------------------------------------------------------
நல்லவேளை நீ இறந்து விட்டாய்!
------------------------------------------------------
அண்ணல் காந்தியே
நீ பிறந்த நாள் இன்று.
ஆனால் எனது
மனசு என்னவோ
நீ இறந்த நாளில் தான்
நிலைகுத்தி நிற்கிறது!
நல்லவேளை
நீ இறந்துவிட்டாய்.
முதுமையால்
நலிந்து நாராகி
இறந்து போகாமல்
சுட்டுவீழ்த்தப்பட்டாய்
என்பதும் நல்லதே!
"குறியீடுகள்"
முக்கியம் என்பது
நீ அறியாததா என்ன?
உனக்கு ராட்டை
ஒருவனுக்கு தோட்டா.
இரண்டுக்கும் சாட்சி
இந்த தேசத்தின்
மனசாட்சி.
வாராது வந்த
மாமணிகளை தோற்பது
என்பது
பழகிப்போன
பழைய வியாதி தானே!
நீ இறக்கும் போது
நான்
பிறந்திருக்கவில்லை!
ஆனாலும்
நீ அடிக்கடி
மீண்டும் மீண்டும்
கொல்லப்படுவதால்
உன் இறப்பு எனக்கு
கடந்த காலம் இல்லை.
நிகழ்காலம் தான்.
"ஒரு பெண் நள்ளிரவில்
பாதுகாப்பாக செல்ல இயல்வதே உண்மையான
சுதந்திரம்" என்றாய்.
நள்ளிரவெல்லாம்
பகல் கனவு மகாத்மா.
பட்டப்பகல் கூட
நள்ளிரவு என்பது தான்
கலவரப்படுத்தும்
கள நிலவரம்.
நீ பிறந்தது இந்தியா
படிக்கச் சென்றது இங்கிலாந்து.
பணியாற்றச் சென்றது
தென் ஆப்பிரிக்கா.
இருந்தாலும் நீ
திரும்பி வந்தாய்.
விரும்பி வந்தாய்.
வைகையில் உன்
மேலாடை களைந்து
நீரில் விட்டாய்...
வட்டமேஜையில்
"அரை நிர்வாண பக்கிரி"யாய்
நீ மட்டும் தான்
அழகாய் இருந்தாய்...
அண்ணலே
இதோ நாங்கள்
போட்டுடைத்த
உன்
நம்பிக்கைகள்
சிதறிக் கிடக்கின்றன
இந்த தேசத்தின்
தெருக்களில் எல்லாம்.
நள்ளிரவில்
உறவுகளின் அழுகுரல்
அடக்கப்பட்ட தனிமையில்
கையற்று எரிந்தது
மணிஷா "வால்மீகி"யின்
"அனாதையாக்கப்பட்ட"
பிணம்.
தேதிகளற்ற
வனாந்தரத்தில்
"வால்மீகி" என்ற
முகமற்ற யாரோ
முக்கி முனகுவது
யாருக்கும் கேட்கவில்லை!
"வைரஸ்"
எல்லா இடங்களிலும்
பரவிவிட்டது என்பது தான்
எதார்த்தம்.
"முகக்கவசம்" கூட
வசதியாகத்தான்
இருக்கிறது.
நல்லவேளை
நீ இறந்துவிட்டாய்.
அண்ணலே.
Balakrishnan R
ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
02/10/2020
புவனேஸ்வரம்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக