1 நவ., 2021

நூல் நயம் : நம் வீடு பற்றி எரிகிறது : கிரெட்டா துன்பர்க் (தமிழில் : சு.அருண் பிரசாத்)


#வாசிப்பு_மராத்தான்_2021

#நான்காம்_ஆண்டு_விழா_வாசிப்பு_போட்டி 

#மொழிபெயர்ப்பு 

புத்தகம் பெயர் : நம் வீடு பற்றி எரிகிறது.
ஆசிரியர் : கிரெட்டா துன்பர்க்
தமிழில் : சு.அருண் பிரசாத் 

வெளியீட்டாளர் : அழிசி பதிப்பகம் 

விலை : ரூ. 49

வகை : மொழிபெயர்ப்பு   

பக்கங்கள் : 38

காலநிலை மாற்றம் குறித்து பள்ளிச் சிறுமியின் கவலைகளும் அவள் ஆற்றிய உரைகளும் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.  பதினைந்து வயதே ஆன கிரெட்டா துன்பர்க் என்ற அந்தச் சிறுமி, மனிதர்களுடைய வாழ்க்கை முறையால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு தனியாளாகப் பள்ளி வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு போராடத் தொடங்கியவர். 

ஆட்டிசத்தின் ஒரு வகையான ‘அஸ்பெர்கர் குறைபாட்டால்’ பாதிக்கப்பட்டிருந்த கிரெட்டா, நினைத்தவற்றை சரியாக பேசமுடியாமலும் சமூகவயப்படாமல் ஒதுங்கியும் இருந்தார். தன்னோட சின்ன வயசுல ஞெகிழியால் கடல் மாசுபடும் படங்கள், பனிக் கரடிகள் உணவில்லாமல் பசியால் வாடுவது போன்ற படங்களை பார்த்துவிட்டு அதுக்கு அப்புறம் காலநிலை மாற்றங்களை பற்றிய சிந்தனையில் பள்ளிக்குச் செல்வதையும் சாப்பிடுவதையும்கூட நிறுத்தினார்.  

காலநிலை மாற்றத்துக்கு முதன்மைக் காரணமாக உள்ள கரியமில வாயு வெளியேற்றத்தில் விமானப் போக்குவரத்து 2 சதவீதம்வரை பங்களிக்கிறது என்பதால் விமானம் அவமானம் என நினைத்து விமான பயணங்களை தவிர்த்தார். 

காலநிலை மாற்றத்தால் வரும் பாதிப்பை நெருக்கடியாக கருதி நம் அன்றாட செயல்களில் மாற்றம் வேண்டும் என்கிறார். ஆனால் இதன் உண்மையை பற்றி தரவுகளை பற்றி பேச வேண்டிய இடங்களில் பேசாமல் இருக்கும் தலைமைகளையும் பத்திரிகைகளையும் மக்களையும் பதற்றம் கொள்ள சொல்கிறார் கிரேட்டா .

"நாம் இப்போது செயலாற்றுவதும் செயலாற்றாமல் இருப்பதும் என்னுடைய மொத்த வாழ்க்கை, என் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் வாழ்க்கையையும் பாதிக்கும். எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாமல் போகும்போது நான் எதற்காகப் படிக்க வேண்டும்? எதிர்காலத்தைக் காப்பதற்காக எவருமே எதுவுமே செய்யாதபோது? தலைசிறந்த அறிவியல் தரவுகள் நம்முடைய அரசியல்வாதிகளையும் சமூகத்தையும் உலுக்காதபோது, பள்ளிக்குச் சென்று அதே தரவுகளை மீண்டும் படிப்பதில் என்ன பயன்?" என்று ஸ்வீடன் கிரெட்டா கேக்கும் கேள்விகள் உலகின் எல்லா பகுதி மக்களையும் சென்று சேர வேண்டுமல்லவா? 

தனது கனவாக கிரெட்டா சொல்வது,"இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் மாண்புமிக்க வாழ்க்கை வாழ்வதற்காக, அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள், பெருநிறுவனங்கள் வேறுபாடுகளை விடுத்து, நாம் ஒரு இக்கட்டான நெருக்கடியில் இருப்பதை உணர்ந்து காலநிலை, சூழலியல் நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்து அதிலிருந்து மீள்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." எனவும் 

"பொருள் பணக்கார நாடுகள், கரியமில வாயு வெளியேற்றத்தில் தங்களுடைய பங்கினை வேகமாகக் குறைத்தால், அவை ஏற்கெனவே உருவாக்கிக் கொண்டுள்ள சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், தூய குடிநீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏழை நாடுகளும் உருவாக்கி தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்." என்பதும் இவர் வயதில் மட்டுமே சிறியவர். கொள்கையில் மிக பெரியவர். 

சில கேள்விகள் ஆழமாக அழுத்தமாக தருகிறார் "நாம் பெரும் பேரழிவின் தொடக்கத்தில் இப்போது இருக்கிறோம். இந்த நிலையில்தான் நீங்கள் எல்லோரும் பணத்தைப் பற்றியும் நீடித்த பொருளாதார வளர்ச்சி பற்றிய கற்பனைக் கதைகளையும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு தைரியம் உங்களுக்கு!"

தனது உடல் குறையையை நிறையாக மாற்றி மாற்றங்களுக்கு வழியாக இவரே இருப்பது அருமை.  "ஆஸ்பெர்கர் ஒரு நோய் அல்ல; அது ஒரு கொடை. எனக்கு ஆஸ்பெர்கர் குறைபாடு இருப்பதால் இந்த இடத்தில் சரியாக என்னைப் பொருத்திக் கொள்ள முடியாது என்று சிலர் கூறுகின்றனர். ஏனென்றால், நான் “இயல்பான” ஒருவராக சமூகவயப்பட்டிருந்தால், ஒரு நிறுவனத்தில் என்னை இணைத்துக் கொண்டோ அல்லது நானே ஒரு நிறுவனத்தைத் தொடங்கியோ இருக்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். முழுமையாகச் சமூகவயப்படாமல் இருந்ததால் தான் இதை நான் செயல்படுத்தினேன். காலநிலை நெருக்கடிக்கு எதிராக எதுவுமே மேற்கொள்ளப்பட்டிருக்காதது என்னைக் கடுமையான விரக்தியில் ஆழ்த்தியது. எனவே, அதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்; சில விஷயங்களைச் செய்யாமலும்: நாடாளுமன்றத்துக்கு வெளியே வெறுமனே உட்கார்ந்திருத்தல், செயலைவிட சொல் அதிகமாக இருத்தல். **சமயங்களில் மெதுவாகப் பேசுதல் என்பது ஓங்கிக் கத்துதலைவிட சத்தமாக இருக்கும்.**" இதுதான் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. 

உலகம் பிழைத்திருக்க வேண்டுமானால், மாறியாக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வயது ஒரு தடையல்ல என்பதை தன் செயல்பாடுகளாலும் தொலைநோக்காலும் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார் கிரெட்டா.  

-- ராஜலெட்சுமி ஆறுமுகம். 
#புத்தகம்_பேசுகிறது

நன்றி :

Ms ராஜலெட்சுமி ஆறுமுகம்
வாசிப்பை நேசிப்போம் 
முகநூல்

கருத்துகள் இல்லை: