25 அக்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-33: "மின்சார வட்டி"

"ஆயிரம் ரூபா
ராத்திரி எட்டு மணிக்குள்ள
கரக்டா கட்டலேன்னு வையி,
மவனே, ஒம் பொண்டாட்டிய
ஒட்டிக்கினு வந்து விட்டுடு" -
அதிகாலை ஐந்து மணிக்கு
வசைபாடியவரை
வணங்கி நின்று,
நூறுரூபா பிடித்துக்கொண்டு,
அவர் கொடுத்த
தொள்ளாயிரம் ரூபாயில்,
முதலில் சூடான உயிர்த் திரவம்
டீக்கடையில் அருந்திவிட்டு,
தள்ளுவண்டியின் சக்கரங்களுக்கு
மூச்சு வாங்க காற்று அடித்து,
விடியுமுன்னே மார்க்கெட்டுக்கு ஓடி,
நான்கு கூடை ஆப்பிள்களை
பேரம்பேசி வாங்கி,
தெருத் தெருவாகக் கூவி விற்று
மொத்த வெயிலையும் தலையில் வாங்கி,
ஐம்பது பைசா இட்லி பத்தும்,
பிறகு கதம்ப சாதமும் சாப்பிட்டு,
ஏட்டையாவுக்கு ஆப்பிள் கொடுத்து,
இரவு ஏழு மணிக்கு விற்றுமுடித்து,
அவசரமாக ஆயிரம் ரூபாயை
முதாளியிடம் கட்டிவிட்டு,
வீடுநோக்கி நடந்தவனிடம் மிஞ்சியது:
இருபது சில்லரையும்,
அடிபட்ட ஆப்பிள்கள் நான்கும்.

கருத்துகள் இல்லை: