18 ஜூலை, 2011

மனதில் பதிந்தவை-2: புதிய புத்தகம் பேசுது, ஜூன் 2011

புதிதாக வெளிவரும் புத்தகங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், பல படைப்பாளிகளின் சிந்தனைகளை அவர்களது நேர்முகம் வழியேயும், விமர்சனக் கட்டுரைகளின் வழியேயும் அறிந்துகொள்ள உதவும் இந்த இதழ் எனக்கு மிகவும் பிடித்த இதழ்களில் ஒன்று.


ஜூன் 2011 இதழில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களது நேர்காணல், தலையங்கம் - உலகம் வாசிக்கிறது, இரா.நடராஜன் அவர்களின் அயல்மொழி அலமாரி-9 (குருவாசகம்), நூல் அறிமுகம் - முனைவர் து.மூர்த்தி அவர்களின் தமிழில் புதிய தடங்கள் (விமர்சனங்களைக் கோரி நிற்கும் 19 கட்டுரைகள்), ச.சுப்பா ராவின் தாத்தாவின் டைரிக் குறிப்புகள் (வாழ்க்கை சார்ந்த நினைவுப் புரட்டல்கள்), மற்றும் ஐந்தாறு வகுப்பறைகளும் , பத்துப் பதினைந்து காக்கைகளும் (சுடர் ஒளியின் குழந்தைகளின் உலகிலிருந்து ஒரு குரல்), கட்டுரை (ஆர்.நீலா எழுதியுள்ள இரா.நடராசனின் கதைகளில் புதிய உத்திகள்), முதல் பிரவேசம் (குட்டி ரேவதியின் கவிதையின் ஒற்றைக்கயிறு), தமிழ்ச்செல்வன் அவர்களின் என் சக பயணிகள்-8 (அஸ்வகோஷ் என்கிற இராஜேந்திர சோழன்) என்று பல அற்புதமான, சுவையான படைப்புகள்.


முதலில் எஸ்.ராவின் நேர்காணல். ஏற்கனவே பதிந்துள்ளபடி, எனக்கு மட்டுமல்ல தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த அற்புதமான எழுத்தாளர். அவரை எங்களது காரைக்குடி புத்தகத் திருவிழாவிற்கு அன்போடு அழைத்தது, அவர்கள் எங்களது அழைப்பை ஏற்று வந்தது, ஆனால் அவரது சொற்பொழிவை கேட்கமுடியாமல் எங்கள் அமைப்பில் சிலர் செய்த குளறுபடி, அதனால் எனக்கு ஏற்பட்ட வேதனை இவற்றை ஏற்கனவே என் வலைப்பூவில் பதிவு செய்திருக்கிறேன். நான் படித்த அவரது முதல் படைப்பு விகடனில் தொடராக வந்த அவரது துணையெழுத்து. அதன் பின்னர் உயிர்மை, உயிர் எழுத்து, காலச்சுவடு போன்ற இதழ்களிலும், அவரது இணையத் தளத்திலும் அவரது எழுத்துக்களைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். மேலும் யூடூபில் அவரது வீடியோ நேர்காணல்களை தகவிறக்கம் செய்து பார்த்து-கேட்டு மகிழ்ந்தது எல்லாவற்றையும் இங்கே சொல்லவேண்டியிருக்கிறது. புத்தகத்தைத் திறந்ததும் அவரது நேர்காணலுக்குச் சென்று பேராவலுடன் படித்தேன். மிகச் சிறந்த நேர்காணல் அது. எஸ்.ராவைப் பற்றிய ஒவ்வொரு செய்தியும், அவரது சிந்தனைகளும் மேலும் மேலும் என்னை அவருக்கு அருகில் கொண்டு சென்றன. என்ன, அந்த தலைப்பு மட்டும் (ரஷ்ய இலக்கியங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன) சற்று நெருடலாக இருந்தது. யாரோ கூடி, திட்டமிட்டு, சதிசெய்து, ரஷ்ய இலக்கியங்களை மக்கள் படிக்கவிடாமல் செய்கின்றனர் என்பது போன்ற ஒரு கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


சோவியத் ரஷ்யா உடைவதற்கு முன் வரை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ரஷ்ய நூல்களை, குறிப்பாக இலக்கியங்களை, ஆங்கிலத்திலும், தமிழிலும் அருமையான வளவளப்பான தாட்களில், நேர்த்தியான பைண்டிங்குடன், நம்பமுடியாத மிகக் குறைந்த விலையில் சந்தைப் படுத்தியது. அந்தக் கால கட்டத்தில் நான் ரஷ்ய கிளாசிக்குகளையும், சை-ஃ பை, ரஷ்யாவின் பல மாநிலங்கள் மற்றும் ஊர்கள் பற்றிய வண்ண வண்ண நூல்கள் மற்றும் பல நூல்களையும் வாங்கிக் குவித்திருக்கிறேன், படித்து மகிழ்ந்திருக்கிறேன். OUP வெளியிட்டுள்ள பத்து பாகங்கள் கொண்ட ஆக்ஸ் ஃபோர்ட் செகாவ் நூலை நான் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து வாங்கிப் படித்திருக்கிறேன். செகாவின் நாடகங்கள், சிறுகதைகள், வாழ்க்கை வரலாறு என்று தேடிதேடி படித்தேன். உலகின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர் செகாவ் என்று போற்றி மகிழ்ந்திருக்கிறேன்.


பொதுவாகவே பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படும் நூல்களைப் படிப்பவர்கள் குறைவு. அதிலும் ரஷ்யன் போன்ற வெளிநாட்டு மொழி இலக்கியங்களைப் படிப்போர் மிகக் குறைவே. மொழி பெயர்ப்பு செய்பவர்களும் குறைவே. இதனால் பதிப்பகங்களும் முன்வருவது குறைவு. இதுதான் சரியான காரணமாக இருக்கமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து.


ஆனால் இன்று இணையத்தில் பல வெளிநாட்டு மொழி இலக்கியங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகள் இலவசமாகவே கிடைக்கின்றன. தஸ்தாயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' (Crime and Punishment) ஆங்கிலத்தில் படித்தேன். தற்போது "காரமசோவ் சகோதரர்கள்" (Brothers Karamazov) என்கிற அவரது மற்றொரு நாவலைப் ப்ராஜெக்ட் கூடன்பர்க்கிலிருந்து தகவிறக்கம் செய்து படித்து வருகிறேன்.


இத்தருணத்தில் மொழி பெயர்ப்பு இலக்கியங்களுக்காகவே தமிழில் வெளிவரும் இதழ்களான 'திசை எட்டும்' மற்றும் 'இனிய உதயம்' போன்றவற்றின் சேவையைப் பாராட்டி இங்கே பதிவு செய்வதில் மகிழ்வடைகிறேன்.


மன்னிக்கவும், எங்கேயோ போய்விட்டேன். மறுபடியும் எஸ்.ராவின் நேர்காணலுக்கு. முதலில் தாகூர் விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் என்ற முறையில் எஸ்.ரா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். பன்னிரண்டு சுவையான பக்கங்கள். எவ்வளவு தகவல்கள்! எவ்வளவு தெளிவான சிந்தனைகள்!! இந்த நேர்காணலில் என் மனதில் பதிந்த அற்புதமான கருத்துக்கள் நிறைய இருந்தாலும், இப்பதிவு பெரிதாக நீண்டுவிடும் என்கிற காரணத்தால் ஓரிரு கருத்துக்களை மட்டும் பதிவு செய்கிறேன். (நேர்காணல் செய்திருப்பவர் கீரனூர் ஜாகிர்ராஜா. அவரைப் பற்றியும், அவரது படைப்புகள் பற்றியும் சமீபத்தில் நிறையப் படிக்கிறேன்.)


"மனிதர்கள் மிகவும் சுயநலமானவர்கள் என்பதை நாய்கள்தான் திரும்பத்திரும்ப உலகத்துக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது. நாய் ஒரு குறியீடு. அதுவும் தர்மத்தின் குறியீடு. மகாபாரதத்தில் தருமர் சொர்க்கத்துக்கு செல்லும்போது ஒரு நாயை அழைத்துக்கொண்டு செல்கிறார். இருவரில் ஒருவருக்குத்தான் சொர்க்கத்தில் இடம் உண்டு என்று அறிந்தவுடன் அந்த நாயை உள்ளே அனுப்புகிறார். தருமம்தான் நாய் உருவில் வருகிறது என்று இந்தியாவில் ஐதீகம் இருக்கிறது."

"இயற்கையில் மனிதனைத் தவிர எல்லா உயிரினங்களும் இடம்விட்டு இடம் போய்க்கொண்டேதான் இருக்கின்றன. சைபீரிய நாரை நாடு விட்டு நாடு பறந்துவருவது தன்னை விருத்தி செய்துகொள்ளத்தான். எழுத்தாளனும் தன் அறிவை விருத்தி செய்துகொள்ள பயணம் செய்கிறான்."

"எழுதப்பட்ட எல்லா அனுபவங்களிலும் ஒருபாதிதான் நிஜம். அதனால்தான் மார்க் ட்வைன் சுய சரிதை என்பது மறுக்கவே முடியாத பொய்களின் தொகுப்பு என்று சொல்கிறார்."

"...அனுபவத்தை வடிவம் கொள்ளச்செய்வது கற்பனையே. கற்பனை பற்றி நமக்கு தவறான புரிதல் இருக்கிறது. அதை பொய்யான ஒன்று என்றே கருதுகிறோம், உண்மையில் கற்பனைதான் நமது புரிதலின் ஆதாரம்."

"எதுவாக இருந்தாலும் அதை சரியான இடத்தில் ஊன்றினோமானால் வளர்ந்து, கிளைத்து பெரிய விருட்சமாகிவிடும் என்பதை எழுத்தாளர்கள் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்."

"குறுங்கதை மரபு மிகப் பழமையானது. எல்லாக் கடவுள்களும் கதை வழியாகவே உயிரோடு இருக்கிறார்கள். ஞானிகள் கதைகளின் வழியேதான் அனுபவ அறிவைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். குறுங்கதை என்பது ஒரு பகிர்வுமுறை."

அடுத்து 'உலகம் வாசிக்கிறது' (தலையங்கம்): சுவையான, படித்து பெரிதும் மகிழ்ந்த தகவல்கள். புத்தக வாசிப்பை ஊக்குவிக்க உலகெங்கும் என்னவெல்லாம் செய்கிறார்கள்! ஸ்பெயினில் கடற்கரை நெடுகிலும் பிரபல புத்தகங்களின் கதாபாத்திர வேடமிட்டு கத்தை கத்தையாய் புத்தகங்களை விற்கிறார்கள். போர்ச்சுகலில் புத்தக வாசிப்பிற்கென மாதாந்திர விடுமுறையுடன், பள்ளி வாசல்களில் புத்தகங்களை வைத்து வாசிப்பை ஊக்குவிக்கிறார்கள். பூங்காக்களில் வாசிப்புக் கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. சீனாவில் மிஷின்களில் காசு போட்டு, புத்தகத்தின் பெயரை டைப் செய்தால் நாம் விரும்பிய புத்தகத்தை வாங்கலாம். ஜப்பானில் நாம் ஆர்டர் செய்த உணவு வரும்வரை படிக்க மேஜைக்கு அடியிலேயே புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன; அதை நாம் உணவு வரும் வரை படிக்கலாம். டென்மார்க்கில் சாலைகளில் விளக்குக் கம்பங்களில் பெட்டிகளில் புத்தகங்கள் - யார் வேண்டுமானாலும் தாம் படித்த புத்தகங்களை மற்றவர்களும் படித்து மகிழ அங்கே கொண்டு வைக்கலாம். ஸ்வீடனில் செயின்ட் பீட்டர் தினத்தன்று பிள்ளைகள் பெற்றோர்களுக்கு மலர்ச்செண்டு பரிசளிப்பார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு புத்தகங்களைப் பரிசளிப்பார்கள். பாரிஸ் நகரத்தில் வாசிப்பு பூங்காக்கள் வந்து விட்டன. இரவும் பகலும் வாசிக்க விரும்புவோர் வாசிக்கலாம்; அதற்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. க்யூபாவில் ரேஷன் பொருட்களோடு உலக அளவில் பேசப்படும் புத்தகங்களும் பொதுவிநியோக முறையில் வழங்கப்படுகின்றன.

இரா.நடராசனின் 'குருவாசகம்' (அயல்மொழி அலமாரி-9): பெரும்பாலான ஆசிரியர்கள் செய்தித்தாட்கள் தவிர ஏதும் படிப்பதில்லை என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆசிரியர்கள் படிக்க வேண்டிய சில சிறந்த நூல்கள் பற்றி இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. High Hopes : A Lancashire Life by Billy Hopkins; Teaching as Leadership by Steven Far; There are no children by Alex Kotovs; Savage in Inequalities by Jonathan Kozol; Children at War by Peter Singer; இறுதியாக ஒரு மாணவரின் நூல். கண்பார்வையற்ற, காது கேட்காத, வாய் பேசாத ஹெலன் கெல்லருக்குப் பாடம் கற்பிக்க தன் வாழ்வையே அர்ப்பணித்த ஒரு லட்சிய ஆசிரியரைப் பற்றிய நூல்: Teacher - Anne Sullivan Macy by Helen Keller. கற்றல் எனும் அற்புத அனுபவத்தை அறிமுகம் செய்த தன் ஆசிரியரைப் பற்றி ஹெலன் கெல்லர் எழுதிய நூல். கெல்லரைப் பற்றி நடராசன் அவர்கள் கூறியதை அப்படியே இங்கே தருகிறேன்: "ஹெலன் கெல்லர் அறுபத்து நான்கு புத்தகங்களை எழுதி இருக்கிறார். மாற்றுத் திறனாளிகளின், மங்கையர் குலத்தின் கலங்கரை விளக்கமாய் போற்றப்படும் ஹெலன் கெல்லர் தன்னை ஆளாக்கிய ஆசிரியையைப் பற்றி எழுதுவதை வாசிக்கும்போது பல இடங்களில் கண்ணீர் வந்து சொற்களை மறைத்து, மனம் விம்முவதைத் தவிர்க்க முடியவில்லை." இக்கட்டுரையின் கடைசி சில வரிகளையும் அப்படியே தருவது நல்லது என நினைக்கிறேன்: "பில்லி ஹாப்கின்ஸ் சொல்வதைப் போல, ஒரு ஆசிரியர் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் எது என சொல்லுங்கள். அவர் எப்படிப்பட்ட ஆசிரியர் என நான் சொல்லிவிடுவேன். புத்தகம் வாசிக்க முடியவில்லையா... ஆசிரியரா நீங்கள்... உங்கள் வாழ்வை முன்வைத்து ஒரு புத்தகம் எழுதுங்கள்... அதை வாசிக்கிற வேலையை நாங்கள் பார்த்துக் கொள்வோம்."

முனைவர் மூர்த்தியின் "தமிழில் புதிய தடங்கள்". இக்கட்டுரையிலிருந்து நினைவில் நிற்கும் சில வரிகள்: "சுரண்டல் அரசியல் அமைப்பிலிருந்து தமிழ்ச் சமூகத்தை மீட்காமல் தமிழை எப்படிக் காப்பாற்ற முடியும்? தமிழை எப்படி வளர்க்க முடியும்?"

"வாழ்க்கை சார்ந்த நினைவுப் புரட்டல்கள்" என்ற தலைப்பில் எஸ்.சங்கரநாராயணன் அறிமுகம் செய்துள்ள ச.சுப்பா ராவின் "தாத்தாவின் டைரிக் குறிப்புகள்" . இந்நூலைப் பற்றி சில வரிகள்: "நல்ல வாசிப்பு அனுபவம் தந்த புத்தகம். ... அறிவின் ஜாலங்கள் இல்லாத எளிமை புத்தகத்தின் அழகு."

"குழந்தைகளின் உலகிலிருந்து ஒரு குரல்" என்ற தலைப்பில் சுடர் ஒளி அறிமுகம் செய்துள்ள சந்தான மூர்த்தியின் "ஐந்தாறு வகுப்பறைகளும், பத்துப் பதினைந்து காக்கைகளும்" என்ற நூலிலிருந்து சில வரிகள்: "குழந்தைகளின் உலகம் சிறிதும் போலிகளற்றது, அழகானது, இயல்பானது, குதூகலமானது, மகிழ்ச்சி நிறைந்தது, வண்ணமயமானது, கற்பனை வளமிக்கது,... இப்படி முடிவில்லாமல் பலவற்றை தன்னுள் கொண்டது." "குழந்தைகளின் உலகினுள் பயணித்து, குழந்தை இலக்கியங்கள் படைத்தவர்கள் மிகச் சிலரே. அதிலும் குழந்தைகளினூடே இயங்குபவர்கள், குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பது அரிது. குழந்தைகளோடு பயணிக்கிற வாய்ப்பு பெற்ற ஆசிரியர்கள் குழந்தை இலக்கியம் படைப்பவர்களாகும் நிலை விரைவில் வாயக்கப்பெறவேண்டும். அப்போது மட்டுமே அதிசிறந்த குழந்தை இலக்கியங்கள் பிறக்கும். அந்நம்பிக்கைக்கு இப்புத்தகத்தின் மூலம் சாட்சியமளிக்கிறார் சந்தானமூர்த்தி."

"இரா.நடராசனின் கதைகளில் புதிய உத்திகள்" என்ற தலைப்பில் ஆர்.நீலா எழுதியுள்ள கட்டுரை. நடராசன் அவர்களின் எட்டு நூல்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கட்டுரை ஆசிரியரின் வார்த்தையில், "... அனைத்துக் கதைகளும் ஒவ்வொரு வகையில் வாசகரைக் கவர்கிறது. அது குழந்தைக் கதைகள் என்று ஒதுக்க முடியாதபடி, பெரியவர்களுக்கும், பெரியவர்களுக்கு என்று ஒதுக்க முடியாதபடி சிறுவர்களுக்கும், தவிர்க்க முடியாத புத்தகங்களாக உள்ளது. குழந்தைகளாகட்டும் , பெரியவர்களாகட்டும், இப்புத்தகங்களின் வாசிப்புக்குப்பின் அவர்களின் மனது அறிவில் விரிவடைவது திண்ணம்."

குட்டி ரேவதியின், "ஒற்றைக் கயிறு". இவரது படைப்பு எதையும் நான் இதுவரை வாசித்ததில்லை. இனிமேலாவது வாசிக்க வேண்டும். இக்கட்டுரையிலிருந்து: "கவிதை என்பது வரிகளாலான ஒற்றைக் கயிறு. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி திரிந்து திரிந்து முறுக்கி உருவாகிறது. அது அவரவர் இரத்தத்தாலும், உணர்ச்சிகளாலும், அவர்கள் பிறந்து வளர்ந்த சமூகச் சூழலாலும், வளர்க்கப்பட்ட முறைகளாலும், குழந்தைப் பருவ நினைவுகளாலும் ஆனதொரு கலவையாகத்தான் ஆகி வருகிறது. என்றாலும், அதன் மலினங்களைத் தன்னைத் தானே உதறிச் சிதறி, விட்டு விலகி, முறுக்கேற்றிக் கொள்வது மிக மிக அவசியமென பிரமிள் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளுக்கும், அவரைப் பற்றிக் கேள்விப்படும் விடயங்களுக்கும் உள்ள இடைவெளி உணர்த்தியது."

அடுத்து மிக சுவாரச்சியமான ஒரு கட்டுரை, ஒரு எழுத்தாளரைப் பற்றியது. என் சக பயணிகள் என்ற தலைப்பில் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதுவரும் தொடரில் எட்டாவது கட்டுரை, அஸ்வகோஷ் எனும் இராஜேந்திர சோழன் பற்றியது. அஸ்வகோஷ் அவர்களது எழுத்து எதையும் நான் படித்ததில்லை என்பதை முதலில் கூறிவிடுகிறேன். ஆனால் இந்த சுவையான கட்டுரையைப் படித்ததும் என் இழப்பை உணரமுடிந்தது. நான் நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது. காலம் எனும் எதிரி மட்டுமல்ல இன்னும் எத்தனையோ எதிரிகளை (உடல் நலக் குறைவு, உடல் மற்றும் மனச் சோர்வு, பொருளாதாரம், செய்து முடிக்க வேண்டிய எண்ணற்ற கடமைகள் என்று பல) வென்றால் மட்டுமே இது சாத்தியமாகும். ஏற்கனவே என் கணக்கில் அறுபத்தி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன; இன்னும் என் கணக்கில் எவ்வளவு ஆண்டுகள் மிச்சமிருக்கிறதோ தெரியவில்லை. இக்கட்டுரையிலிருந்து சில வரிகள்: "அஸ்வகோஷின் சிறுகதைகள் பிரதானமாக சமகாலச் சமூக யதார்த்தங்களை அழகியலோடும், ஒருவித உணர்ச்சிகர மனநிலையோடும் முன்வைத்தவை.... அவரது கதைகள் இலக்கியத்தரமான முற்போக்கான கதைகள்தாம் என்று அடித்துக் கூறலாம். ஏழ்மை, இல்லாமை - அதன் காரணமாக மனித மனங்கள் அடையும் அவமானங்கள், சிதையும் மனித மாண்புகள், அதையும் மீறி வெளிப்படும் அன்பும், நேசமும் - இவைதான் பெரும்பாலான அஸ்வகோஷ் கதைகளின் பாடுபொருளாக அமைந்தவை. எவ்வித தளுக்கும், மினுக்கும் இல்லாத ரொம்பச் சாதாரணமான மொழியில் நேரடியாகக் கதை சொல்லும் பாணி அவருடையது. வட ஆற்காடு வட்டார மொழி இயல்பாக அவரது கதைகளில் ஊடாடும். வறுமையை நேரடியாகச் சொல்லாமல் அது ஏற்படுத்தும் உறவுச் சிக்கல்கள், மன அவஸ்தைகளைக் கதையாக்கியதுதான் அஸ்வகோஷின் தனிச் சிறப்பு. மூன்று தளங்களில் அவரது கதைகள் இயங்கின. ஒன்று ஆண்-பெண் உறவு சார்ந்தது. இரண்டாவது சமூக யதார்த்தங்கள் சார்ந்தது. மூன்றாவதாக அவருடைய மனதை ஆக்கிரமித்து அவரை அமுக்கிப்போட்டதாக நான் குறிப்பிட விரும்புவது கம்யூனிஸ்ட் கட்சி மீதான அவருடைய காட்டமான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும், கேலியும், நக்கலும் நிறைந்த கதைகள்...."

இவை தவிர புத்தகங்கள் பற்றிய சில விளம்பரங்களும் குறிப்பிடத் தகுந்தவை. அவற்றை படத்துடன் பதிவு செய்துள்ளேன். புத்தகப்பிரியர்கள் அவற்றை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி: புதிய புத்தகம் பேசுது & பாரதி புத்தகாலயம், சென்னை

கருத்துகள் இல்லை: