பாவேந்தர் பாரதிதாசனை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட பட்டுக்கோட்டையார் பாண்டிச் சேரிக்கு வந்து பாரதிதாசனைச் சந்தித்து அவரிடம் மாணவராகச் சேர்ந்து அவர் நடத்திவந்த ‘குயில்’ இதழை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டார்.
பட்டுக்கோட்டையாரின் திருமணம்கூட பாரதிதாசனின் தலைமையில்தான் நடைபெற்றது. அதன் பின்னர் அவரை அழைத்துவந்து மார்டன் தியேட்டர்ஸில் பாட்டெழுத சேர்த்துவிட்டார் பாரதி தாசன். பட்டுக்கோட்டையாரின் சினிமாப்பிரவேசத்திற்கு பிள்ளையார்சுழி போடப்பட்ட்து இங்கே தான். இவர் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில்தான் புராணப்படங்களின் ஆதிக்கம் குறைந்து சமூகப்படங்களின் வரவு தலைதூக்கவும், பாடல்களில், வசனங்களில், நடிப்பில் மாற்றங்கள் உருவாகவும் ஆரம்பித்திருந்தன.
இவர் முதன்முதலில் பாடல் எழுதிய படம் படித்த பெண். ஆனாலும் இரண்டாவது படமான மகேஸ்வரி முந்திக்கொண்டு 1955ல் ரிலீஸானது. இவர் பாடல் எழுத ஆரம்பித்த நேரத்தில் உடுமலை நாராயணகவி, கண்ணதாசன், மருதகாசி போன்றவர்கள் வலுவான இடத்தில் இருந்தனர்.
ஆனாலும் பட்டுக்கோட்டையாரின் பாடல்வரிகள் இவர்கள் யாருக்கும் போட்டியாக இல்லாமல் நாடோடி மரபோடும் முற்போக்கு கருத்தோடும் தனிப்பாதையில் நடைபோட ஆரம்பித்தன. திரையுலகம் அவரைத் தன் தோள்களில் பெருமையுடன் தூக்கிவைத்துக்கொண்டது. பட்டுக் கோட்டை பாட்டுக்கோட்டை ஆனார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த படங்களில் இவர் பாடல் எழுத ஆரம்பித்தபின் அவருக்கு வெற்றிமேல் வெற்றி குவிய ஆரம்பித்தது. ‘சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா’., ‘ தூங்காதே தம்பி தூங்காதே’, ‘திருடாதே பாப்பா திருடாதே ’, குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்’என எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய பாடல்கள் அரசியல் அரங்கில் எம்.ஜி.ஆர் வெற்றிநடை போட ரத்தினக்கம்பளம் விரித்தன.
தூங்காதே தம்பி தூங்காதே பாட்டைக் கேட்டு பல தமிழர்கள் தங்களது நீண்டநாள் அறியாமை உறக்கம் கலைந்து கண்விழிக்க ஆரம்பித்தார்கள். இன்னும் சொல்லப்போனால் பட்டுக்கோட்டை யாரின் பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு சினிமாவிலும் அரசியலிலும் ஒரு புதிய தோற்றத்தை வடிவமைத்துக் கொடுத்தன என்றுகூட சொல்லலாம்
இணையத்தில் இருந்து எடுத்தது
Kandasamy R அவர்களின் பதிவு மகிழ்ச்சியுடன் பகிரப்பெறுகிறது
நன்றி :
திரு ஆர் கந்தசாமி
மற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக