14 பிப்., 2021

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1036: நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

சேர்ந்த கலையஞ்சுஞ் சேருமின் குண்டமும்
ஆர்ந்த திசைகளு மங்கே யமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவ ரென்றுங் கலந்தவர் தாமே.

விளக்கம்:

பாடல் #1035 இல் உள்ளபடி இறைவனோடு சேர்ந்து இருக்கும் சாதகர் இறைவனுடைய ஐந்துவித தொழில்களையும் நவகுண்டமாகிய இந்த உடலுக்குள்ளிருந்து இயக்கலாம். அதன் பிறகு அனைத்து திசைகளையும் முழுமையாக சாதகர் அறிந்து கொள்வார். ஐம்பூதங்களும் தங்களின் உச்சத் தன்மையில் சாதகரின் உடலுக்குள் இருந்து தாமாகவே மூலாக்கினியை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன. இந்த நிலையை அடைந்த சாதகர் இறைவனோடு என்றும் கலந்து இருப்பார்.

குறிப்பு: நவகுண்ட யாகம் செய்யும் சாதகர் அனைத்து திசைகளிலுள்ள எங்கும் செல்லும் தன்மையைப் பெறுவார். இதுவரை சாதகர் தனது சாதகத்தின் மூலம் எழுப்பிய மூலாக்னியை இனி அவரது உடலுக்குள்ளிருக்கும் ஐந்து பஞ்ச பூதங்களும் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) மூலாக்கினியை தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருக்கும்.

மனமார்ந்த நன்றிகள் :

கருத்துகள் இல்லை: