19 ஆக., 2011

மனதில் பதிந்தவை-14: குமுதம் தீராநதி, ஜூலை 2011

குமுதம் தீராநதி, ஜூலை 2011, விலை ரூ.15/- 
-----------------------------------------------------------------
மேஜை நிறைய இதழ்கள்.  நிறைய படிக்கவேண்டியியது பாக்கி இருக்கிறது.  ஏகப்பட்ட இடையூறுகள், குறுக்கீடுகள்; அப்புறம் இயலாமை, உடற்சோர்வு, மனச்சோர்வு.  எல்லாம் தள்ளிக்கொண்டே போகிறதே, காலம் ஓடிக் கொண்டேயிருக்கிறதே என்ற கவலை.  என் செய்வது?

தீராநதி வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ வாங்கியிருக்கிறேன்.  ஒவ்வொருமுறையும் இது நமக்கல்ல, விட்டுவிடலாம் என்றே தோன்றும்.  இருப்பினும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் வாஸந்தி, செயப்பிரகாசம் இவர்கள் பெயரைப் பார்க்கும்போது வாங்கலாம் என்று மறுபடியும் தொடர்கிறேன். தற்போது இந்திரன் அவர்கள் பெயரையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.  அவரது எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இந்த இதழைப் பொறுத்தவரை, ஐந்து கட்டுரைத் தொடர்கள், மூன்று கட்டுரைகள், ஐவரின்  கவிதைகள்,  ஒரு சிறுகதை, ஒரு புத்தக விமர்சனம், ஒரு நேர்காணல் என்று நிறைய இருந்தாலும், எனக்குப் பிடித்தவை குறைவே. முதலிடம், ஈழ எழுத்தாளர்  உமா வரதராஜன் அவர்களது நேர்காணலுக்கே. சந்தித்தவர் பவுத்த அய்யனார். பதினோரு சுவையான பக்கங்கள்!  மேலோட்டமாக சில இதழ்களில் அரைப் பக்கம், ஒரு பக்கம் நேர்காணல் என்ற பெயரில் வரும்போது எரிச்சலாக இருக்கும். அதைப்படித்து பெரிதாக எதுவும் தெரிந்துகொள்ள முடியாது.  ஆழமான இது போன்ற நேர்காணல்கள் அந்த எழுத்தாளரையே நேரில் சந்தித்துப் பேசிப் பழகுவது போன்ற ஒரு உணர்வைத் தருகின்றன.  (நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியிடும் 'இனிய உதயம்' மாத இதழை இதற்காகவே நான் தொடர்ந்து வாங்கிவருகிறேன்.  என்ன காரணத்தாலோ 'இனிய உதயம்' பற்றி பதிவுகள் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கின்றன.  விரைவில் பதிவேன்.)

தன் தாத்தா(உடையப்பா), தந்தை(மாணிக்கம்) ஆகியோரின் பெயரிலிருந்து முதல் எழுத்தை தன் பெயருடன் இணைத்து, உமா வரதராஜன் என்ற பெயரில் எழுதிவரும் இவர் பிறந்தது கிழக்கிலங்கையிலுள்ள பாண்டியிருப்பு என்ற கிராமத்தில், 1956-ம் வருடத்தில். சிற்றிதழ் ஆசிரியர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், சிறுகதை எழுத்தாளர் (உள்மன யாத்திரை), நாவலாசிரியர் (மூன்றாம் சிலுவை), கவிதை விமர்சகர், பத்தி எழுத்தாளர் என்று இவருக்கு பல முகங்கள் உண்டு. இலக்கியத்தில் பிரதேசவாதம், இனவாதம், தவாதம் என்பதற்கு அப்பாற்பட்டவராக தன்னை இவர் அடையாளப்-படுத்தியிருப்பது இவர்மீது எனக்கு ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நேர்காணலின் மூலம் ஈழத்தின் மற்ற படைப்பாளிகளைப்  பற்றியும் (நீலாவணன், சண்முகம் சிவலிங்கம், நுஃமான், மருதூர்க்கொத்தன், அ.யேசுராசா போன்ற பலர்)  அறிந்து கொண்டேன். 

அதிலும் குறிப்பாக சிங்கள அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ஒரு கவியரங்கில், சண்முகம் சிவலிங்கம் அவர்கள் துணிவுடன் சொன்ன ஒரு கருத்து என் மனதில் ஆழமாகப் பதிந்தது: "தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்துவிட்டு பின்னர் தேசிய ஒருமைப்பாடு பற்றிப் பேசுங்கள். உண்மையான பிரச்சினைகளைக் காண மறுத்து தீக்கோழிகளைப்  போல மண்ணுக்குள் தலையை மறைக்காதீர்கள்."

சுவையான, சிந்தனையைத் தூண்டும் பல தகவல்கள் இந்த நேர்காணலில் கண்டேன்.

அடுத்தபடியாக, எனக்கு மிகவும் பிடித்தது இந்திரன் அவர்களின் தொடரில் இந்த மாதம் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அலெக்ஸ் காபஸ் பற்றி எழுதியிருந்தது.


மூன்றாவதாக, பா.செயப்பிரகாசம் அவர்களின், "சட்டாம்பிள்ளைகளும் சமச்சீர் கல்வியும்".  இதில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள நுட்பமான உண்மைகளையும், அவை எவ்வாறு மீறப்பட்டுள்ளன என்பதுவும்  இதைப் படித்த பின்னரே அறிந்தேன். "கல்வி என்பது எழுத்துக்களைக் கற்பது அல்ல. எழுத்துக்களின் வழி பயணம் செய்து அறிவைப் பெறுவது" என்பது அவரது கருத்து. (என்னைப் பொறுத்தவரை முழு மனிதர்களை, பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்கவும், மேன்மையான சிந்தனைகளை மனதில் விதைத்து, அதன்படி வாழக் கற்றுக் கொடுப்பதும்தான் உண்மையான கல்வி.  வெறும் அறிவைத் தருவது, திறமைகளை வளர்க்க வழிகாட்டுவது மட்டுமல்ல  கல்வியின் நோக்கம். இன்றைய சமுதாயத்தில் நாம் நிறைய அறிவாளிகளைத், திறமைசாலிகளைப் பார்க்கிறோம்;  ஆனால் அவர்களில் பலரும் சுயநலத்திற்காக தங்கள் அறிவை பயன்படுத்தி, எதுவேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்-வாழலாம் என்று இருப்பதால்தான் இன்றைய சமுதாயத்தில் பல சுரண்டல்கள், அநியாயங்கள், அராஜகங்கள், அக்கிரமங்கள் மலிந்திருக்கின்றன. சுவாமி விவேகானந்தர் கூறிய மனிதர்களை உருவாக்கும் கல்வியே  (Man-making Education) இன்றையத் தேவை.)


சிந்திக்க வேண்டிய அவரது கேள்விகள் சிலவற்றை இங்கே பதிவு செய்கிறேன்: "... பொதுக் கல்வியை அரசே வழங்க வேண்டுமென்ற அரசியல் யாப்பின் கோட்பாட்டிற்கு எதிராக தனியார் கல்வியை எவ்வாறு அனுமதித்தார்கள்?  அரசியல் அமைப்புச்சட்ட அத்துமீறலைச் செய்ததோடு அல்லாமல், கல்வி வழங்கலில் நீங்களும் அரசியல் சட்டத்தைக் காலில் போட்டு மிதியுங்கள் என்று தனியார்களையும் தூண்டி அவமதிக்கச் செய்தது சரியா?... அறுபது ஆண்டுகள் கழித்து சமச்சீர் கல்வி என்று நாம் பேசுவதும், போராடுவதும், இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என்று இழுத்துக்கொண்டு போவதும், அரசியல் சட்டத்தைக் கேலி செய்வதாக இல்லையா...."

அடுத்து, ரவிக்குமாரின் சிறுகதை, "கடல்கிணறு".  இக்கதையில் சில பகுதிகளை நான் மிகவும் ரசித்தேன். அவற்றில் சில: "...நிலாவை மேகம் தின்றுகொண்டிருந்தது.... யாரோ காற்றைச் சுருட்டி எடுத்துச் சென்றுவிட்டதுபோல் இறுக்கம்.... நான் எப்போதும் தனிமையோடே சிநேகமாக இருந்தேன்... வீட்டிலிருந்து கிளம்பும்போது தனிமையும் என்னோடு பள்ளிக்குக் கிளம்பிவிடும். ...  கடலைப் பார்ப்பது சுவாரஸ்யமான விஷயம்தான். கடல் என் அம்மாவைப் போல எனக்குத் தோன்றும். அதில் இருக்கும் மீன்களை என்னைப்போல் உருவகித்துக் கொள்வேன். அவை அம்மாவை விட்டுப் பிரிவதில்லை. பிரிந்தால் அவற்றுக்கு மரணம் நிச்சயம். நிலத்தோடு ஓயாமல் உரையாடிக் கொண்டிருக்கும் கடலுக்கு சலிப்பே ஏற்படாதா? பின்வாங்கிப் போவதும், திரும்ப வந்து பேசுவதுமான இந்தப் பழக்கத்தை மனிதர்களிடமிருந்து கடல் கற்றுக்கொண்டதா அல்லது கடலிடமிருந்து மனிதர்கள் கற்றுக் கொண்டார்களா? நிலத்துக்குக் கடல் தரும் அன்பளிப்புதான் மீன்களா?...."


அடுத்து, வாசந்தியின் தொடர் கட்டுரையான 'பெற்றதும் இழந்ததும்'.  இதில் உலக வங்கியின் தலைவராக இருந்து, பெண் சபலத்தால் அவமானப்பட்டு, பதவி இழந்து, பிரஞ்சு நாட்டின் அதிபராகும் வாய்ப்பை இழந்து நிற்கும் கோடீஸ்வரரான டாமினிக் ஸ்ட்ராஸ் கான் பற்றியும், பெண்களை வெறும் போகப் பொருளாகவும், அவர்கள் தங்களை விட எல்லாவிதத்திலும் தாழ்ந்தவர்கள் என்றும், அவர்களைச் சமமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஆணாதிக்க மனப்பான்மையையும் சாடியிருப்பது ஆணினம் சிந்திக்க வேண்டிய ஒன்று.


இறுதியாக, தமிழச்சி தங்கப்பாண்டியனின் கவிதை.  நல்ல கவிதை.  ஒவ்வொரு வரியும் என் தந்தையாரை நினைக்க வைத்தது.  பொதுவாக, எனக்குக் கவிதையில் ஈடுபாடு குறைவு; தெளிவாக, எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் இல்லையென்றால் பெரும்பாலும் நான் விட்டுவிடுவேன்.  இழப்பு எனதுதான் என்பது எனக்குப் புரிகிறது.  இருப்பினும் என் செய்வது?


மொத்தத்தில் இந்த இதழ் எனக்கு நிறைவைத் தந்தது. 


நன்றி: குமுதம் தீராநதி 

2 கருத்துகள்:

nellaiappan சொன்னது…

"மனதில் பதிந்தவை" நல்லாயிருக்கு முல்லா!
man making education பற்றில் விவேகானந்தர் சொன்னவைகளை எல்லா பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி ஆசிரியர்களை படிக்கச் சொல்லி அவர்கள் மனதில் பதிந்தால் நல்லது.

SURI சொன்னது…

நன்றி, நெல்லையப்பா! நீ ஆகஸ்ட் 2011-ல் பதிவு செய்ததை நான் இப்போதுதான் பார்த்தேன். அந்த லட்சணத்தில் இருக்கிறேன்.

உன் பரிந்துரை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை. என்னடா, நம்பிக்கை இல்லாமல் பேசுகிறானே என்று நினைக்காதே. கல்வி பற்றி விவேகானந்தரின் சிந்தனைகள் பல ஆசிரியர்களுக்குத் தெரியாமலில்லை. அதிக மதிப்பெண்கள் பெறுவது,அந்த மதிப்பெண்களைக் கொண்டு அதிக ஊதியம் ஈட்டும் வேலை பெறுவதுதான் கல்வியின் நோக்கம் என்று ஆகிவிட்டது. குறிப்பாக இதுதான் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்தாக இருக்கிறது. மேற்கொண்டு நான் ஏதாவது சொன்னால் பிரச்சினையாகிவிடும்.