28 ஜூலை, 2010

அலெக்ஸ் பக்கம்-16: கைவண்ணம்-14

பிரபல  எழுத்தாளர்  கௌதம நீலாம்பரன்  அவர்கள்  நாங்கள் வருடாவருடம் நடத்தும் காரைக்குடி  புத்தகத் திருவிழாவில்  ஒரு வருடம், ஒரு நாள்  சிறப்பு  விருந்தினராக  வருகை புரிந்து, சிறப்புரையாற்றியும்,  எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.  அப்போது நண்பர் அலெக்ஸ் வரைந்த ஓவியம் இது.  கௌதம நீலாம்பரன் அவர்கள் அதைப் பாராட்டி  "நன்றி - வாழ்க வளமுடன்" என்று எழுதி தன் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.  அந்தப் படம்தான் நாம் மேலே காண்பது.  

நினைவலைகள் பின்னே ஓடுகிறது;  அன்று புத்தகத் திருவிழா நிகழ்ச்சிகள் முடிந்தபின் அவரை சிறப்புப் பேருந்தில் சென்னைக்கு வழியனுப்பக் காத்திருந்தபோது, நிறைய எண்ணங்களைப் பரிமாறிக்  கொண்டோம், குறிப்பாக ஆன்மீகச் சிந்தனைகளை. அப்போது அவர்,  "இவ்வளவு படித்திருக்கிறீர்கள், தெரிந்து வைத்திருக்கிறீர்கள்;   நீங்கள் ஏன் எழுதக் கூடாது" என்று என்னை எழுத ஊக்குவித்தார்.  அத்தோடு நில்லாமல் சென்னை திரும்பியபின் உற்சாகமூட்டிக் கடிதம் எழுதினார்.  'குங்குமச்சிமிழ்' என்ற இதழையும், இன்னொரு இதழையும் (பெயர் மறந்துவிட்டது, மன்னிக்கவும்) அனுப்பினார்.  மேலும்  நாங்கள்  புத்தகப் பிரியர்களுக்கான  கையேடு ஒன்றை வெளியிட எண்ணியிருந்த தருணம் அது.  அதற்கு 'தமிழில் வரலாற்றுப்  புதினங்கள்'  பற்றி ஒரு கண்ணோட்டமாக எழுதித் தரும்படி கேட்டிருந்தேன்.  அவர் உடனே அனுப்பி வைத்தார்.  ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அந்தக் கையேடு வராமலேயே போய்விட்டது.  அவருடைய நட்பை, அன்பைப் பற்றிக் கொள்ளாமல் நழுவ விட்டதை எண்ணி  இன்றும் வருந்துகிறேன் - சூரி 

2 கருத்துகள்:

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/அதற்கு 'தமிழில் வரலாற்றுப் புதினங்கள்' பற்றி ஒரு கண்ணோட்டமாக எழுதித் தரும்படி கேட்டிருந்தேன். அவர் உடனே அனுப்பி வைத்தார். /



அப்போது முடியவில்லை சரி! இப்போது வெளியிடலாமே, அதற்கென்ன தடை?

SURI சொன்னது…

தங்கள் வருகைக்கும், ஆலோசனைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பொறுப்புகள் கைமாறும்போது அக்கட்டுரை ஃபைல்களுடனும், பேப்பர்களுடனும் சென்றுவிட்டது. தேடிப்பெற முயல்கிறேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைத்தால் எனது இந்த வலைப்பூவில் நிச்சயம் பதிவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம். - சூரி