முன்பு சென்னைக்கு அருகில் காரப்பாக்கத்தில் இருந்தபோது, ஒரு விடுமுறை நாளில் நண்பர்கள் நாங்கள் சோழிங்கநல்லூரில் இருக்கும் ஒரு கோவிலுக்கு போகும் வழியில் ஒரு சிற்பக்கூடம் இருப்பதை பார்த்தோம். அங்கே ஆட்கள் வேலை செய்துக்கொண்டிருந்தார்கள். கூடவே கொஞ்சம் பெரிய அளவிலான சதுரம், நீள் சதுரம் இப்படி பல வகையில் கற்கள் செதுக்கப்பட்டு துண்டு துண்டாக நிறைய இருந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே போய்கொண்டிருக்கும்போது வேலி ஓரத்தில், கட்டை விரல் மடக்கி மூன்று விரல்கள் நீட்டி இருக்கும்படியான கையின் பகுதி ஒன்று பெரிய கல்லில் செதுக்கப்பட்டு இருந்தது.
அதைப் பார்த்ததும்... இதை எங்கேயோ பார்த்திருக்கிறோமே, எங்கே? என்று ஒரு விநாடி யோசித்து..... ஆஹா ! இது செய்திதாள்கள்களில் வந்திருந்த ஒரு படத்திலிருந்த உருவத்தின் கை பகுதி ஆயிற்றே !
நண்பர்கள் நாங்கள் ஓடிப்போய் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தோம். ஏனெனில், இது இனி யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கப்போகிறதல்லவா ? 1998 ல் இந்த சம்பவம் நடந்தது.
கட்டை விரலும், சுண்டு விரலும் மடங்கியிருக்க மற்ற மூன்று விரல்கள் நீண்டிருக்கும் இந்தக் கையின் பகுதி திருவள்ளுவரின் வலது கை. அந்த துண்டு துண்டு கற்கள் சிலையின் மற்ற பகுதிகள். இப்போது கன்னியாகுமரி கடலில் நிறுவப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலையைத்தான் சோழிங்கநல்லூரில் செய்துக் கொண்டிருந்தார்கள். அந்த கற்களை தொட்டுப் பார்த்து பேசி மகிழ்ந்து திரும்பினோம். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த ஒரு கொடுப்பினை என்றே கருதுகின்றேன்.
ஏற்கனவே இரண்டு முறை கன்னியாகுமரி சென்றிருந்தாலும், 2000 ல் ஐயன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட பிறகு, இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அங்கே சென்று பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நினைவுகள் வந்து போயின. அரசியல் காரணமோ அல்லது வேறு எதுவும் காரணமோ தெரியவில்லை, திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்திற்கு சென்று அருகில் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. வருத்தம். அருகிலிருக்கும் விவேகானந்தர் பாறையிலிருந்துதான் காண முடிந்தது. இப்போது நிலவரம் எப்படி என்று தெரியவில்லை.
திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளதால், திருவள்ளுவர் சிலை பீடத்திலிருந்து 133 அடி உயரம் கொண்டது. பீடம் மட்டும் 38 அடி. இது அறத்துப்பாலில் உள்ள 38 அதிகாரங்கள். திருவள்ளுவர் சிலை 95 அடி உயரம். இவை பொருட்பால் மற்றும் இன்பத்துப்பால் சேர்த்து 95 அதிகாரங்களை குறிக்கிறது. 3 டன் முதல் 8 டன் எடையுள்ள 3681 கல் துண்டுகளை கொண்ட சிலை அமைப்பின் மொத்த எடை 7000 டன். தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் ஒரு முறை இந்த கம்பீரத்தைப் பார்த்து விடுங்கள். இது தமிழின் நாடு என்ற பெருமிதத்தை உணரலாம்.
இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் திருவள்ளுவர் சிலை பாறை மாதிரி அப்படியே இருக்கும். முழுவதும் கருங்கற்களால் அனதுதானே ! படேல் சிலை காங்கிரிட்டில் அமைக்கப்பட்டது. 100 வருடங்கள் என்று மதிப்பிடப்படுகிறது.
சர்தார் வல்லபாய் படேல் சிலை இந்திய ஒற்றுமைக்கான சிலை என்றால்,
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்'
ஐயன் திருவள்ளுவர் சிலை உலக ஒற்றுமைக்கான சிலை என்று தயங்காது சொல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக