நேற்று (12 .2 .11) கோவில்களுக்குச் சென்றுவிட்டு, கம்பன் மணி மண்டபம் போய்ச் சேரும்போது மதியம் பன்னிரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. முகப்பில் மாணவர்களுக்கான போட்டி நடத்திவிட்டு அமர்ந்திருந்த நாச்சியப்பன் தம்பதிகளைப் பார்த்தேன். அவர்கள் என்னை அன்புடன் வரவேற்றனர். திருமதி தேவி நாச்சியப்பன், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் புதல்வி. சிறிது நேரம் அவர்களிடம் அளவளாவிவிட்டு, உள்ளே சென்றேன். இந்த வருடம் புதிதாக காலச்சுவடு, உயிர்மை மற்றும் தினமணி ஸ்டால்களைக் கண்டேன். மிகச் சிறப்பாக இருந்தது மதுரை மீனாக்ஷி பதிப்பகத்தாரின் ஸ்டால். அற்புதமான பல புத்தகங்கள். சுந்தர ராமசாமி அவர்களது ஜே.ஜே.சில குறிப்புகள் மற்றும் அவர்களது அனைத்துப் படைப்புகளுமே இருந்தன. ஆனால் புத்தகங்களின் விலைதான் அச்சுறுத்துவதாக இருந்தது.
என்னுடைய பிரச்சினை என்னவென்றால் ஏற்கனவே வாங்கிவைத்திருக்கும் புத்தகங்களை நான் குடியிருக்கும் வாடகை வீட்டில் வைக்க இடமில்லாது, புளி மூட்டை போன்று மூட்டை கட்டி பரண்மேல் போட்டிருந்தேன். அவற்றை எடுப்பதோ, படிப்பதோ அல்லது எந்த மூட்டையில் எந்தப் புத்தகம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதோ மிக மிகச் சிரமம். அடுத்து புத்தகம் படிக்கும் போதே என்னையும் அறியாமல் கண்கள் சொருக, தூக்கம் வருகிறது. முதுமையின் தாக்கத்தை உணர்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக ஓய்வு பெற்றபின், மாத வருமானம் குறைய, விலைவாசியும், செலவுகளும் கன்னாபின்னாவென்று எகிற, ஒவ்வொரு பைசாவையும் எண்ணி செலவழிக்க வேண்டிய நிலை. என் போன்ற புத்தகப் பிரியர்களுக்கு இவை பெரிய தண்டனைதாம். இனி புத்தகம் வாங்குவதென்றால் பழைய புத்தகக் கடைகளைத்தான் நாடவேண்டும் போலிருக்கிறது.
எனினும் வெறும் கையேடு திரும்ப மனமில்லாது காலச்சுவடு கடையில் பழைய இதழ்கள் பத்து ரூபாய் வீதம் ஆறு இதழ்கள் வாங்கினேன். அதேபோல் உயிர்மை கடையில் ஒரு பழைய இதழ் மட்டுமே இருந்தது. அவர்கள் ஆண்டு வாரியாக பைண்ட் செய்து வைத்திருந்த பழைய இதழ்களின் தொகுப்பு ஒன்று இரு நூறு ரூபாய். பின்னால் பார்த்துக் கொள்வோம் என்று விட்டுவிட்டேன்.
மணிவாசகர் பதிப்பகம் ஸ்டாலில் முனைவர் வெற்றி மெய்யப்பன் அவர்களது திருவுருவப்படம் என்னை வரவேற்றது. காரைக்குடியில் முதல்முதலாக புத்தகத் திருவிழா நடத்த பிரயத்தனப் பட்டபோது அமைப்புக் குழுவின் தலைவர் பொறுப்பேற்று, முழு ஆதரவையும் நல்கி, மற்றும் பல வகைகளிலும் பேருதவி புரிந்த அவரை அன்போடும், நன்றி உணர்வோடும் நினைத்துப் பார்த்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக அவரது செல்வாக்கும், சொல்வாக்கும் இல்லாவிடில் கம்பன் மண்டபம் கிடைத்திருக்காது. மணிவாசகர் பதிப்பகத்தில் அய்க்கண் அவர்களது நான்கு சிறுகதைத் தொகுப்புகளைப் பார்த்தேன். ஒரு தொகுப்பு ரூபாய் எழுபத்தைந்து. திருவிழா முடிவதற்குள் முன்னூறு ரூபாய்க்கு நான்கு தொகுதிகளையும் ரூபாய் முன்னூறு கொடுத்து வாங்கிவிடுவது என்று எண்ணிக் கொண்டேன்.
ஸ்ரீ இராமகிருஷ்ணா மடம் ஸ்டாலில் திருமதி காயத்திரி வெங்கடகிருஷ்ணன் அவர்களைப் பார்த்தேன். அவர்களும் என்னை அன்போடு வரவேற்றார்கள். அவரது கணவர் சிதம்பரத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் கடையைப் பார்த்துக் கொண்டு அங்கே இருப்பதாகக் கூறினார். தற்போது தமிழ்நாட்டில் எல்லா முக்கிய ஊர்களிலுமே புத்தகத் திருவிழா நடத்துவது என்பது வழக்கமாகிவிட்டது. அதனால் பல சமயங்களில் ஒரே தேதிகளில் இரண்டு ஊர்களில் புத்தகத் திருவிழா நடைபெறும் நிலை. அங்கே ஒரு பக்திப் பாடல் டிவிடி மட்டும் என்பது ரூபாய்க்கு வாங்கினேன். என்னிடம் அநேகமாக இராமகிருஷ்ணா மடத்தின் முக்கிய பதிப்புகள் அனைத்துமே இருக்கிறது.
அடுத்து தமிழ்நாடு அறிவியல் பேரவை ஸ்டாலில் நண்பர், முனைவர் கே.ரகுபதி அவர்களைப் பார்த்தேன். கருத்து ரீதியாக அவர் இடதுசாரி, இறை நம்பிக்கை இல்லாதவர்; நானோ ஒரு ஆன்மீகவாதி. எனினும் என்னிடம் அவர் மிகவும் அன்பும், மரியாதையும் காட்டுவார். அங்கே துளிர் இதழ் ஒன்று மட்டும் ஐந்து ரூபாய்க்கு வாங்கினேன்.
அடுத்து ஒரு ஸ்டாலில் உடல் நலம் பேண பல 'சார்ட்டுகள்', ஒவ்வொன்றும் ஒன்பது ரூபாய் விலையில் வைத்திருந்தார்கள். பழங்களின் சத்து மதிப்பீட்டுப் பட்டியல், காய்கறிகளின் சத்துப் பட்டியல், கீரைகளின் சத்துப் பட்டியல், நீரிழிவு நோய்க்கான உணவு முறைகள் என்று மொத்தம் ஐந்து பட்டியல்கள் ரூபாய் நாற்பத்து ஐந்திற்கு வாங்கினேன். இதற்கிடையில் நண்பர், கவிஞர் ஜனநேசன் வந்து அன்புடன் வரவேற்றார்.
இன்னொரு ஸ்டாலில் ஆங்கிலப் படங்களின் டிவிடிகள் ஒரு அற்புதமான தொகுப்பு. அவர்களின் பட்டியல் இல்லை. பொறுமையுடன் ஒவ்வொரு டிவிடியாகப் புரட்டிப் பார்க்க என்னால் முடியவில்லை. சரி, பின்னால் பார்த்துக் கொள்வோம் என்று நகர்ந்துவிட்டேன்.
மற்றபடி நிறைய குழந்தைகளுக்கான நூல்கள், தமிழ் சா ஃ ட்வேர், டிவிடிக்கள் கடைகள், வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூல்கள், ஜக்கி வாசுதேவ் அவர்களின் நூல்கள், வீடியோ டிவிடிகள், நிறைய புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல் தொகுப்புகள், தமிழ், ஆங்கில அகராதிகள் விதம் விதமாக என்று அனைவரையும் கவரும் வண்ணம் பல்லாயிரம் நூல்கள்.
மற்றபடி நிறைய குழந்தைகளுக்கான நூல்கள், தமிழ் சா ஃ ட்வேர், டிவிடிக்கள் கடைகள், வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூல்கள், ஜக்கி வாசுதேவ் அவர்களின் நூல்கள், வீடியோ டிவிடிகள், நிறைய புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல் தொகுப்புகள், தமிழ், ஆங்கில அகராதிகள் விதம் விதமாக என்று அனைவரையும் கவரும் வண்ணம் பல்லாயிரம் நூல்கள்.
எனது வலைப்பூவில் பதிவு செய்வதற்காக சில படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. (பேட்டரிகள் அதற்குள் காலை வாரிவிட்டன. சரி, மறுபடியம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நகர்ந்தேன். எடுத்த படங்களில் சில மேலே.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக