6 ஜன., 2021

கவிதை நேரம் : துண்டு - கவிஞர் நெல்லையப்பன்

துண்டு : நெல்லையப்பன் கவிதை


.
உழைப்பவனுக்கு முண்டாசு
சுமப்பவனுக்கு சும்மாடு
மலையாள மங்கைக்கு மாராப்பு
அரசியல் அன்பர்க்கு தோள(ழ)ன். 

பாகவதருக்கு அங்கவஸ்திரம்
மேடையில் பொன்னாடை
பிடிபட்ட திருடனுக்கு கைவிலங்கு
வியர்த்துக் களைத்தவனுக்கு விசிறி.

வெயிலில் நடப்பவனுக்குக் குடை
துயில்பவனுக்குத் தலையணை
நழுவ நினைப்பவனுக்குத் திரை
இளைப்பாறுபவனுக்கு விரிப்பு.

இல்லாதவனுக்கு அதுவே வேட்டி
குளிரில் நடுங்குபவனுக்குப் போர்வை
குளிக்கும்போது பலருக்குக் கோவணம்
மீன்பிடிக்கும் சிலருக்கு வலை

வல்லவன் கைகளில் ஆயுதம்
பணிவைக் காட்டும் இடையணி
பசியடங்கக் கட்டும் ஈரத்துணி
பட்ஜெட்டில் இருக்கும் இடைவெளி

நிறமும், கரையும், நீளமும்
இனத்தை அடையாளம் காட்டும்;
இத்தனூண்டு துண்டிற்கு
இத்தனை பரிமாணங்களா!

துண்டுபோட்டு தாண்டிச் சொல்கிறேன்:
தோளில் துண்டுபோட்டு ஏய்ப்பவர்களை,
கழுத்தில் துண்டைப்போட்டு, மக்கள்
கேள்வி கேட்கும் காலம் வரும்!

கருத்துகள் இல்லை: