காலைக் கனி முகம் கண்டு இருள் விலகியது; கனவோழின்தது; கண்கள் விழித்தன; மலர்கள் பூத்தன; புல்லிசை பொங்கியது; அன்பர் பாடுகின்றனர். உலகம் அமைதிக் கோயிலாக விளங்குகிறது. அச்சமயம் கிழக்கு நோக்கித் தியானிப்போம்; அப்போது, உள்ளத்தில் அன்பு மலர்கிறது. உலகமே அன்புமயமாகக் காண்கிறது; அந்த அன்பு அமைதியிற் பூத்தது. சுற்றிலும் காணும் இயற்கை அன்புவழி காட்டுகிறது.
"அன்பு, அன்பு" என்று இளங்காற்று வீசுகிறது. "அன்பு, அன்பு" என்று நாண்மலர்கள் புன்னகை புரிகின்றன; தென்றலுக்கு மனவிருந்தளிக்கின்றன; வண்டிற்குத் தேன் விருந்தளிக்கின்றன; "அன்பு, அன்பு" என்று விழித்தெழுந்த புட்கள் சிறகடித்து, பாடிப் பறக்கின்றன; "அன்பு, அன்பு" என்று பசும்பயிர்கள் இளங்காற்றில் உளம் சிலிர்த்து அசைகின்றன. "அன்பு, அன்பு" என்று நீரோடை பாய்கிறது; தோட்டக்காரரின் ஏற்றச்சால் "அன்பு, அன்பு" என்று இறைக்கிறது. கோபாலர் குழலோசை "அன்பு, அன்பு" என்று தவழ்கிறது. குழலினும் இனிய சேய் மழலை "அன்பு, அன்பு" என்று கொஞ்சுகிறது; தாயின் உள்ளம் "அன்பு, அன்பு" என்று சேயைத் தழுவி முத்தம் இடுகிறது. காதலர் கண்கள் அன்புடன் காண்கின்றன. அடியார் அன்புள்ளம் அன்புக் கடவுளைக் கூவுகிறது; கோயில்களில் அன்பிசை முழங்குகிறது. 'செய் தொழில்' என்று அன்பு உந்துகிறது; உலகம் தொழிர்சாளையாகிறது. காதல் அன்பால் இல்லறம் உழைக்கிறது; பிழைக்கிறது. மக்கலன்பால் மன்னராம் தழைக்கிறது; நீதி செழிக்கிறது. கடவுலன்பால் அருளறம் பொழிகிறது; மடமை நலிகிறது.
எங்கும் பேச்சொலி, பாட்டொலி, வினையோலி - உலகமே ஒலிமயமாகிறது... இந்த ஒலியுலகை மேற்பார்க்க அதோ கதிரவன் வருகிறான்; அன்புக் கதிர்களால் உலகை ஆசீர்வதித்து வருகிறான். அவனை உலகம் ஆவலாக வரவேற்கிறது. அவனுக்காகச் சாந்தி தோத்திரங்கள் நடக்கின்றன. இருளிற் குவிந்த தாமரை முகை அவிழ்ந்து நகை குலுங்க அவனை வரவேற்கிறது. நீலவானில் மௌனச் சாட்சியாக அவன் செல்லுகிறான். செல்லும்போதே பயிர்களையும், உயிர்களையும் வாழ்த்துகிறான்; இயல்பாக உலகைச் சிற்பமயமாக்குகிறான். கோடை வெயில் போருக்க முடியவில்லை; அதோ, சோலை நிழல் நம்மை அழைக்கிறது. அங்கே அன்புக் காற்று வீசுகிறது; மரங்கள் அன்புக்கனிகள் தருகின்றன. தம் கனிகளைத் தாமே உண்ணாது உலகிற்கு ஊட்டும் இந்த மரக் கருணையை என்னென்பது! வறண்ட கோடை; பயிர்கள் வானை நோக்கி வாடுகின்றன. "இதோ வந்துவிட்டேன்" என்று வானத் தாய் அன்பு முழங்குகிறாள். கார் மேகங்கள் படலம் படலமாகக் குவிகின்றன. அன்பு மழை பொழிகிறது; பயிர் செழிக்கிறது. வானின் அன்பை உலகே வளர்க்கிறது. மாலையில் பொன்மயமான அன்புனகை குலுங்கி அவன் மறைகிறான்; அவனுக்குப் பின் ஆயிரம் அன்புக் காட்சிகள் காண்கின்றன. அந்தி மல்லிகையின் உள்ளத்தைப் பாருங்கள்! அன்புப் புன்னகை மணக்கிறது; வானை இருள் மூடுகிறது; அந்த இருளில் எத்தனை இந்திரா ஜாலங்கள் நடக்கின்றன! வானத்தில் கோடி கோடி அன்பு மலர்கள் மிளிர்கின்றன. "பாருங்கள் அன்பு, அன்பு" என்று அவை இமைத்து நம்மை அழைக்கின்றன! அன்புனகை பளிச்சிட்டு மின்னல்கள் தாவுகின்றன. "அஞ்சாதே; இதோ நான் இருக்கிறேன்" என்று அன்புத் தந்தையொருவர் நமக்குத் துணிவு சொல்லுகிறார்.
வெள்ளி அன்னம் போலச் சந்திரன் தவழ்ந்து வருகிறான்; அன்பு நிலா பொழிகிறான். குமுதம் மகிழ்கிறது. கடல் ஆசைவேரியேரி "ஆ! என் அன்பே" என்று ஆர்க்கிறது! நமது அன்புள்ளம் வெண்ணிலாவுடன் கூடிக் குழைகிறது. எத்தனை, எத்தனை அன்புக் காட்சிகள் நம்மைச் சுற்றி விளையாடுகின்றன! வான், மீன், கதிர், மதி, தீ, காற்று, கடல், மலை, அருவி, வயல், வனம், பயிர், உயிர் எல்லாம் இந்த எல்லையற்ற அன்பு நாடகத்தின் பாத்திரங்களேயாம். இந்த அன்பு நாடகத்தில் நாமும் பாய்த்திரரே; நமது வேடத்தை அன்புடன் அன்பிற்காக நடிப்போம்; இயற்கையிர் காணும் இந்த அன்பே வாழ்வு, வாழும் வகை, வாழ்வின் இரகசியம்; இந்த அன்பே வேதங்களின் உள்ளம்; இந்த அன்பே இறைவனை அடையும் வழியுமாம்.
தவயோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் எழுதிய அன்புவழி என்னும் நூலிலிருந்து. (அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி மாவட்டம், 1941 )
1 கருத்து:
God is Love ..Love is God Latest Tamil Newspaper
கருத்துரையிடுக