18 ஜூலை, 2011

மனதில் பதிந்தவை-1: ஆனந்த விகடன் ஜூலை 2011


இந்தப் புதிய பகுதியை என் மனதிற்கு மிகவும் பிடித்த ஆனந்த விகடன் வார இதழுடன் ஆரம்பிக்கின்றேன். 

விகடன் விலை இந்த இதழ் முதல் ரூபாய் பதினேழு!

விகடனில் நான் விரும்பிப் படிக்கும் பகுதிகள் எஸ்.ராமகிருஷ்ணனின் கேள்வி பதில்கள் (விகடன் மேடை), வாலியின் நினைவு நாடாக்கள், சுகாவின் மூங்கில் மூச்சு, சிறுகதை, அன்டன் பிரகாஷின் WWW வருங்காலத் தொழில் நுட்பம் ஆகியவை.

இந்த இதழிலும் எஸ்.ராவின் பதில்கள் சிறப்பாக இருந்தன. குறிப்பாக என் மனதில் பதிந்த வரிகள்: (மகாபாரதம்) கலாச்சாரம் மற்றும் சமூக மாற்றங்களின் வழியே இந்திய சமூகம் எப்படித் தன்னை வளர்த்துக்கொண்டது என்பதைப் பற்றிய மிகப் பெரிய ஆவணக் களஞ்சியம்.

வாலியின் நினைவு நாடாக்களில் மனதில் பதிந்த வரிகள்: மனித வாக்கியத்தின் முற்றுப்புள்ளியாய் மரணத்தைச் சொன்னால் முக்கால் புள்ளியாய் முதுமையைச் சொல்லலாம்.... எவ்வளவு முக்கியப் புள்ளியையும் முக்காற் புள்ளியும், முற்றுப் புள்ளியும் விட்டுவைப்பதில்லை.....

சுகாவின் மூங்கில் மூச்சை நான் படிக்க முக்கியக் காரணம், அவரைப் போலவே நானும் திருநெல்வேலிக்காரன். நெல்லைப் பேச்சு, பார்வதி டாக்கீஸ், ரத்னா தியேட்டர், குறுக்குத்துறை, சந்திப் பிள்ளையார் கோவில், சா ஃப்டர் ஹைஸ்கூல் என்று நான் ஒரு காலத்தில் சுற்றி வந்த இடங்களைப் பற்றிப் படிக்க முடிகிறது. நான் நெல்லைக்குச் சென்று பல வருட காலம் ஆகிவிட்டது; அப்படியே சென்றாலும் சில மணி நேரங்கள் மட்டுமே அங்கிருப்பேன். என்ன சுகாவிற்கு நான் பலப் பல வருடங்கள் சீனியர். இந்த வாரம் பண்டாரவிளை நாடார் பற்றி எழுதியிருப்பதைப் படித்ததும் என் பாட்டியின் நினைவு வந்தது; அவள்தான் பண்டாரவிளை நாடாரைப் பற்றிச் சொல்லுவாள்.

அடுத்து யுவ கிருஷ்ணாவின் சிறுகதை, அசோகர் கல்வெட்டு. தரமான கதை. ஏனோ கதையில் வரும் அமல்ராஜ் போல என் வாழ்விலும் என்னுடன் படித்த மணியை நெல்லை ரயில் நிலையத்தில் சந்தித்தது நினைவிற்கு வந்தது. நெல்லை எக்ஸ்ப்ரஸ் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. தன் முதலாளிக்கு ஸ்லீப்பரில் பெர்த் கேட்டு பரபரப்பாக அலைந்து கொண்டிருந்தான். டேய்! உன் அப்பா டி.டி.ஆர்.தானே, எனக்கு உதவக்கூடாதா என்றான் பரிதாபமாக. அன்றைக்கு என்னால் உதவ முடியவில்லை. அதன் பிறகு பல வருடங்கள் ஓடிவிட்ட பின்பும் அவனை இன்றுவரை பார்க்க முடியவில்லை.

அன்டன் பிரகாஷின் WWW - கூகுள் பிளஸ் மற்றும் ஸ்கைப் தொழில்நுட்பத்துடன் கைகோர்த்து ஃபேஸ்புக் வழங்கும் வீடியோ சாட் பற்றி படித்தேன். நான் இரண்டையும் இதுவரை முயன்று பார்க்க வில்லை. இனிதான் பார்க்கவேண்டும்.

இவைதவிர, விகடன் தரும் புள்ளிவிபரங்கள் பகுதி. பத்மநாப சாமி கோயிலின் பாதுகாப்புக்கென கேரள பட்ஜெட்டில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட தகவல். அப்போதும் நூறு சதவிகிதம் பாதுகாப்பு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. தேவையில்லாத பல பிரச்சினைகள். ஏன் இவ்வளவு சிரமம்? அவ்வளவு நகைகளையும் போட்டுப் பார்க்கவோ, பயன்படுத்தவோ முடியாத நிலையில் அவற்றை விற்று எவ்வளவோ நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தலாமே, திருப்பதியில் உள்ளதுபோல் பல்கலைக்கழகம், பக்தர்களுக்கு உதவும் வகையில் இலவச தங்குமிடம், இலவச உணவு, பக்தி நூல்களை குறைந்த விலையில் பதிப்பித்து வெளியிடுவது, தினமும் பல ஊர்களில், பல இடங்களில் ஆன்மீகச் சொற்பொழிவுகள், சிறார்களுக்கு தினமும் மனதை ஒருமுகப் படுத்தும், மேன்மைப் படுத்தும் பக்திப் பாடல்களை சொல்லிக்கொடுப்பது, ஆன்மீக நூல்களை எழுவோரை ஆதரிப்பது மற்றும் எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு உதவுதல் என்று.

புத்தகப்பிரியன் என்ற முறையில் விகடன் வரவேற்பறையில், தீப.நடராஜன் தொகுத்து, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள ரசிகமணி டி.கே.சி.கடிதங்கள் என் கவனத்தை ஈர்த்தது. 960 பக்கங்கள், விலை ரூபாய் அறுநூறு! அம்மாடியோவ்! எங்காவது நூலகத்தில் ஓசியில் படித்தால்தான் உண்டு.

அடுத்து இன்பாக்ஸில், எழுபத்தைந்து கோடி மக்களை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக் முதலிடம் பிடித்துள்ள தகவல்.

ந.வினோத்குமாரின் கூடங்குளம் அணுமின் நிலையம் - காத்திருக்கும் பேராபத்து. அணுமின் நிலையங்கள் பற்றி வெளிவரும் செய்திகளைப் படித்தும், தொகுத்தும் வருகிறேன். மேலைநாடுகளே வேண்டாம் என்று கைவிடத்தொடங்கியுள்ள அணுமின் சக்தி நமக்கு ஏன்? தவறு நேர்ந்தால் ஏற்படும் கதிர்வீச்சு அபாயம் 40,000 வருடங்களுக்கு மேல் நீடிக்கும் என்று எங்கோ படித்திருக்கிறேன். நம்மவர்களின் கவனக்குறைவு அனைவரும் அறிந்ததே. அழிவு நம்மோடு முடிவதல்ல, தலைமுறை தலைமுறையாய்த தொடரும். எல்லாம் அச்சுறுத்துவதாக இருக்கிறது. இதெல்லாம் தேவைதானா? வேறு எத்தனையோ வழிகள் இருக்கிறதே, ஏன் அவற்றை முயலக் கூடாது. அமெரிக்காவே தற்போது சூரிய சக்திக்கு முதல் இடம் அளிக்க ஆரம்பித்துவிட்டது என்று படிக்கிறேன். அப்புறம் காற்றாலைகள் இருக்கின்றன. வெப்ப நாடான இந்தியா போன்ற நாடுகளுக்கு சூரியசக்தியை விட சிறந்தது என்ன இருக்க முடியும்?

அப்புறம் நிறைய சினிமா, அரசியல் குப்பைகள். ஆம், என்னைப் பொறுத்தவரை அவை குப்பைகள்தாம். நம் சினிமாக்களும் சரி, அரசியல்வாதிகளும் திருந்தப் போவதே இல்லை. ஊழல் அரசை மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள் என்று மகிழும் வேலையில், மறுபடியும் பதினைந்து பெர்சென்ட் கமிஷன் என்று ஆளுக்கு ஆள் ஆரம்பித்துவிட்டார்கள் என்று படிக்கிறேன். வேதனையாக இருக்கிறது. 2 ஜி ஊழலைப் பொறுத்தவரை பத்து சதவிகித உண்மையாவது வெளிவருமா என்பது சந்தேகமே.

விகடனில் கவிபேரரசு வைரமுத்து படைக்கவிருக்கும் உலக இலக்கியத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 

நன்றி: ஆனந்த விகடன்

கருத்துகள் இல்லை: