6 ஜன., 2010

கருத்துக்கள்-16: "திருநீற்றின் மகிமை"

பல வருடங்களுக்கு முன் மாதம் தவறாது ஒரு குறிப்பிட்ட விநாயகர் கோவிலுக்குச் செல்லும் பழக்கமிருந்தது. ஒருமுறை நான் சென்றபோது கோவிலில் யாருமில்லை. விபூதி, குங்கும மடலில் விபூதி, குங்குமமும் இல்லை. அதிலிருந்து அங்கு செல்லும்போது விபூதி, குங்குமம் பாக்கெட் வாங்கிச் சென்று விபூதி, குங்கும மடல்களில் அவற்றை அனைவரின் உபயோகத்திற்கும் போட்டு வந்தேன்.

அவ்வாறு ஒரு முறை சென்றபோது வழக்கமாக வாங்கும் தரமான விபூதி கிடைக்காமல் கிடைத்த சாதாரண விபூதியை வாங்கிச் சென்றேன். கோவிலிலிருந்த பையன் ஒரு கம்பெனியின் பெயரைச் சொல்லி அந்த விபூதி மட்டுமே வாங்குங்கள் என்று சொன்னான்.

நான் வாங்கிச் சென்றிருந்த விபூதி தரமற்றதாக இருந்திருக்கலாம். அதில் பிரச்சினை என்னவென்றால் சிலருக்கு அலர்ஜி ஆகி சருமம் கறுத்தல், தடித்தல், அரிப்பு போன்ற தொல்லைகள் தோன்றலாம். எனவே இனி வாங்கும் பொது கவனமாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

நம் முன்னோர்கள் விபூதியைத் தயாரிப்பதற்கு வழிமுறைகளை வகுத்திருந்தார்கள். பசுஞ்சாணத்தை அதற்குரிய பக்குவப்படி புடம்போட்டு திருநீறு தயாரிக்க வேண்டும். ஆனால் இன்று எல்லாவற்றையும் மேம்போக்காக, வர்த்தக நோக்கில், லாபம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும்போது, அடிப்படைகள் காணாமல் போகின்றன.

"மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு, சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு" என்று பெருமை சொல்லும் திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப்பதிகம் நினைவிற்கு வந்தது. பாண்டிய மன்னன் அதைப் பாடி, நீறணிந்து, நோயிலிருந்து விடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. நிச்சயம் திருநீற்றுக்கு மருத்துவ குணங்கள் உண்டு.

ஆனால் இது எல்லாவற்றிற்கும் மேலாக திருநீற்றின் அடிப்படையை நாம் பெரும்பாலும் மறந்துவிடுகிறோம் என்று நினைக்கிறேன். திருநீறு, விபூதி என்பது சாம்பல்.

உதாரணமாக என்னையே எடுத்துக் கொள்கிறேன். கையில் விபூதியை எடுத்துக்கொண்டு, "அடேய் சூரி! இந்த உடலும் ஒரு நாள் இதுபோல் சாம்பலாகப் போகிறது, ஆகவே இந்த உடம்பின் மேல் அதிகம் பற்று வைக்காதே, "Don't pamper this body" என்று மனதிற்குள்ளாவது சொல்லிக்கொண்டு நீறணிந்து கொள்ளவேண்டும்". ஒவ்வொரு முறையும் இவ்வாறு செய்யும்போது எனக்குள் ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். எனக்கு உடம்பின் மேலுள்ள பற்று படிப்படியாகக் குறையவேண்டும். இது திருநீற்றின் மேன்மையான பயன்பாடு என்று கருதுகிறேன்.

ஆனால் வழக்கம் போல், மேம்போக்காக திருநீரணிவதையும் ஒரு சடங்காக்கி விட்டோமோ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

2 கருத்துகள்:

nellaiappan சொன்னது…

இனி ஒவ்வொரு முறையும்
திருநீறு அணியும் போது
"அடேய் நெல்லையப்பா! இந்த உடலும் ஒரு நாள் இதுபோல் சாம்பலாகப் போகிறது, ஆகவே இந்த உடம்பின் மேல் அதிகம் பற்று வைக்காதே, "Don't pamper this body" என்று மனதிற்குள் சொல்லிக் கொள்கிறேன்.
anbudan nellai.

SURI சொன்னது…

நன்றி, நெல்லையப்பா! வாழ்க வளமுடன்!!