"ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே, குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே" என்ற சி.எஸ்.ஜெயராமனின் குரல் இன்றும் செவியில் ஒலிக்கிறது. சென்ற ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரு கிரகப்ரவேசம், ஒரு கல்யாணம் இவற்றைச் சாக்காக வைத்துக்கொண்டு திருக்குற்றாலம் சென்று வந்தேன் நெல்லையப்பனுடன். என்னவோ தெரியவில்லை இதுவரை அதைப்பற்றி எழுத முடியாமல் தள்ளிக்கொண்டே போய்விட்டது. "Better Late Than Never".
"திங்கள் முடி சூடும் மலை, தென்றல் விளையாடும் மலை" என்று தென்பொதிகை மலை பற்றி நிறையச் சொல்லலாம். திருகூட ராசப்பக் கவிராயரின் "திருக்குற்றாலக் குறவஞ்சி" என்று என்னென்னவோ நினைவில் வந்தது.
நெல்லையில் வாழ்ந்த காலத்தில் நினைத்தால் குற்றாலம். சீசன் காலங்களில் குடும்பத்துடன் குற்றாலம் சென்று ஒரு வாரம் வரை தங்கி மகிழ்ந்திருக்கிறோம். தற்போது பல ஆண்டுகளுக்குப்பின் குற்றாலம் செல்லும் வாய்ப்புக் கிட்டியது.
தங்குவதற்கு வசதியாக கீழ்த் தளத்திலேயே நல்ல அறை கிடைத்தது. பொருட்களையெல்லாம் அறையில் போட்டுவிட்டு நானும் நெல்லையும் சுற்றக் கிளம்பிவிட்டோம்.
"உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையுங்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தா உன்குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே"
எனக் குற்றாலநாதரை இறைஞ்சி மாணிக்கவாசகர் பாடிய பாடல் கூத்தர் கோவில் வாசலில் கண்ணில் பட்டது.
மெயின் ஃ பால்ஸ் எனும் முக்கிய அருவியைச் சுற்றிவந்தோம். பின் ஐந்தருவிப் பாதையில் காலாற நடந்தோம். எழில் கொஞ்சும் இயற்கை அழகைச் சொல்லி மாளாது. எனது கேமெராவில் இஷடப்படி சுட்டுத்தள்ளினேன்.
மறுநாள் விசுவும் எங்களோடு சேர்ந்துகொண்டான். அப்புறம் கேட்பானேன். ஐந்தருவிக்குச் சென்று குளித்தோம். அங்கேயும் படங்கள்.
குற்றாலக் கடைவீதியில் நிறைய பொருட்கள். வீட்டிற்கு வேண்டுவன, குறிப்பாக ஜாதிக்காய் ஊறுகாய், வாங்கினோம். எனக்குத் தெரிந்து ஜாதிக்காய் ஊறுகாய் வேறெங்கும் கிடைப்பதில்லை. மேலும் சுவையான உணவு.
முன்னிரவில் அறையில் அரட்டைக் கச்சேரி.
அடுத்த நாள் மனமின்றி குற்றாலத்தைவிட்டு ஊருக்குக் கிளம்பினோம். குற்றாலத்தில் எடுத்த படங்களில் சிலவற்றை மட்டும் மேலே தனியே பதிவு செய்துள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக