எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து
ஐம்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
இந்த ஆண்டு நோபல் பரிசு பரிந்துரைப் பட்டியலிலிருந்த எழுத்தாளர்களில் எவரது புத்தகமாவது தமிழில் வந்திருக்கிறதா எனப் பார்த்தேன். ஒன்று கூட வெளியாகவில்லை. கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் பேசப்பட்ட கவிதை, நாவல். சிறுகதை கட்டுரை தொகுப்புகள் ஏதாவது தமிழில் வந்திருக்கிறதா என்று யோசித்தாலும் ஒன்றும் வெளியாகவில்லை.
உரிமை பெற்றுத் தமிழில் வெளியிடுவது என்பது பெரிய முயற்சி. நிறையப் பொருட்செலவு கொண்டது என்கிறார்கள். அது உண்மையே.
மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிடும் பதிப்பகங்களே கூட நோபல் பரிசு பெற்றுள்ள ஒன்றிரண்டு புத்தகங்களின் உரிமையைத் தான் பெற முடிந்திருக்கிறது.
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் தமிழ் உரிமையை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி வெளியிட முடியாது என்பதே நிஜம்.
இதனால் தமிழில் மட்டுமே வாசிக்க முடிந்த ஒருவர் இன்று நோபல் பரிசு பெற்ற புத்தகத்தை வாசிக்க இன்னும் ஐம்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
இப்போது தமிழில் வெளியாகிக் கொண்டிருக்கும் பெரும்பான்மை மொழிபெயர்ப்பு நூல்கள் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டவை. பெரும்பாலும் காப்புரிமை இல்லாத நூல்களே தமிழில் வெளியாகின்றன. அல்லது காப்புரிமையைப் பெறாமல் வெளியிடப்படுகின்றன.
அறுபது ஆண்டுகளைக் கடந்த நூலாக இருந்தால் காப்புரிமை பெறவேண்டியதில்லை என்று பதிப்புரிமை சட்டம் சொல்கிறது. ஆனால் அந்தப் படைப்பாளி தனது நூலை சட்டரீதியாகப் பதிவு உயிலில் எழுதியிருந்தால் காப்புரிமை தொடரப்படவே செய்யும்.
சோவியத் அரசு தனது ராதுகா மற்றும் முன்னேற்றப் பதிப்பகம் மூலம் முக்கிய நூல்கள் அனைத்தையும் இலவசமாக அச்சிட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. அந்த நூலிற்கான விலையை அந்தந்த மொழி விநியோகிஸ்தர்களே முடிவு செய்து கொண்டார்கள். மொழி பெயர்ப்பாளர்களையும் ரஷ்யாவிற்கே வரவழைத்து மாதசம்பளம் கொடுத்து பணியாற்ற வைத்தார்கள். அதனால் தான் டால்ஸ்டாயும் செகாவும் தஸ்தாயெவ்ஸ்கியும் துர்கனேவும் நேரடியாக ரஷ்ய மொழியில் இருந்து தமிழுக்கு வந்தார்கள்.
அயல்மொழி நூலின் உரிமையைப் பெற்று வெளியிடுவது எனப் பதிப்பாளர் முன்வந்தாலும் அதைப் பெறுவது எளிதாகயில்லை . காரணம் சர்வதேச பதிப்பகங்களுடன் நேரடியான தொடர்பில்லை. மேலும் பிராங்பெர்ட் புத்தகக் கண்காட்சி போன்றவற்றில் கலந்து கொண்டு மொழிபெயர்ப்பு உரிமையைப் பெறுவது சிறிய பதிப்பகங்களால் இயலாதது.
மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி உரையாடல் வழியே சரளமாகப் பேசி மொழிபெயர்ப்பு உரிமையைப் பெறுவதற்கான ஆட்கள் சிறிய பதிப்பகங்களில் இல்லை. முன்பணம் கொடுத்து நூலை வெளியிடும் பொருளாதார வசதியும் கிடையாது. ஆகவே நிறையப் பதிப்பகங்கள் உரிமையில்லாத மொழியாக்க நூல்களை வெளியிடுகின்றன.
நிறைய நாடுகள் தங்கள் நாட்டின் முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளுக்கான உரிமையைத் தாங்களே வாங்கிக் கொண்டு அதை வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்வதற்கு நிதி உதவி அளிக்கிறார்கள். அத்துடன் கதை நிகழும் இடத்திற்குப் பயணித்துப் புரிந்து கொள்ள மொழிபெயர்ப்பாளருக்கு தனியே நிதி நல்கை வழங்குகிறார்கள்.
இந்தியாவிலுள்ள அந்த நாட்டின் தூதரகமே கூடச் சில நேரங்களில் சிறப்பு உதவித்தொகையை வழங்குவதும் உண்டு.
இப்படியான TRANSLATION GRANTS ஒரு நூலிற்கு ஐம்பதாயிரம் துவங்கி நான்கு லட்சம் வரை தரப்படுகிறது.
இந்த மானியம் மொழிபெயர்ப்புச் செலவுகளில் அதிகபட்சம் 60% அல்லது 70% உள்ளடக்கியது, ஆனால் செவ்வியல் இலக்கியமாக இருந்தால் 100% வரை மானியம் தருகிறார்கள்.
சர்வதேச அளவில் பதிப்பகங்களைத் தொடர்பு கொண்டு நூலின் உரிமையைப் பெற்றபிறகே இதற்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் இந்த உதவித் தொகை கிடைத்துவிட்டால் தமிழ் மொழியாக்கத்திற்கான மொத்த தொகை போல இரண்டு மடங்கு இருக்கும் என்பதோடு தமிழில் வெளியாகும் நூலின் விற்பனைத் தொகை கூடுதல் வருமானமாகவும் அமையும் என்பதே நிஜம்.
மானியம் பெறும் மொழிபெயர்ப்பு சிறந்த தரத்தில் இருக்க வேண்டும். நூலின் ஒரு சில அத்தியாயங்கள் மூலத்தோடு ஒப்பு நோக்கப்பட்டு அதன் பிறகே நிதி அளிக்கப்படுகிறது. நேரடியாக மூலமொழியிலிருந்து தமிழுக்கு வருவதற்கே அதிக முன்னுரிமை தரப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், நூற்றுக்கணக்கான டச்சுப் புத்தகங்கள் உலகம் முழுவதும் மொழிபெயர்ப்பில் வெளியிடப்படுகின்றன. அதற்குக் காரணம் அவர்கள் அளிக்கும் பெருமளவு நிதியே. டச்சு மொழிபெயர்ப்பாளர்களே பெரும்பாலும் விற்பனை பிரதிநிதிகளாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் டச்சு மொழியின் சிறந்த இலக்கியங்களை அறிந்திருக்கிறார்கள், சர்வதேச அளவில் தங்கள் இலக்கியத்தைக் கொண்டு செல்ல முனைகிறார்கள்..
பதிப்பாளர்கள் சர்வதேச அளவில் பதிப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும் நூலின் உரிமைகளைப் பெறவும் இரண்டு நிதிநல்கைகள் வழங்கப்படுகின்றன. அதில் தேர்வு செய்யப்படும் பதிப்பாளர். பிப்ரவரி மாதம் கெய்ரோ அழைக்கப்படுவார். அங்கே கண்காட்சியைப் பார்வையிடுவதுடன் உள்ளூர் வெளியீட்டாளர்களைத் தெரிந்துகொள்வதும் புதிய நூலின் உரிமையைப் பெறுவதும் வழக்கம்.
ரஷ்ய அரசாங்கம் இது போல மானியமோ அல்லது நிதி நல்கையோ அளிப்பதில்லை. ஆனால் அங்கும் மிகப்பெரிய நிறுவனங்கள். அமைப்புகள் ரஷ்ய நூல்களை வேறு மொழிகளில் வெளியிடுவதற்கு நிதி உதவி செய்கின்றன. Mikhail Prokhorov Foundation போன்ற நிறுவனம் ஒரு உதாரணம்
அயர்லாந்தின் மொழிபெயர்ப்பு மானியத் திட்டம் ஐரிஷ் இலக்கியத்தின் முக்கியப் படைப்புகள் உலகெங்கும் கொண்டு செல்ல உதவி செய்கிறது. இவர்கள் எழுத்தாளர்களிடம் முன்னதாக உரிமையைப் பெற்று ஒரு பட்டியலை உருவாக்கிக் கொள்கிறார்கள். சர்வதேச வெளியீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்து உரிமை பெறுகிறார்கள். ஆங்கிலம் அல்லது ஐரிஷிலிருந்து வேறு மொழிக்குப் புத்தகம் வெளியாக மானியம் அளிக்கப்படுகிறது.
Translation and Publication Grant Programme of Turkey திட்டத்தில் துருக்கியின் இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்ப்புச் செய்ய நிதி அளிக்கப்படுகிறது. அத்தோடு மொழிபெயர்ப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் பங்குபெறவும் நிதி நல்கை வழங்கப்படுகிறது
இந்தியாவிலும் சிறந்த நூல்களின் உரிமைகளைப் பெற்று நேஷனல் புக் டிரஸ்ட் சர்வதேச அரங்கில் அதன் உரிமையை விற்பனை செய்ய முயன்றது. நூலைப் பதிப்பிக்க நிதி உதவி செய்யவும் முன்வந்தது.
ஆனால் பிற நாடுகளைப் போல எழுத்தாளர்களுக்கான பணம் கொடுத்து உரிமையைப் பெறவில்லை. மாறாக எழுத்தாளரின் அனுமதியை மட்டும் பெற்றுக் கொண்டு பட்டியலை உருவாக்கி சர்வதேச கண்காட்சிக்குக் கொண்டு சென்றார்கள். எனது நூல் கூட இந்தப் பட்டியலிலிருந்தது. ஆனால் அவர்களால் வெற்றிகரமான இதைச் செயல்படுத்த முடியவில்லை.
அடுத்த ஆண்டிலே குப்பையான புத்தகங்களை அந்தப் பட்டியலில் சேர்த்தார்கள். பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே திட்டத்தையே அப்படியே கைவிட்டுவிட்டார்கள். இப்போதும் அத்திட்டம் தொடர்கிறதா எனத் தெரியவில்லை
Austrian Federal Chancellery, Department for Culture and the Arts Regina Schweighofer | regina.schweighofer@bka.gv.at |+43 1 53115206853
Federation Wallonia-Brussels. Silvie Philippart de Foy | silvie.philippart@cfwb.be
Ministry of Culture of the Czech Republic https://www.mkcr.cz/literature-and-libraries-1123.html?lang=en
Danish Arts Foundation https://www.kunst.dk/english/funding/subsidies/tilskud/danish-andforeign-literature-for-children-and-young-adults/
Canada Council for the Arts
France Centre national du livre http://www.institut-francais.org.uk/subsidies-for-translation-and-residenciesin-france/
Traducta is a major literary translation and publication grant https://www.kulka.ee/programmes/traducta
FILI – Finnish Literature Exchange ,Traducta is a major literary translation and publication grant, http://www.finlit.fi/fili/en/grants/
“Support for Foreign Publishers Publishing Latvian Literature” http://www.latvianliterature.lv/en/grants | info@latvianliterature.lv
10. PIM – Hungarian Books & Translations Office http://booksandtranslations.hu
11. Dutch Foundation for Literature (DFL) DGLAB (Direção-Geral do Livro, dos Arquivos e das Bibliotecas) promotes Portuguese literary works http://www.letterenfonds.nl/en/translation-subsidy
Jane Dinmohamed | j.dinmohamed@letterenfonds.nl
போன்றவை மொழிபெயர்ப்பிற்கான மானியம் தருகின்றன.
இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட அரசு சார்புடைய அல்லது தனியார் அமைப்புகள் மொழிபெயர்ப்பிற்கான நிதியுதவி அல்லது மானியம் அளிக்கின்றன. இவற்றைப் பெறுவது எளிதானதில்லை. முறையான கடித தொடர்பு மற்றும் நேரடியான அணுகுமுறை. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் புத்தகம் கொண்டுவருவது. தரமாகப் பதிப்புச் செய்வது. மொழிபெயர்ப்பாளருக்கு உரியத் தொகை வழங்குவது இவை எல்லாமும் சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டால் தான் இந்த மானியம் பெற முடியும்.
சில நேரம் வெளிநாட்டுப் பதிப்பகங்கள் ஒரே எழுத்தாளரின் மூன்று நான்கு நூல்களுக்குச் சேர்ந்து ஒரே தொகையைக் கேட்பதும் உண்டு. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அந்தப் புத்தகங்களைத் தமிழில் கொண்டுவர வேண்டும்.
உலக அளவில் ஒரு நூல் பிறமொழிகளுக்குச் செல்வதற்கு எழுத்தாளர் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. அது பதிப்பகத்தின் வேலை. இலக்கிய முகவரின் வேலை. வேற்றுமொழிகளில் நூல் வெளியானதும் அதற்கான தொகை எழுத்தாளர் வங்கிக் கணக்கில் சேர்க்கபடும். அத்தோடு நூலின் ஐந்து பிரதிகளும் அனுப்பித் தரப்படும்.
தமிழில் பெரும்பான்மை பதிப்பகங்கள் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பணம் தருவதேயில்லை. முறையாகப் பணம் கொடுத்து மொழிபெயர்க்கச் சொல்பவர்கள் ஒரு சிலரே. அதுவும் One time settlement தான்.
சில வேளை ஐந்தாயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் வரை ஒரு நாவலுக்குத் தருகிறார்கள். ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை மொழிபெயர்ப்புச் செய்யக் கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்கு இந்தத் தொகை மிகக் குறைவானதே.
சாகித்திய அகாதமி போன்ற நிறுவனங்களே குறைவான தொகையைத் தான் மொழிபெயர்ப்பாளருக்குத் தருகின்றன. மொழிபெயர்த்துக் கொடுத்துவிட்டு அந்த நூல் அச்சில் வெளியாக ஒன்றிரண்டு ஆண்டுகள் காத்துகிடக்க வேண்டியதும் வரும்.
மொழிபெயர்ப்பினை மேம்படுத்தச் சிறிய தொகை அயல்நாட்டுத் தூதரகம் மூலம் உதவியாக அளிக்கப்படுகிறது. அதை ஒரு சில பதிப்பகங்களே பெற்றுள்ளன.
சாகித்ய அகாதமி ஆண்டு தோறும் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கு விருது அளித்து கௌரவிக்கிறது. இது போலவே
மொழிபெயர்ப்புகளுக்காகவே குறிஞ்சி வேலன் திசை எட்டும் என்ற பெயரில் தனி இதழ் ஒன்றை நடத்தி வருகிறார். அத்தோடு நல்லி குப்புசாமி செட்டியாரின் உதவியோடு ஆண்டு தோறும் விருதுகள் அளித்துக் கௌரவித்து வருகிறார். இது பாராட்டிற்குரிய விஷயம்.
கடந்த சில வருஷங்களாகத் தமிழக அரசும் மொழிபெயர்ப்பாளர்களுக்கென ஒரு லட்ச ரூபாய் விருது அளித்து வருவது மகிழ்ச்சியானதே..
ஆனாலும் இலக்கிய மொழிபெயர்ப்பினை ஒரு வேலையாக எடுத்துக் கொண்டு அதை நம்பி ஒருவராலும் வாழ முடியாது என்பதே நிஜம்.
சிறுபத்திரிக்கைகள் மூலமே தமிழில் முக்கியமான மொழியாக்கங்கள் வெளியாகியுள்ளன. பெரிய பத்திரிக்கைகளால் உரிமை பெற்று நல்ல கதைகள். கட்டுரைகளை வெளியிட முடியும். ஆனால் அதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதேயில்லை.
தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் அதிகம் விற்பனையாவது போல ஒரு தோற்றம் இருக்கிறது. உண்மையில் முந்நூறு பிரதிகள் விற்பனையானாலே பெரிய வெற்றி என்று அர்த்தம். அரிதாக ஒன்றிரண்டு நூல்கள் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பிரதிகள் வரை விற்றிருக்கக் கூடும். மொழியாக்கக் கவிதைகள் நூறு பிரதிகள் தான் விற்பனையாகின்றன. சுயமுன்னேற்ற நூல்கள் தான் மொழிபெயர்ப்பில் நிறைய விற்பனையாகின்றன
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அவை புகழ்பெற்ற இலக்கியப் படைப்புகள். ஆனாலும் சர்வதேச அளவில் உரிய கவனம் பெறவேயில்லை. முக்கியமான ஆங்கில இலக்கிய இதழ்களில் எந்த விமர்சனமும் வரவில்லை. பெரிய இலக்கிய விருதுகள் எதையும் பெறவில்லை.
சாகித்திய அகாதமி மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட் மிகச்சிறந்த இந்திய நாவல்களை மொழியாக்கம் செய்து வெளியிட்டு வருகின்றன .அவை விலை மலிவான புத்தகங்கள். ஆனால் அது போன்ற நாவல்களுக்குக் கூட ஒன்றிரண்டு விமர்சனங்கள் வருவதில்லை என்பது வருத்தமான விஷயமே.
**
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக