மாற்றங்களையும் புதுமைகளையும் மேலும் சமரச பட்டுக் கொள்கின்ற நிலைமைகளையும் 
பிரதிநிதிப்படுத்துவதற்கு பிறரினும் அவர்களே ஏற்புடைய அவர்கள் என்று கருதி இருக்கலாம்."
       தி.ஜா.வின் பாத்திரங்களில் பெரும்பாலும் பெண்களே .
அறிவும் ஆற்றலும் சுறுசுறுப்பும் உடையவர்களாகவும் ,முன்முயற்சி எடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் விசாலமான குணங்களிலும் பன்முகப்பட்ட பரிமாணங்களிலும் வைத்துப் பேசப்படு்பவர்களும் இவர்களே.ஆண்கள் பெரும்பாலும் அடங்கி அல்லது தாழ்ந்து போகக்கூடியவர்கள் .பெண்களுடைய பண்பு நிலைகள் ,செயல்பாட்டு நிலைகள் முதலியவற்றை காட்டுவதற்கு 
பின்புலன்களாக பல சமயங்களில் இந்த ஆண்கள் பயன்படுத்திக் 
கொள்ளப்படுகிறார்கள் .பொதுவாக தன்னுடைய பாத்திரங்களை நல்லவர்களாக தருவதில் கவனம் செலுத்துகிறார்."
   ஜானகிராமனின் நாவல்களில் பாத்திரங்களை பற்றிக் கூறவந்த ஆதவன் (கணையாழி டிசம்பர் 71) "இவற்றில் வருகின்ற முக்கிய பாத்திரங்கள்,தம் வர்க்கத்தின் பிரதிநிதிகள் அல்லாத தனி மனிதர்கள் .ஆனால் உப பாத்திரங்கள் தனித்தன்மை குறைவாக உள்ளவர்கள். தம் வர்கத்தினராக அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவர்கள் "என்று சொல்கிறார்.
16)"நகர்வுகள் "....
உருவமே நானாவித விஷயங்களையும் மற்றும் ஆசிரியரின் கண்ணோட்டத்தையும் கலைப்படைப்பாக நமக்கு காட்டுகிறது. நடைமுறை அனுபவங்களை ,இலக்கிய அனுபவங்களாக மாற்றிக் காட்டுகிறது. ஜானகிராமன் ;ஒரு கதை சொல்லியாக இருந்து ,கதையை நடத்திச் சென்ற முறை முக்கியமானதாகும் .சிரமமோ, மருட்டலோ இல்லாமல் இந்த கதை சொல்லுதல் அமைந்துள்ளது."என்கிறார் ஆசிரியர்.
17) "உரையாடல்கள் "...
நாவல்களின் குறிப்பிடத்தக்க உத்திகளில் ஒன்று .அவர் ,பல இடங்களில் உரையாடல்கள் மூலமாகவே கதை நிகழ்ச்சிகளைக் கொண்டு செல்கிறார் என்பது. தஞ்சை சீமை பாஷைகளை அப்படியே அப்பட்டமாக கலைகளில் புகுத்தியிருப்பது அவரது திறன்களில் ஒன்று.
18)"உடல்மொழி "
நாவல்களில் வருணனைகள்  முக்கியம்தான் .ஆனால் காப்பியத்தின் உரிமை நாவலுக்கு கிடையாது .
தி.ஜா.வின் நாவல்களில்  வர்ணிப்பு செட்டுமையுடன்  இடம்பெறுகின்றது. 
நள பாகத்தில் மட்டும் தான் இயற்கை வருணனை  சற்று குறிப்பிடும்படியாக உள்ளது .அம்மா வந்தாளின்  இறுதிவரி
 "அவள் தலைக்கருகில் தாழ்வாரத்தில் சுவரில் ஒரு சிட்டுக்குருவி வால் தூக்கி  கொண்டே கத்தி கொண்டே இருந்தது .கால் துவள, கீழே உட்கார்ந்து கொண்டாள் "என்று முடிகிறது .இது ஒரு வகையில் இயற்கை வருணனை.
கதை மாந்தர்களின் உருவம் வர்ணணைகள் தி.ஜாவின் எல்லா நாவல்களிலுமே இடம்பெறுகின்றன .வேறு எந்த புனைகதை ஆசிரியாரிடமும் இந்த அளவு உடல் வருணனைகள் இடம்பெறுவதில்லை .இது தி. ஜா.வின்தனி சிறப்பு இயல்பான ஒரு பண்பு.இந்த விவரணைகள் பாத்திரங்களை வாசகர்களின் மனக்கண் முன் தசையும் ரத்தமாக தத்துரூபமாக கொண்டு வந்து நிறுத்துகின்றன"என்கிறார் ஆசிரியர்.

   இறுதியாக ஒரு படைப்பாளியை இனம் காட்டுவதும் ,அவருக்கு ஒரு இடத்தை நிர்ணயிப்பது எது?.  
அது ,உயிரோட்டமான எடுத்துரைப்பு திறனும் எடுத்துரைக்கும் பொருளின் அதன் அடர்த்தியும் அதன் நோக்கத்திலேயே உள்ளத் தெளிவும் வாசிப்புக்காக திறந்து விட்டிருக்கிற வெளியும்,  உண்மையும் தான். வார்த்தைகளுக்குப் பின்னால் போகாமல், சப்தங்களையும் மௌனமாக்கி செய்திகளையும் செயல்களையும் உணர்வுகள் ஆக்கி ,கைகளில் தூரிகைகளோடு போகிறார் தி. ஜா.
பல சமயங்களில் அங்கே தான் 
தி. ஜா.வைப் பார்க்கிறோம் .அதன் போது, தி. ஜா.வை அத்தகையதொரு இலக்கிய தளத்தில் நாம் சரிவரப் புரிந்து கொள்கிறோம் .அவரை மட்டுமல்ல ,அவரைப் போன்ற எல்லா படைப்பாளிகளையும் தான் ."என்கிறார் ஆசிரியர் முடிவுரையாக.

      முதலில் இந்த புத்தகத்தை
தி. ஜானகிராமனுக்காகவும் எனக்காகவும் படித்தேன் .இப்பொழுது இந்த புத்தகத்தை ஐயா திரு .நடராஜன் அவர்களுக்காக படித்தேன் .
     படித்த முடித்த பின் எனக்குள் ஒரு ஊக்கம் ,ஒரு உந்துதல் ,ஒரு அகத்தூண்டல் ஏற்பட்டுள்ளது .இதே போல நாமும் ஏன் ஒரு எழுத்தாளரின் புத்தகங்களை இவ்வாறு ஆராய்ச்சி செய்து எழுதக்கூடாது என்று .இந்த அகத்தூண்டல் ஏற்படுத்திய நடராஜன் ஐயா அவர்களுக்கு, அவரின் எழுத்துக்கு நன்றி.


திரு கருணா மூர்த்தி, தி.ஜானகிராமன் இலக்கிய வட்டம், முகநூல்.

கருத்துகள் இல்லை: