4 அக்., 2020

நூல் நயம் : திஜாவின் அம்மா வந்தாள்

அம்மா வந்தாள்
தி ஜானகிராமன்
ஐந்திணைப் பதிப்பகம்

 ஆணின் உணர்வுகளை அங்கீகரிக்கும், அவனது தவறுகளை விரைவாக மன்னிக்கும் சமூகம், பெண்ணின் உணர்வுகளை அங்கீகரிப்பதோ, அவளது தவறுகளை மன்னிப்பதோ இல்லை என்பது நிதர்சனம்.

 வெகுகாலமாக அன்பு, கற்பு போன்ற தளைகளால் பெண் வலுவாக ஒடுக்கப்பட்டிருக்கிறாள்.

 விவாதிக்கவே இயலாத பேசுபொருளைக் கொண்டு தனது எழுத்துக்களால் பெரும் இலக்கியமொன்றை வடித்துவிடுகிறார் தி.ஜா.

 மகனை வேதம் பயிலும் பொருட்டு பாடசாலைக்கு அனுப்பிவிட கணவர் தண்டபாணியைத் தூண்டுகிறாள் அலங்காரத் தம்மாள்.

 வேதம் பயின்று ஞானியாக மாறிவிடும் மகனின் கால்களில் விழுந்து அவளது குற்ற உணர்வுகளை அக்னியில் பொசுக்கிவிட எண்ணுகிறாள்.

 பாடசாலையில் சிரத்தையுடன் வேதம் பயிலும் அப்பு, தாயின் எண்ணத்தைப் போன்று ஞானவானாகவே மாறுகிறான்.

 இந்துவின் அன்புவேண்டலை துணிவாக, வலுவுடன் மறுதலிக்க முடிகிறது அவனால்.

கையறு நிலையில் தனது தாயாரைப் பற்றிய இந்துவின் சீண்டலில் நிலைகுலைகிறான் அப்பு.

 பதினாறு ஆண்டுகள் கழித்து தனது இல்லம் திரும்பும் அப்புவிற்கு, அங்கு நடக்கும் நிகழ்வுகள் இந்துவின் வார்த்தைகளை நினைவுபடுத்துகின்றன.

 தனது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரிடம்கூட அவனால் தெளிவுபெற முடியவில்லை. வீட்டிற்கு சிவசுவின் தொடர்ச்சியான வருகைகள் அவனுள் பெரும் எரிச்சலை மூட்டுகிறது.

 பாடசாலையை கவனிக்கும் பொருட்டு மீண்டும் காவிரிக்கரைக்குத் திரும்புகிறான். எதிர்பாராதவிதமாக மகனைத்தேடி அலங்காரத்தம்மாள் அங்கு வந்து விடுகிறாள்.

 மகனுடன் உரையாடி, விடைபெற்று, மரணிக்க காசிக்கு செல்கிறாள் அவள்.

 ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் சிவசுவைப் பார்த்து 'மீசையை எடுத்திட்டியாடா கோபு?' என்ற கேள்வியும், கடற்கரையில் சிவசு பற்றிய கேள்விகளுக்கு தந்தையின் சங்கடமான மௌனமும் அப்புவிடம் சஞ்சலங்களை ஏற்படுத்துகிறது.

 ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய சூழலில், இப்படியொரு நாவலை எழுதிய தி.ஜாவின் துணிவும், 'பிரஷ்டன்' பட்டத்துடன் விமர்சனங்களைத் தாங்கிக்கொண்ட அவரது மனஉறுதியும் தமிழ் இலக்கியத்தின் பெரும்பேறுகள்.

நன்றி :







கருத்துகள் இல்லை: