From s.raa's website
குறுங்கதை 36
கூந்தலில் வழியும் அருவி.
மலையுச்சியிலிருந்து பூமியை நோக்கி அருவி கொட்டுவதைப் போலத் தனது கூந்தலிலிருந்து பாதம் நோக்கி நீரைப் பொழிந்து கொண்டிருக்கும் ஒரு பெண் இருந்தாள். ஆம். கூந்தலில் அருவியைச் சூடியவள் என அழைக்கப்பட்ட அப்பெண்ணின் தலையிருந்து அருவி போலத் தண்ணீர் பகலிரவாக வழிந்தோடிக் கொண்டேயிருந்தது.
அடர்ந்த கருங்கூந்தல் கொண்ட அந்தப் பெண்ணிற்கு முப்பது வயதிருக்கக் கூடும். வெண்கலச்சிலை போன்ற உடலமைப்பு. விளக்கின் சுடர் போன்ற கண்கள். திருமணம் செய்து கொண்ட மூன்று வாரத்தில் அவள் கணவன் கடலோடியாகப் போய்விட்டான். பதிமூன்று ஆண்டுகளாக அவன் வீடு திரும்பவில்லை.
தனிமையில் வாழ்ந்த அவள் காமத்தாலும், பிரிவின் ஏக்கத்தாலும், நினைவுகளின் கொந்தளிப்பாலும் பீடிக்கப்பட்டிருந்தாள்.
திடீரென ஒரு நாள் அவளது தலையிலிருந்து அருவி வழிந்தோடத் துவங்கியது. சந்தோஷத்தில் அவள் நடனமாட ஆரம்பித்தாள். அந்த நடனத்தின் போது தண்ணீர் நான்குபுறமும் சுழன்று தெறித்தது.
அன்றிலிருந்து அவள் நடந்து செல்லும் போது வழியெல்லாம் தண்ணீர் ஓடியது. அவள் சமைக்கும் போது இருட்டில் ஊர்ந்து செல்லும் பாம்பினைப் போலச் சப்தமில்லாமல் தண்ணீர் தரையிறங்கி ஓடியது.
குளத்துத் தாமரை நீரிலும் நீருக்கு வெளியிலும் ஒரே சமயத்தில் வாழ்வதைப் போலவே அவள் உச்சந்தலையிலிருந்து வழியும் தண்ணீரின் குளிர்மையோடும் மனதில் தகிக்கும் தனிமையின் வெம்மையோடும் வாழ்ந்து கொண்டிருந்தாள்
ஒரு நாள் ஜன்னல் வழியே வீதியைப் பார்த்தபடியே சொன்னாள்
“எனது உடல் ஒரு பாலைவனம். எவ்வளவு தண்ணீராலும் பாலையைக் குளிர வைக்க முடியாது“
வேறு ஒரு நாள் சொன்னாள்.
“மனதில் நிரம்பும் ரகசியத்தால் தான் தலைமயிர் கறுப்பாக வளர்கிறது. ரகசியம் தீர்ந்தவுடன் தலைமயிர் வெண்மையாகி விடுகிறது.“
தலையிலிருந்து அருவி கொட்டும் அந்தப் பெண்ணைப் பித்துப்பிடித்தவள் என்றும், சூனியக்காரி என்றும் ஊரார் அழைத்தார்கள்.
அவளோ நதிமுகம் நோக்கிக் காத்திருக்கும் படகின் ஒற்றைத் துடுப்பைப் போலக் கணவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.
அவள் வீட்டிலிருந்து தண்ணீர் வீதியில் வழிந்தோடியபடி இருந்தது
“ஒரு நாள் அவள் இந்த ஊரை முழ்கடித்துவிடுவாள் பாருங்கள்“ என்று கோபமாகக் கத்தினார் முதியவர்
அதைப் பலரும் ஏற்றுக் கொண்டு அவளை ஊரை விட்டுத் துரத்திவிட வேண்டும் என்றார்கள்.
அவள் ஊர்மக்களின் முன்பாகச் சொன்னாள்.
“நீண்ட பிரிவு கொண்ட, தனிமையில் வாழும் பெண்கள் எல்லோருக்குள்ளும் துயரின் அருவி பொங்கி வழிந்தபடியே தானிருக்கிறது. என் உடலால் அதைத் தாங்க முடியாதபோது கூந்தலின் வழியே வழிந்தோடுகிறது. அதற்கு மேல் ஒன்றுமில்லை.“
நன்றி: திருமதி சந்திரபிரபா ராமகிருஷ்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக