எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து :
காந்தியின் நிழலில் - 4 : டால்ஸ்டாயும் காந்தியும்.
1909 அக்டோபர் 1ம் தேதி லண்டனிலிருந்து டால்ஸ்டாயிற்குக் கடிதம் எழுதும் போது காந்தியின் வயது 40. அப்போது டால்ஸ்டாயின் வயது 81. டிரான்ஸ்வாலில் நடக்கும் காலனிய ஒடுக்குமுறைகளை டால்ஸ்டாயிற்குக் கவனப்படுத்த வேண்டும் என்பதுடன் அவரது A Letter to a Hindu நூலின் உரிமையைப் பெறவே காந்தி கடிதம் எழுதுகிறார்.
காந்தியின் கடிதம் போல உலகெங்குமிருந்து அன்றாடம் நாற்பது ஐம்பது கடிதங்கள் டால்ஸ்டாயிற்கு வருவது வழக்கம். கடிதங்களைப் படித்துப் பதில் எழுதுவதற்கென்றே அவர் தனியே நேரம் ஒதுக்கியிருந்தார். பெரும்பான்மை கடிதங்களை ரஷ்ய மொழியிலே டால்ஸ்டாய் எழுதினார். சில பிரெஞ்சில். ஆங்கிலத்தில் அவரது கடிதங்களை அவரது மகள் சாஷா மொழியாக்கம் செய்து அனுப்பி வைப்பதும் உண்டு. டால்ஸ்டாய் ஆங்கிலம் அறிந்திருந்த போதும் அதில் சரளமாக எழுத வராது என்று நினைத்திருந்தார்.
டால்ஸ்டாய் ஈபில் கோபுரம் பற்றி எழுதியிருப்பதைக் காந்தி முன்னதாக வாசித்திருக்கிறார். அத்தோடு the Kingdom of god is with in you என்ற கதையை வாசித்திருக்கிறார். அது காந்திக்கு மிகவும் பிடித்திருந்தது.
A Letter to a Hindu சி. ஆர் தாஸிற்கு எழுதப்பட்ட கடிதம். அதில் இந்திய விடுதலை அகிம்சையான வழியில் தான் சாத்தியம் என்று டால்ஸ்டாய் குறிப்பிடுகிறார். காந்தியை அது வெகுவாக ஈர்த்தது.
டால்ஸ்டாயிற்குக் காந்தி கடிதம் எழுதிய போது லண்டனில் சூழல் எப்படியிருந்தது தெரியுமா
1909 ஜூலை 10 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிலிருந்து லண்டனுக்கு வந்த காந்தி 1909 நவம்பர் 13 ஆம் தேதி வரை இருந்தார். 1909 ஜூலை 2 ஆம் தேதி மதன்லால் திங்க்ரா சர் கர்சன் வைலியை படுகொலை செய்தார். இந்தியாவின் சுதந்திரத்தைப் பெறுவதற்கான ஒரே வழியாக வன்முறை மட்டுமே இருப்பதாக இந்தப் படுகொலை கூறியது. இந்தப் படுகொலையின் சரி தவறுகளைப் பற்றி லண்டனில் வாழ்ந்த இந்தியர்கள் பலரும் தீவிரமாகப் பேசிக் கொண்டார்கள்.
வன்முறையை ஏற்றுக் கொள்ளமுடியாத காந்தி அகிம்சாவழியைத் தான் முன்னெடுக்க வேண்டும் என்றிருந்தார். அப்போது தான் டால்ஸ்டாயின் A Letter to a Hindu நகல் பிரதி அவருக்கு வாசிக்கக் கிடைத்தது. உடனே ரஷ்யாவிலிருந்த டால்ஸ்டாயிற்குக் கடிதம் எழுத முற்பட்டார்.
காந்தி டால்ஸ்டாயிற்கு எழுதிய முதற்கடிதத்தில் Yours Obedient Servant என்றே கையெழுத்திட்டிருக்கிறார். தன்னை ஒரு பணிவான வேலைக்காரனாக ஏன் காந்தி கருதினார். டால்ஸ்டாயை ஒரு ஞானியாகக் கருதியதே அதற்காகக் காரணம்
டால்ஸ்டாயின் நாவல்கள் எதையும் காந்தி படிக்கவில்லை பொதுவாக நாவல் படிப்பதில் அவருக்கு விருப்பமும் இல்லை. காந்தி லண்டனிலிருந்த நாட்களில் சார்லஸ் டிக்கன்ஸின் நாவல்களைப் படித்திருக்கிறார். அன்றைய லண்டன் சூழலில் டிக்கன்ஸ் மிகவும் புகழ்பெற்றிருந்தார். காந்திக்கு டிக்கன்ஸை பிடித்திருப்பதற்கு முக்கியக் காரணம் அவர் ஏழை எளிய மக்களின் துயர வாழ்க்கையை மிக யதார்த்தமாக எழுதியதே.
டால்ஸ்டாயிற்கும் டிக்கன்ஸை மிகவும் பிடித்திருந்தது. அவரது படிப்பறையில் டிக்கன்ஸின் உருவச்சித்திரம் ஒன்றை மாட்டியிருந்தார் டால்ஸ்டாய். ரூசோவின் எழுத்துகள் மீதும் டால்ஸ்டாயிற்கு மிகவும் மதிப்பிருந்தது. ரூசோவின் உருவம் பதிந்த டாலர் ஒன்றைக் கூட டால்ஸ்டாய் சில காலம் கழுத்தில் அணிந்திருந்தார். அந்த அளவு ரூசோவை அவர் நேசித்தார்.
காந்தியையும் டால்ஸ்டாயையும் இணைத்த புள்ளி பைபிள். இயேசுவின் மலைப்பிரசங்கத்தை இருவருமே ஆழ்ந்து படித்திருக்கிறார்கள். அன்பைப் போதிக்கும் பிரசங்கம் என இருவரும் வியந்து போற்றுகிறார்கள். அந்தப் பிரசங்கத்தின் வழியே நடக்கவிரும்பும் நானும் ஒரு கிறிஸ்துவனே எனக் காந்தி கூறியிருக்கிறார்.
கிறிஸ்துவின் அன்புவழியை டால்ஸ்டாய் முன்னெடுக்கிறார் என்றே காந்தி கருதினார். உண்மையில் தனது கடைசி வருஷங்களில் டால்ஸ்டாய் அப்படியான ஒரு நிலைப்பாட்டினை தான் முன்னெடுத்து வந்தார். தனது சொத்துகளைக் குடியானவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அவரைத் திருச்சபை மதவிலக்கம் செய்திருந்த போதும் பைபிளுக்குப் புதிய விளக்கம் தருபவராக இருந்தார் டால்ஸ்டாய்
கிறிஸ்துவச் சமயத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ள டால்ஸ்டாய் உதவியதாகவே காந்தி குறிப்பிடுகிறார். மனிதனுக்கு ஆறடி நிலம் மட்டுமே இறுதியில் தேவை என்ற டால்ஸ்டாயின் கதையைப் பற்றிக் குறிப்பிடும் காந்தி இந்தியராக இருந்திருந்தால் உடலை எரித்துவிடுவார்கள். ஆகவே இந்த ஆறடி கூடத் தேவைப்படாது என்று கூறியிருக்கிறார்.
டால்ஸ்டாயின் அன்னாகரீனினா, புத்துயிர்ப்பு, போரும் அமைதியும் போன்ற நாவல்கள் காந்தியைக் கவரவில்லை. ஒரு வேளை அவர் வாசித்திருந்தாலும் அது நிச்சயம் அவருக்குப் பிடித்தமானதாகியிருக்காது. புத்துயிர்ப்பில் வரும் மனசாட்சியின் குரல் வேண்டுமானால் அவருக்குப் பிடித்திருக்கக் கூடும். தனிநபர் விருப்பங்கள் அதிலும் உடல்சார்ந்த வேட்கை பற்றிய எழுத்துகள் ஒரு போதும் காந்தியைக் கவரவில்லை. உடல் அவர் சோதனைக் கூடமாகக் கருதினார். குறிப்பாகக் காமத்தை வெல்வதே அவரது குறிக்கோள். ஆகவே அன்னாகரீனினாவை வாசித்திருந்தால் அவளது தடுமாற்றமும் உணர்ச்சி கொந்தளிப்புகளும் அவருக்குப் பிடித்திருக்காது.
டால்ஸ்டாய் இந்தியாவைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை. ஆனால் காலனிய நாடுகளில் வரலாற்றை அவர் அறிந்திருந்தார். கூடவே இந்தியாவின் பண்பாடு குறித்தும் இலக்கியங்கள் குறித்தும் குறைவாக அறிந்து வைத்திருந்தார். காந்தியைப் போலப் பலரும் இந்தியா பற்றி அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விருப்பமான புத்தகங்களை அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அப்படிக் கிடைத்த புத்தகங்கள் வழியாகவே அவர் இந்தியாவின் காலனிய ஆட்சியைப் பற்றி அறிந்திருந்தார். பௌத்தம் மற்றும் பல்வேறு சமயக் கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகள் குறித்தும் தத்துவங்கள் பற்றியும் அறிந்து கொண்டிருந்தார். அந்தப் புரிதலிலிருந்தே அவர் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கிறார்.
காந்திக்குப் பதில் எழுதும் போது தன்னை ஒரு சகோதரனாகவே டால்ஸ்டாய் குறிப்பிடுகிறார். அதைக் கிறிஸ்துவ மரபு என்று எடுத்துக் கொண்டாலும் கூட முகம் அறியாத ஒரு மனிதனுடன் ஏற்பட்ட நட்பின் அடையாளமாகவும் சொல்லமுடியும்.
காந்தியை இந்தியாவின் பிரதிநிதியாக டால்ஸ்டாய் உணர்ந்திருக்கவில்லை. மாறாகத் தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகப் போராடும் ஒரு வழக்கறிஞராகவே அவரை அறிந்திருந்தார்.
ரஷ்யாவிலிருந்து டுகோபார் இன மக்கள் வெளியேற்றப்பட்ட போது அவர்களுக்காகக் கனடாவில் புகலிடம் பெற்று தந்து அவர்களைக் கப்பலில் அனுப்பி வைத்தவர் டால்ஸ்டாய் என்பதால் உலகெங்குமிருந்து அவருக்கு இனவாதம் மற்றும் அதிகார ஒடுக்குமுறை பற்றிய தகவல்கள், உதவி கேட்ட கடிதங்கள் வந்து கொண்டிருந்தன.
டால்ஸ்டாய் சுட்டிக்காட்டும் முன்பாகவே காந்தி சத்தியாகிரகம் என்ற அறப்போரைத் துவங்கியிருந்தார். அவரது செயல்பாட்டிற்கான அங்கீகாரம் போலவே டால்ஸ்டாயின் A Letter to a Hindu இருந்தது.
தனது இரண்டாவது கடிதத்துடன் தன் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி Rev. J.J. Doke எழுதிய M. K. Gandhi: An Indian Patriot in South Africa நூலை டால்ஸ்டாயிற்கு அனுப்பி வைத்திருந்தார் காந்தி. இப்படித் தன் சுயசரிதையை வாசிக்கும்படி வேறு யாருக்கும் காந்தி எழுதியதில்லை. காரணம் தன்னை அவர் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்புக் காந்தியிடமிருந்து.
தனது பீனிக்ஸ் பண்ணையினை உருவாக்கும் போது அதன் அடிப்படை பணிகளில் ஒன்றாக To follow and promote the ideals set forth by Tolstoy and Ruskin in their lives and works’ என்றே காந்தி குறிப்பிட்டிருந்தார். டால்ஸ்டாய் நூற்றாண்டு 1928 செப்டம்பர் 9 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், காந்தி ஒரு மறக்கமுடியாத உரை நிகழ்த்தியிருக்கிறார்.
1931 இல் காந்தி லண்டனிலிருந்து இந்தியா திரும்பியபோது, டால்ஸ்டாயின் மூத்தமகளும் ஓவியருமான சுகோடினா டால்ஸ்டாயாவை லண்டனில் சந்தித்து உரையாடியிருக்கிறார். இதற்கு ஏற்பாடு செய்தவர் எழுத்தாளர் ரோமன் ரோலந்து.
இந்திய ஞானிகளில் ஒருவராகவே டால்ஸ்டாயை காந்தி கருதினார். வணங்கி வழிபட்டார். எழுத்தாளரான டால்ஸ்டாயை விடவும் அன்பை வலியுறுத்தும் ஞானி டால்ஸ்டாயே காந்திக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார்.
இந்திய அரசியல் தலைவர்களில் சர்வதேச எழுத்தாளர்களுடன் நேரடி உறவில் இருந்தவராகக் காந்தியைத் தான் குறிப்பிட வேண்டும். அந்த வழியை நேரு பின்தொடர்ந்தார். ஆனால் அதன்பின்பு அந்தப் பண்பாடு தொடரவில்லை என்பது வருத்தமான விஷயமே.
நன்றி :
திரு எஸ்ரா
மற்றும்
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக