23 அக்., 2008

எனக்குப் பிடித்த கவிதை-44: "நின்றுபோன கடிகாரம்" - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

நேற்றிரவு என்னுடைய கடிகாரம் நின்றுபோயிற்று.
களிம்பேறிய ஓர் இதயம்
இனி என் மணிக்கட்டில் துடிக்காது.

தங்கைக்குப் பிறக்க நிமிடம் கொடுத்ததும்
பாட்டிக்கு இறக்க வேலை குறித்ததும்
இந்தக் கடிகாரம்தான்.

ஜாதகத்தின் காரணமும்
வாழ்க்கையின் இலக்கணமும்
இந்தக் கடிகாரம்தான்.

தூங்குமுன் உற்றுக்கவனித்தால்
இந்தக் கடிகாரத்திலிருந்து
காதலியின் மூச்சிரைப்பைக் கேட்கலாம்.
குண்டுபட்ட பறவையின் சிறகடிப்பைக் கேட்கலாம்.

இருளிலும் மின்னும் பச்சை முட்களுக்கு
அயல்கிரகங்களுடனுள்ள தெளிவற்ற உறவை நினைந்து
வியந்திருக்கிறேன்.

டிக்...டிக்...டிக்...டிக்
அடிமைகள் கல்லுடைக்கும் சப்தம்
யாகக் குதிரைகளின் குளம்பொலி
திக்விஜர்களின் இரத்தம் படிந்த அமைதி மந்திரம்
தீர்க்கதரிசிகளின் தளர்ந்த நாடித்துடிப்பு.

டிக்...டிக்...டிக்...டிக்
பதில் வராத மழையில்
அகதிகள் காலடி ஓசை.
மரணத்தின் வழியே வெற்றியை நோக்கித்
தற்கொலைப்படையின் கனவுப் பயணம்
சரணடைந்த வாழ்க்கைக்கு
எதிரிப்படையின் காவல் தாளம்.

நேரமாகவில்லை.
நேரமாகவில்லை.

மெல்லிய முட்கள் ஒன்று சேரும்போது
மக்களைத் தூக்கிலிடத் தீர்ப்பளித்த
நீதிமன்றம் கலைகிறது.

நான் இனி காலத்தின் வாதியோ,
பிரதிவாதியோ இல்லை.
நேற்றிரவு என்னுடைய கடிகாரம்
நின்று போயிற்று.

- மூலம்: மலையாளம்
- பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
- தமிழில்: சுகுமாரன்

கருத்துகள் இல்லை: