17 பிப்., 2021

ஆன்மீகம் : நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா?

நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா? உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா? என மக்கள் சில நேரங்களில் கேட்பதுண்டு. அதற்கான பதில், ஆம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன் என்பதே. நான் மட்டுமல்ல நீங்களும் கடவுளைக் காணலாம், அனைவரும் கடவுளைக் காணலாம். ஆனால் அதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு காரில் பழுது ஏற்பட்டு கார் ஓடாமல் நிற்பதை அனைவருமே காண்கின்றனர். கார் மெக்கானிக்கும் காண்கின்றார். ஆனால் மெக்கானிக்கின் பார்வை மற்றவர்களின் பார்வையிலிருந்து வேறுபட்டுள்ளது. காரில் ஏற்பட்டுள்ள பழுதைக் காணும் தகுதியை அவர் பெற்றுள்ளார். அதனால், அவர் பழுதைச் சரி செய்ததும் கார் இயங்குகின்றது. ஒரு காரைக் காண்பதற்கே தகுதி தேவைப்படும்பொழுது, கடவுளைக் காண்பதற்குத் தகுதி ஏதும் தேவையில்லை என்று நாம் நினைக்கின்றோம்! என்னே மூடத்தனம்! மக்கள் எந்த அளவிற்கு முட்டாள்களாக அயோக்கியர்களாக இருக்கின்றனர் என்றால் தங்களது கற்பனையான தகுதிகளைக் கொண்டு கடவுளைக் காண அவர்கள் முயல்கின்றனர்.

கீதையில் கிருஷ்ணர், நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோகமாயா ஸமாவ்ருதா:, நான் அனைவருக்கும் என்னை வெளிப்படுத்துவதில்லை, யோக மாயையின் மூலமாக என்னை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்கிறேன்,” என்று கூறுகிறார். ஆகவே, கடவுளை உங்களால் எவ்வாறு காண இயலும்? நிலைமை இவ்வாறு இருக்கையில், நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா? உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா? என்பன போன்ற மடத்தனமான கேள்விகள் அவ்வப்போது கேட்கப்படுகின்றன. கடவுள் அவர்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருளாகிவிட்டார்; ஆகவே, இந்த ஏமாற்று பேர்வழிகள் யாரோ ஒரு சாதாரண மனிதனைக் காண்பித்து, கடவுள் இங்கு இருக்கிறார், இவரே கடவுளின் அவதாரம் என்று பிரகடனப்படுத்துகின்றனர்.

ந மாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா:, கடவுளைக் காண்பிக்க முடியுமா என்னும் கேள்வியை கீழ்நிலையோர், முட்டாள், அயோக்கியன் முதலியவர்களே கேட்பர். கடவுளைக் காண்பதற்கு முதலில் உங்களிடம் என்ன தகுதி இருக்கின்றது? அவரைக் காண்பதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றுள்ளீர்களா? அந்த தகுதியானது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தச் ச்ரத்ததானா முனய:, ஒருவன் முதலில் நம்பிக்கை உடையவனாக இருக்க வேண்டும், அதுவே கடவுளைக் காண்பதற்கான முதல் தகுதி. அதை விடுத்து, கடவுளை எனக்குக் காட்ட முடியுமா?” என்று வீம்புக்கு சவால் விடுத்தல் நல்லதன்று. கடவுளைக் காண்பது என்பதை அவர்கள் ஏதோ ஒரு மேஜிக் மாதிரி நினைக்கின்றனர். இல்லை. கடவுளைப் பற்றி தொடர்ந்து செவியுற்று, அவரைக் காண வேண்டும் என்பதைப் பற்றி ஒருவன் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: