25 ஜன., 2021

சிறுகதை நேரம் : விஞ்ஞான வெட்டியானும், ஞான வெட்டியானும்

தி.ஜா. 100 (கதை 27).

விஞ்ஞான வெட்டியானும், ஞான வெட்டியானும் (1980 களில் இருக்கலாம் .. காலச்சுவடின் ‘அபூர்வ மனிதர்கள்’ தொகுப்பில் வாசித்தது!)

இக்கதையை, சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு இருந்த மருத்துவம் குறித்த பதிவாகக் கொள்ளலாம். பெரிய கார்ப்பொரேட் மருத்துவமனைகளைப் பற்றியும், மருத்துவத்திற்காகும் செலவுகள் பற்றியும், தேவையற்ற பரிசோதனைகள் பற்றியும், இன்று பல செய்திகள் - தி.ஜா. வின் ‘விஞ்ஞான வெட்டியானும், ஞான வெட்டியானும்’ சிறுகதை அப்படிப்பட்ட மருத்துவமனை பற்றியும் அங்கு நடப்பவைகளைப் பற்றியும் சொல்லிச்செல்கிறது. நாற்பது வருடங்களில் அறிவியல் முன்னேற்றம் எவ்வளவுதான் ஏற்பட்டிருந்தாலும், மருத்துவர் மற்றும் நோயாளிகளின் சமூகப் பார்வைகள் மாறவேயில்லை என்பதை இந்தக் கதை சுட்டுகிறது.  தி.ஜா. வின் வித்தியாசமான தலைப்பைப் போலவே, வித்தியாசமான கதைதான்!

தங்கைக்கு இரண்டு முறை ஆப்ரேஷன் செய்து, துடை வரைக்கும் காலை வெட்டியாகிவிட்டது. முதலில் முழங்காலுக்குக் கீழ்தான் எடுத்தது - மீண்டும் க்ளோரோஃபார்ம் கொடுத்து துடை வரை எடுத்ததை அவளிடம் சொல்லவில்லை என்ற எச்சரிக்கையுடன்,  அவளைப் பார்க்க வரும் அவள் அண்ணனைக் கூட்டி வருகிறான் கணவன் சீராளன். ‘முப்பத்திரண்டு வயதில் முழங்காலுக்குக் கீழே எடுத்தாச்சுன்னா, மிச்ச வயசில், நாலு குழந்தைகளுக்கும் யாரு செஞ்சு போடுவா?’ என்று வருந்துகிற தங்கையும், “பேசாம இருடா கண்ணு. நாங்கெல்லாம் எதுக்காக இருக்கோம்?” என்று ஆறுதல் சொல்லும் அண்ணனும் வெகு யதார்த்தம். வலி தெரியாமல் இருக்க ஊர், உலக, உறவுக் கதைகளைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்போது, பெரிய டாக்டர், இரண்டு மூன்று டாக்டர்கள், நர்சுகளுடன் வருகிறார். கட்டில் முனையில் தொங்கிய கடுதாசியையும், நோயாளியின் நாடியையும் கால் நிமிஷம் பார்த்துவிட்டு, ‘ஓகே, கண்டின்யூ’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். இந்த முக்கா நிமிஷத்துக்குப் பெரிய டாக்டருக்கு இருபத்தஞ்சு ரூபாயும், பெரிய நர்சுக்குப் பத்து ரூபாயும் பீஸ்!  சாயங்காலம் வரும் சின்ன டாக்டருக்கும், சின்ன நர்சுக்கும் பதினைஞ்சு ரூபாய் பீஸ்!  

“தினமும் அம்பது ரூபாயா?” என்று திகைத்த அண்ணா, “பாலி க்ளினிக்கோ, போலி க்ளினிக்கோ! தன் ஆஸ்பத்திரியிலே படுத்திருக்கிற நோயாளியப் பார்க்க, அதுவும் முக்கா நிமிஷம் எட்டிப் பார்க்க, இருபத்தஞ்சு ரூபாயா? பகல் கொள்ளே” என்கிறார்!

‘அமெரிக்கா, லண்டன், ஜெர்மனியெல்லாம் படிச்சிட்டு வந்தவர் என்றும், நெல்லு வித்த பணம் இருபத்திரண்டாயிரத்தையும் போன வாரம் வாங்கிட்டாரு’  என்றும் சொல்கிறாள் தங்கை. சீராளன், ‘சோதனைங்களுக்கே ஆறாயிரம் என்றும், ஆபரேஷனுக்குப் பதினைஞ்சாயிரம்’ என்றும் சொல்கிறார். ‘கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைத்திருந்த பணம் எல்லாம் காலியாயிடிச்சு. இன்னும் பன்னண்டாயிரம் ஆகும்னு சின்ன டாக்டர் சொன்னார்’ என்கிறான். மைத்துனர், ‘ஒரு காலை வெட்றதுக்கு நாப்பதாயிரமா? இவன் என்ன டாக்டரா வெட்டியானா?’ என்கிறார்.

“விஞ்ஞான வெட்டியான்” என்கிறது ஒரு குரல்! 

 வயித்து வலிக்கு நாலு எக்ஸ்ரே, ரத்தம், மூத்திரம், எச்சில்ன்னு எல்லா சோதனைகளும் செய்துவிட்டார்களாம். “ஆத்மான்னு ஒண்ணு இருக்காமே, அதைத்தான் இன்னும் சோதிக்கலே. கண்ணுக்குத் தெரிஞ்சு, கையிலியும் அகப்பட்டா, அதையும் சோதிக்கறேன்னு, ஒரு ரண்டாயிரத்தைப் பிடுங்கியிருப்பான்” என்று எழுதுவதில் தி.ஜா.வின் சமூக அறச்சீற்றம் தெரிகிறது. 

“மாம்பழம் சாப்பிட்டு (காஸலெட்டு மாம்பழமாம்!) மண்டை வலி வந்ததுக்கு,  ஒரு எல் எம் பி, எட்டணாக்கு ஆறு வேளை மிக்சர் கொடுத்தாரு - மூணு வேளைலேயே சரியாப் போச்சு”  என்று ஒருவர் எச்சரித்துவிட்டுப் போகிறார்!

அங்கு வேலை செய்யும் தோட்டிப்பெண்ணின் கணவன் ராயப்பன் வந்து, “ஆம்புடேஷன் பண்ணின காலோ, கையோ சுடுகாட்டில் கொண்டு போடன்னு நாப்பது, அம்பதுன்னு பில்லு போடறாங்க. எங்களுக்கென்னமோ பதினைஞ்சு ரூபாதான் தராங்க. கொஞ்சம் ஆபீஸ்லெ சொல்லி, முப்பது, நாப்பதாவது கொடுக்கச் சொல்லுங்க” என்கிறான்.

“ஏண்டா, ஞான வெட்டியான் தோட்டிகிட்டக் கூடவா இங்கக் கமிஷன் கேக்கறாங்க?  இவ்வளவு பணத்தைக் கொள்ளையடிச்சு என்ன செய்வான் ஒரு மனுஷன்?” என்று மைத்துனன் குழம்புவதாகக் கதை முடிகிறது!

தி.ஜா. பார்வையில், அறிவியல் அறிந்தவன் வெட்டுகிறான் - ’விஞ்ஞான வெட்டியான்’ ஆகிறான்! வெட்டியதைச் சுடுகாட்டில் கொண்டு போடுபவன் ‘ஞான வெட்டியான்’ ஆகிறான். அவனிடம் கூட கமிஷன் எடுத்துக்கொள்வதை, மாற்றச் சொல்லி கோரிக்கை வைக்கிறான். 

வெட்டியான் தமிழகக் கிராமங்களில் பிணக்குழி தோண்டுபவரையும், பிணஞ்சுடுபவரையும் குறிக்கும் சொல் வழக்காகும். இத்துடன் இவர்களுக்குக் கிராமக் காவல் தொழிலும் உண்டு!

‘ஞான வெட்டியான்’ திருவள்ளுவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படும், சித்தர்களின் கொள்கைகளை விளக்கும் நூல். வெட்டியான் ஒருவன் உயர் வகுப்பினரை நோக்கி அறிவுரை கூறுவது போல பாடப் பட்டுள்ளதால் ‘ஞான வெட்டியான்’ என்ற பெயர் பெற்றது என்கிறது விக்கிபீடியா.

சரியாகத்தான் தலைப்பை வைத்திருக்கிறார் தி.ஜா.!

மீண்டும் மற்றொரு கதையுடன் அடுத்த வாரம்……

ஜெ.பாஸ்கரன்.

நன்றி :

திரு. ஜெ.பாஸ்கரன்
மற்றும் 

கருத்துகள் இல்லை: