28 ஜன., 2020

வரலாற்றின் கொடூரமான பக்கங்கள் : அவுஸ்விச் (AUSCHWITZ CONCENTRATION CAMP)

மானுட குல வரலாற்றில் திகிலூட்டும் ஒரே பெயர் “ ஆஷ்விச்”…இரண்டாம் உலகப்போரில் போலந்தில் நாஜிக்கள் யூதர்களை கொன்று குவிப்பதற்கு தேர்ந்தெடுத்த இடம் ஆஷ்விச்…

நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டுக் கொல்வது, சாவப்போவதற்கு முன் யூதர்களையே சவக்குழியை தோண்ட வைப்பது, விஷவாயுக்கிடங்கில் நுழைவதற்கு முன் குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து அனுப்பியது, ஆயிரம் கன்னிப்பெண்களை ஒரே நேரத்தில் பலாத்காரம் செய்து கொன்றது, வகைவகையான ரசாயனங்கள் மூலம் கொன்றது, சிம்பொனி இசையை ஆயிரம் டெசிபலில் அலறவிட்டு கொன்றது, பட்டினிப்போட்டு கொன்றது,  என இட்லர் நாஜிப்படைகளின் கொலைக் கலை நடுநடுங்க வைக்கும்…

இந்தப்போரில் 75 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள்….இதில் 15 லட்சம் பச்சிளம் குழந்தைகள்….ஆஷ்விச்சில் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 20 லட்சம்…

இதே நாளில் ஸ்டாலின் சோவியத் ருஷ்யா ராணுவம் ஆஷ்விச்சில் நுழைந்து கைப்பற்றி எஞ்சி இருந்தவர்களை காப்பாற்றியது…இந்த நாள் ஆஷ்விச் நினைவுநாளாக உலகமுழுவதும் நினைவுக்கூறப்படுகிறது…இன்று 75 வது ஆண்டு நினைவு தினம்.

நாஜிகளின் கொலைவெறித் தாண்டவம் மற்றும் ஆஷ்விச் படுகொலைகள் பற்றி எண்ணற்ற நூல்கள், திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் இருவரின் படைப்புகள் மிக முக்கியமானவை…யூதரான ப்ரைமோ லெவி விஷவாயுக்கிடங்கின் வாயிலில் அவர் ஒரு விஞ்ஞானி என அறிந்து அவரை நாஜிக்கள் ரசாயன தொழிற்சாலைக்கு அனுப்பினார்கள். அதாவது யூதர்களை கொல்வதற்கு வகைவகையான ரசாயனங்களை கண்டுபிடிக்க அவரை நியமித்தனர். பின்னாளில் மன உளைச்சலில் புனைவுகள்/அ-புனைவுகளை அபாராமாக எழுதி, மன அழுத்தத்தில் 70 வயதில் தன்னை மாய்த்துக் கொண்டவர்.

பல திரைப்படங்கள் வெளிவந்தாலும் ரோமன் போலன்ஸ்கியின் The Pianist என்ற திரைப்படம் பார்க்க நெஞ்சுரம் தேவை. கலவரமூட்டும் படம்…

ஆஷ்விச் கொலைகளை பார்த்த ஃப்ராங்பர்ட் மார்க்சிய சிந்தனைப்பள்ளியின் முக்கிய சிந்தனையாளர் அடார்னோ, "இனிமேல் கவிதை சாத்தியமில்லை" என அறிவித்தார்.

வக்கிரம், வன்மம், காழ்ப்பு, பகை, வெறுப்பின் சின்னமாக ஆஷ்விச் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது…

இந்தப்புகைப்படத்தின் பின்புலம் கண்கலங்க வைக்கும்…இளம் யூத தம்பதிகளை கொல்லப்படுவதற்கு  முன் அவர்கள் விரல்களில் அணிந்திருந்த wedding rings….ஒவ்வொரு வளையத்திற்கும் பின் எவ்வளவு அற்புதமான கனவுகள் இருந்திருக்கும்….

நன்றி : திரு வாசுதேவன் 

கருத்துகள் இல்லை: