21 பிப்., 2010

சூரியின் டைரி-7: "ஒரு பகல் நேரப் பாசெஞ்சர் ரயிலில்"


வழிநெடுக பார்த்தவிடமெல்லாம் வாழைத்தோப்பு!



காவிரிப்பாலம்

கொள்ளிடம்








கார்த்திக் தனது பக்கத்து வீட்டுப் பையனுடன்


எதிரே விரைந்து செல்லும் விரைவு ரயில்

கல்லக்குடி பழங்காநத்தத்தில் டால்மியா சிமின்ட் கம்பெனி

சென்ற
நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் ஒருநாள் என்று நினைக்கிறேன். கடலூர் செல்வதற்காக திருச்சியில் அந்த பாசெஞ்சர் ரயிலைத் தேர்ந்தெடுத்தேன். ஏற்கனவே அதில் இருமுறை பயணித்த சுகமான அனுபவம் அதற்கு முக்கிய காரணம். திருச்சி ரயில் நிலையத்தை விட்டு மதியம் 3.30 மணி அளவில் ரயில் புறப்பட்டது. திருச்சி-கடலூர் பயணக் கட்டணம் வெறும் ரூபாய் இருபத்துஎட்டு மட்டுமே. பேருந்துக் கட்டணமோ ரூபாய் அறுபத்து ஐந்து! பயண நேரம் இரண்டிலுமே கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம். பேருந்தில் கூண்டில் அடைபட்டதுபோல், நசுக்குப்பட்டு செல்வதைவிட, ரயிலில் செல்வது எவ்வளவோ மேல். வசதியாக கால்நீட்டி அமர, அங்கங்கே ரயில் நிற்கும் பொது இறங்கிக் காலாற நடக்க - இப்படிப்பல வசதிகள். என்னைப்போன்ற சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு ரயில் பெரிய நிம்மதி. அடிக்கடி சிறுநீர் கழிக்க அல்லாட வேண்டாம். எனது இன்னொரு வியாதி பயணத்தின்போது புத்தகம் படிப்பது. அதற்கும் இந்த ரயில் மிக சுகமானது. சென்றமுறை இதேபோல கடலூர் சென்றபோது, "படைப்பாற்றல்" என்ற அற்புதமான அங்கில நூலின் பெரும்பகுதியை பயணத்திலேயே படித்து முடித்தேன். உபரியாக, ஒன்று மாற்றி ஒன்று நொறுக்குத்தீனி வந்துகொண்டே இருக்கும். என் போன்ற நாக்கு நீண்டவர்களுக்கு இந்த ரயில் சொர்க்கம்.

பெரும்பாலும் கிராமத்து மக்கள், பாமர மக்கள் பயணிக்கும் இந்த ரயிலில் பலவகையான நொறுக்குத்தீனிகள் வந்துகொண்டே இருக்கும். பெரும்பாலானவற்றின் விலை வெறும் ஐந்து ரூபாய்தான். பாப்கார்ன், முறுக்கு, சுண்டல், வேர்க்கடலை (பொட்டலம் மூன்று ரூபாய்), தேநீர் (கப் நான்கு ரூபாய்) என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஸ்ரீ ரங்கத்தில் மல்லிகைப்பந்து (பத்து ரூபாய்), முல்லைப்பந்து (பத்து ரூபாய்) . கற்பூரவள்ளி வாழைப்பழம் (பதினைந்து பழம் பத்து ரூபாய்), ரஸ்தாளி (பத்து பழம் பதினைந்து ரூபாய்) - இப்படி எல்லாமே விலை மலிவு.

குறைந்த கட்டணம் என்பதாலோ என்னவோ, பயணிகள் கூட்டம் குறைவில்லாமல் இருந்தது. அனைவரும் உற்சாகமாக, எதையாவது கொறித்துக்கொண்டே, சிரித்துக்கொண்டே பயணிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

லால்குடிக்கு முன்பாக ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் ரயில் காரணமில்லாமல் அதிக நேரம் நின்றது. அப்போது பரபரப்பான அந்த செய்தி வந்தது. யாரோ மூன்று மாணவர்கள் (வேறொரு) ரயிலில் அடிபட்டு இறந்து விட்டார்கள், எனவேதான் தாமதம். இத்துரச் செய்தி அனைவரையும் பாதித்ததை கண்கூடாகக் காணமுடிந்தது. ஒரே அனுதாப அலை. அனைவர் மனதிலும் கஷ்டம். என் எதிரே இருந்த பயணி கீழே இரங்கி விசாரித்து வந்தார். அவர் ரயில்வே ஊழியர் என்று நினைக்கிறேன். சிரித்த முகத்தோடு திரும்பிய அவர், "Mock Drill"; விபத்து எதுவும் நடக்கவில்லை. விபத்து நடந்தால் தொடர்புடைய ரயில் நிலையங்களின் ஊழியர்கள் எப்படிச் செயல்படுவார்கள் என்பதைக் கண்டறிய, மேலதிகாரிகள் நடத்திய நாடகம் அது. அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.

அடுத்து வந்த ஒரு ரயில் நிலையத்தில் பெரிய தட்டுக்கூடை நிறைய முரட்டு, முரட்டு வாழைப்பூக்களைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு வந்தார் ஒரு பெண்மணி. அவ்வளவு பெரிய வாழைப்பூக்களை நான் பார்த்ததே இல்லை. (வழி நெடுக பார்த்தவிடமெல்லாம் வாழைத்தோப்பு.) நம்மவர்கள் பேரம் பேசாமல் எதையும் வாங்குவதில்லையே. அவர் பூ ஐந்து ரூபாய் சொல்ல, பயணிகள் இரண்டு பூ ஐந்து ரூபாய் என்று பேரம் பேச, இறுதியில் பூ மூன்று ரூபாய், நான்கு ரூபாய் என்று விற்பனையானது.

நான் ஒரு சாதாரண அரசு ஓய்வூதியக்காரன். இருப்பினும் ஒரு சில ரூபாய்களுக்காக சுமக்க முடியாமல் சுமந்து, பெட்டி பெட்டியாக ஏறி இரங்கி, பேரம் பேசி, காவல்துறை மற்றும் ரயில் அலுவலர்களுக்கு அஞ்சி, காலை ரயிலில் வந்து, மாலை ரயிலில் ஊர் திரும்பும் - இப்படிப் பிரம்மப்பிரயத்தனம் செய்யும் - இவர்களுக்கெல்லாம் எப்போது விடிவு காலம் பிறக்கும் என்ற என்ற வேதனைக் கேள்வியும் எழுந்தது. மனதில் ஒருவகையான குற்ற உணர்வும் ஏற்பட்டது.

அப்போது முறுக்கு விற்கும் பெண்மணியின் பையன் என் எதிரே வந்து அமர்ந்தான். ஒரு பெரிய்ய்ய பை நிறைய முறுக்குப் பொட்டலம் வைத்திருந்தான். விற்றுக் காலியாகக் காலியாக, அவன் அவனிடமிருந்து மேற்கொண்டு பொட்டலங்களைப் பெற்று விற்கச் சென்றார். (பத்து முறுக்கு பத்து ரூபாய்).

நான் எனது டிஜிட்டல் காமெராவில் படம் எடுத்துக்கொண்டு வருவதைக் கவனித்த அவன், காமேராவால் ஈர்க்கப்பட்டு, அதைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். என்ன விலை, எங்கே வாங்கினீர்கள், நிறையப் படம் எடுக்கலாமா? என்னைப் படம் எடுப்பீர்களா? அவன் ஆசைப்படி அவனைச் சில படங்கள் எடுத்தேன். படம் உடனே தந்துவிடுவீர்களா? இல்லை, ஊர் சென்று அனுப்புகிறேன் என்றேன். அவனைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். கார்த்திக் (கிட்டத்தட்ட ஒன்பது வயது இருக்கலாம்), "School Dropout". வாத்தியார் பெயிலாக்கிவிட்டார் என்றான். சொந்த ஊர் அரியலூர். அப்பா வளைகுடா நாட்டில் (?) வேலை (Unskilled Labour?). அம்மா முறுக்கு சுட்டு விற்கிறார். அம்மாவுக்குத் துணையாக, உதவியாக அவனும் உடன் செல்கிறான். தன முகவரியைக்கூட அவனால் சரியாகச் சொல்லமுடியவில்லை. நல்லவேளையாக, அவனது பக்கத்துவீட்டுக்காரர் அருகில் இருந்தார். அவர் சொன்னார். குறித்துக்கொண்டேன். பத்து நாட்களில் படத்தைக் கூரியரில் அனுப்புவதாகக் கூறினேன். அரியலூரில் அவன் விடைபெற்றான். (வருத்தமான செய்தி, இன்று வரை என்னால் அந்தப் படங்களை அனுப்ப முடியவில்லை. தொடர்ந்து உடல் நலக்குறைவு போன்ற பல பிரச்சினைகள். குற்ற உணர்வு இன்னும் மேலோங்குகிறது).

விருத்தாச்சலம் வருவதற்குள் ரயில் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது. இருட்டில் நெய்வேலி திறந்த வெளி நிலக்கரிச் சுரங்கங்களில் இரவு பகலாக வேலை நடப்பதைப் பார்த்தேன். பரந்த நிலப்பரப்பில், பல அடுக்குகளில், மின் விளக்கில் வேலை நடப்பதைப் பார்க்க பிரமிப்பாக இருந்தது.

கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தை இரவு எட்டு முப்பது மணியளவில் அடைந்தோம். தம்பி நெல்லை எனக்காக அன்போடு காத்திருந்தான்.

இப்பயணத்தின்போது எடுத்த ஒரு சில படங்களை மட்டும், மேலே பதிவு செய்துள்ளேன்.

கருத்துகள் இல்லை: